Monday, July 22, 2013

வாழ்தல் என்பது

பூக்களைக் கிள்ளாது
ரசித்துப் பார்

பட்டாம்பூச்சிகளின் படபடப்பில்
கண்கள் விரிந்த
ஆச்சர்யம்

நீரில் குதிக்கும்
மீன்களின் துள்ளலில்
உற்சாகம்

பூச்சிகளை
நசுக்காத மனம்வேண்டும்;
அவைகளின் விதி முடிக்காதே

நட்சத்திர இரவுகளையும்
மறந்துவிடாதே

புயல்களில் தப்பித்தல்தான்
வாழ்க்கையல்ல;
மழையில் நடனமிடுதலும்
வாழ்க்கைதான்...!

Wednesday, July 17, 2013

உனது வீடு செல்



மௌனத்தால் கிழித்துவிடு
உனது
வார்த்தைகளின்
முகத்திரையை,

அடிக்கடி உன்னைவிட்டுத்
தப்பித்து ஓடாதே

கண்ணீரிலிருந்து
புன்னகைக்குள்
குதித்துவிடு

நாளைக்குக் கூட
காலை வரும்
நீயும் விடியலாம்...!

Tuesday, July 16, 2013

அந்தி வரும் நேரம்

அடிவானச் சிவப்பின்
நிறம்தேய
மடல்மூடும் வானம்

கதவுதிறக்கிறது
கனவு நகரம்

நட்சத்திரப் பொன்மணிகள்
ஒளியூட்ட
நடைவருவாள்
நிலவு மகள்...!

Sunday, July 14, 2013

அவள் தேவதை

அந்தக் கைகள்
குளிர்மையாய்
மென்மையாய்
பின்தோள்களில்
படர்ந்து
ஊன்றிக்கொண்டன

மூச்சின் ஸ்பரிசம்
காதுகளைத் தீண்டின

இப்பொழுது 
என் தோள்களில்
பற்கள் 

கூச்சம்

திரும்பிக்கொண்டேன்...

அது என்ன பார்வை?

மிரட்சியா?

சிரிக்கிறாள்...!

மெல்ல நடந்து
தாய்மடியில்
இருக்கிறாள்
மறுபடி சிரிக்கிறாள்
அவள் தேவதை!



Thursday, July 4, 2013

நிலவு இல்லாத இரவுகள்

இரவில்
வெகுநேரம்வரை
நாம் மௌனத்தில்
பேசிக்கொள்வது பிடித்திருக்கிறது,

உன் இசையின்
பாடல்கள்
எனக்குள் மழையாகிப் 
பொழிகின்றன

எனது எண்ணங்கள்
ஒவ்வொன்றும்
தீயாகி எரியும்போது
நாமும் அதனுள்
எரிந்துபோகிறோம்

மலைகளில் பயணித்த
எனக்கு
இந்தப் பள்ளத்தாக்குகள்
மலைப்பாகவே இருக்கின்றன

நமது ஆன்மாக்கள்
ஒன்றாய் வேடிக்கைபார்த்த
சில சண்டைகள்
அடிக்கடி
நினைவில் வருகின்றன

புலராத ஒரு பொழுதில்
சிவப்பாய்த் திலகமிடக்
காத்திருக்கிறது
காலம்

அதுவரை
இந்தக் கவிதைகள்
நமக்கிடையே
காற்றாய் நிரம்பியிருக்கட்டும்

- சுரேந்திரகுமார்


Popular Posts