Thursday, April 17, 2014

பயணம்

பயணித்தல் என்பது வாழ்வின் எந்த நிலையிலும் கிடைத்துக் கொண்டேயிருக்க வேண்டிய அற்புதமான அனுபவங்களிலொன்று. இந்த உலகின் அறியப்படாத பூகோள ஆச்சரியங்களின் எல்லைகள் விஷ்தீரணமானது. அந்த எல்லைகள் நோக்கிய தேடல் ஒரு பயணத்துடன் விரிவடைகிறது.

ஒரு ஊரை நோக்கிய பயணத்தின் முடிவிலும் சுவாரஷ்யமானது அந்த ஊரிற்கான பயணம்.

பயணித்தலுக்கான எனது ஆர்வம் பெருந்தாகமாகி ஒரு பயணத்துக்கான தயார்படுத்தலை என் மனதிடம் முன்வைத்துக் கொண்டேயிருக்கும். எப்போதும் போகாத ஒரு ஊரிற்கு பயணப்படுகிறதில் உள்ள சந்தோஷம் ஒரு புதிய நண்பனை அடைந்து கொள்ளும் சந்தோஷத்தைப் போன்றது. பயணங்கள் தருகிற உற்சாகங்கள், மகிழ்ச்சிகள், சலிப்புகள் ஏமாற்றங்கள் என்பதற்கப்பால் அவை மனதில் பதிந்து வைக்கிற சுவாரஷ்யமான கதைகளிற்காக அந்த அனுபவங்களை எப்போதும் நேசிக்கிறேன். ஒரு நாட்டிற்குள்ளே வௌ;வேறு கலாச்சாரப் பின்னணிகளோடு வாழ்கிற மக்களை அவர்களின் வாழ்வியலை ஒரு வீதியில் பயணிக்கிறபோது மேம்போக்காக பார்த்துக்கொண்டு வேகமாகக் கடக்கிற அனுபவத்தை ரசித்திருக்கிறேன். அது ஒரு ஆழமான  பார்வையல்லாததாயினும், அந்த சில நொடிகளில் கடந்து போகும்போது போகிறபோக்கில் மனதில் சில ஓவியங்களை வரைந்துவிட்டுப் போகின்றன.

சில பஸ் பயணங்களும், ரயில் பயணங்களும் மனதிற்குள் கவிதைகளையோ அல்லது சுவாரஷ்யமான கதைகளையோ எழுதிவிட்டுப்போகின்றன. இவையெல்லாவற்றையும் விட கால்கடுக்க நடந்து கடக்கிற தருண அனுபவங்களுக்கு ஈடாய் வேறொன்றும் இருப்பதில்லை.

தனிமையான பயணங்களில் இசை ஓர் அற்புதமான துணை. இளையராஜாவை அழைத்துப் போகிற பயணங்கள் தருணங்களின் தொகுப்பாக இனிமையான ஞாபகக்குறிப்பொன்றை எழுத வைக்கின்றன. ஐ-பொட்டுடன் பயணம் செய்தல் ஒன்று அந்தப் பயணத்தை ரசிக்க உதவும், இரண்டு பஸ்ஸில் போடுகிற ரணகளப் பாடல்களிலிருந்து தப்பிக்க உதவும்.

ஒருமுறை கண்டிக்கு அப்பால் இருக்கும் சிங்களக் கிராமத்திற்குத் தனியாகப் பயணம் செய்யவேண்டிய நிலமை. முன்பின் போயிராத ஊரிற்குப் பயணப்படுகிறேன். யாழ்ப்பாணத்திலிருந்து பின்னேரம் புறப்பட்ட பேருந்து கண்டியை அடையும்போது இரவாகியிருந்து. அங்கிருந்து அந்தக் கிராமத்திற்குப் போவதற்காக இன்னொரு பஸ்ஸைப் பிடித்து ஏறிப் பயணப்படுகிறேன். நான் இறங்க வேண்டிய இடத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. பக்கத்திலிருப்பவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவரிற்குத் தமிழும் புரியவில்லை, பேசிய ஆங்கிலமும் உதவவில்லை. அந்தச் சகோதர இனத்தவர் சிங்களத்தில் ஏதோ சொல்கிறார், எனக்கு ஒன்றும் புரியவில்லை. பஸ்ஸில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். உதவிக்கு யாரும் இருப்பதாய் தோன்றவில்லை. நடத்துனருக்கும் தமிழ் சுத்தம் என்பது டிக்கெட் எடுக்கும்போதே தெரிந்திருந்தது. என்ன செய்வது? மனது பதட்டமடையத் தொடங்குகிறது.

திடீரென்று ஒருவரின் செல்பேசியில் பாட்டொன்று ஒலிக்கிறது....

'உசிரே போகுது உசிரே போகுது உதட்ட நீ கொஞ்சம் சுளிக்கயில...'

நிம்மதி.

ஒவ்வொரு பயணங்களும் ஒரு கதையைத்தானும் சொல்லிவிட்டே விடைபெறுகின்றன. இரண்டாயிருத்து நான்காம் ஆண்டுகளில் தொழில்நிமித்தமாய் அடிக்கடி கொழும்பு போய்வரும்போது பல சுவாரஷ்யமான

மனிதர்களுடன் பயணிக்கிற சுவராஷ்ய அனுபவங்கள் வாய்த்திருக்கின்றன. ஒருமுறை ஜேர்மனிய கப்பல் கப்டனான ஒரு தமிழர் மானிப்பாயில் இருக்கும் தனது நண்பன் ஒருவரின் மகளின் திருமணத்தில்

கலந்துகொண்டுவிட்டு கொழும்பு திரும்பிக்கொண்டிருக்கிறார். அவருடைய பக்கத்து இருக்கையில் நான் அமர்ந்து பயணிக்கிறேன். அவர் ஒரு கப்பல் கப்டன் என்பது பஸ் புறப்பட்டு இரண்டு
மணித்தியாலங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏனென்றால் அதுவரை நான் அவருடன் பேச்சுக் கொடுக்கவில்லை, அவரும்தான். நான் சுஜாதாவின் ஒரு நாவலில் மூழ்கிப்போயிருக்கும்போது அவர் என் கவனத்தைக் கலைக்கிறார். மேற்கொண்டு சுஜாதாவின் நாவலிலும் சுவராஷ்யமான அவரின் கதையுடன் என் பயணம் கழிகிறது.

ஒரு கப்பல் கப்டனுக்குரிய சிறப்பான தோற்றம். வெண்தாடி, ஆறடி உயரம். அவருடைய பேச்சில் அவருடைய ஆளுமையை வெளிப்படுத்துகிறார்.

இருபதுகளின் தொடக்க வயதுகளில் இருந்த எனக்கு அவருடன் ஒரு எல்லைக்கு மேல் கேள்வி கேட்க முடியவில்லை. இருந்தாலும் என்னுடைய அசட்டுத்தனமான கேள்விகளுக்கெல்லாம் மனிதர் பொறுமையாய் பதிலளித்தார். நான் அவருடைய அனுபவங்களைக் கேட்டறிந்துகொண்டேன். கப்பல் பயணங்களின் சுவாரஷ்யங்கள், அபாயங்கள் எல்லாவற்றையும் கேட்டறிந்து கொண்டேன். மின்னஞ்சல் முகவரிகளைப் பரிமாறிக் கொண்டு விடைபெற்றோம்.

சமீபமாய் ஒரு நீண்ட பயணம். அலுத்துப்போன யாழ்-கொழும்பு பஸ் பயணங்கள் போன்றல்லாது, இந்தமுறை யாழிலிருந்து நுவரெலியாவிற்கான எனது பஸ் பயணம் வித்தியாசமான அனுபவங்களை மனதில் எழுதிவைத்துப் போனது. அங்கு நின்ற நாள் முழுதும் கமராவுடன் பஸ்ஸில் சுற்றுவதும், அழகான இடங்கள் கண்டு இறங்கி நடப்பதும, ஷொட்டுகள் எடுப்பதுமாய் மிகுந்த சுவராஷ்யமாய் பொழுதுகள் கழிந்தன.

அங்கொருநாள் தனியாக அதிகாலைப் பனிக்குளிரில் பஸ் ஏறி படம் எடுக்க கமராவுடன் பயணப்படுகையில், ஒய்யாரமாய் மலையோரத்தில் தூங்கிக் கிடக்கிறாள் கிரிகரி ஏரி. நான் இறங்கி நடக்கிறேன்.






அத்தனை அழகு. வழமையாய் பார்த்த இரவுகளிலும், பகல்களிலுமில்லாத அழகுடன் இந்தக் காலையில் மயக்கும் அழகுடன் அங்கு அந்த ஏரி,

பின்னணியில் பனியில் உறைந்தும் உறையாமலுமாய் மலைகள். மலைகளின் அழகையெல்லாம் தன்மேல் ஓவியமாய் வரைந்துவிட்டு அழகு காட்டுகிறது கிரிகரி. அதன் நிழல்களையெல்லாம் நான்
சிறைப்படுத்திக்கொண்டிருந்தேன்.

ஒருவர் அருகில் நடந்துவந்துகொண்டிருந்தார், அந்த ஊர்வாசி. சுருட்டுப் புகைத்துக்கொண்டிருந்தார். புகையுடன் பனிப்புகாரையும் சேர்ந்து ஊதும்போது அழகாய் இருந்தது. ஒரு போர்ட்ரைட் நடந்து வருகிறதே,

எடடா எடடா என்று மனசு சொல்கிறது, என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருக்க, அவர் என்னைக் கடந்து போய்விடுகிறார். ஆயிரத்தியொராவது ஷொடடும்; நழுவிப்போகிறது.

இந்தத் தயக்கங்களாலேயே லான்ட்ஸ்கேப் ஷொட்டுகளாய் மட்டும் நிறைந்துகிடக்கிறது Suren Photographyபேஜ். மனிதர்களை புகைப்படங்களாக்கும்போது எப்படி? அவர்களை நெருங்கி அனுமதி

கேட்கிறீர்கள்? அல்லது கேட்காமலேயே எடுக்கிறீர்களா? (புகைப்படம் எடுக்கும் நண்பர்களின் ஆலோசனை தேவை.)



'ஏன் அங்கை போறம்?'

எங்கடை வீட்டிலை இனி இருக்ககக்கூடாதெண்டு ஆர்மி எழுப்பிப் போட்டாங்கள்'

1989 ஆம் ஆண்டு எங்களது முதல் இடப்பெயர்வு. காரணம் இந்திய அமைதிப்படை.

எனது முதலாம் ஆண்டில் முதல் நாள் வகுப்பு ஞாபகங்கள், முதல் கிளாஸ் எடுத்த வில்லியம்ஸ் மிஸ். பக்கத்து டெஸ்க் நண்பன் பிரியதர்சன், இதைத் தவிர இன்னும் ஞாபகத்தில் இருப்பது இந்த
முதலாவது இடப்பெயர்வுதான்.

அந்தப் பிஞ்சுக்கால்களுடன் நடந்த பின்னால், பதினெட்டு வயதில் ஏ.எல் படிக்கும்வரை இந்த இடப்பெயர்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருந்தன. இடப்பெயர்வுகளின் வேதனைமிகுந்த கதைகளின் பக்கங்களுடன் ஊர் ஊராய் சுற்றும் ஒருவிதமான நாடோடித்தனமான வாழ்க்கை முறை எனக்குப் பிடித்திருந்தது.

சில பல மாதங்கள், வருடங்கள் என்று சொந்த ஊரிலிருந்து விலகி வேறொரு ஊரில், அந்த ஊர் வாழ்க்கை முறைகளைப் பழகி வாழ்கிற நிர்ப்பந்தம், இயல்பானதொரு வழக்கமாகிப் போனது. இருக்கும் இடங்களிலெல்லாம் நண்பர்கள் சேர்ந்துகொண்டார்கள். ஊரின் இண்டு இடுக்கெல்லாம் நுழைந்து பார்க்கும் சுவாரஷ்யம், எங்களுடன் இடம்பெயர்கிற பாடசாலை வாழ்க்கை, அல்லது அந்த ஊர்ப்பாடசாலை, அங்கு ஒரு நண்பர் கூட்டம், கூட எதிரிகள் கூட்டம் என எல்லாம் கிடைத்தது அந்த நாட்களில்தான்.

தொண்ணூற்றைந்துகளின் பிற்பகுதி. ரகுமான் பாடல்களில் பித்துக்கொள்கிற ஒரு தலைமுறை ரசிகர்கள் உருவான பருவம் அது எங்களுடையதுதான்.

முப்பது வருட காலப் போராட்ட வாழ்க்கை, பயணங்கள் தொடர்ந்து வந்தன. பயணங்களின் தடங்கள் மட்டும் இன்னும் நினைவில் பதிந்துபோய்க் கிடக்கின்றன.

ஹைவே பார்க்கலாம்.

ஆறு மாநிலங்கள், அனில் மெஹ்ராவின் கமரா ஒரு பயணியின் பார்வையில் அள்ளி வருகிற ஒவ்வொரு விதமான லான்ட்ஸ்கேப் அழகுகள், அலியா பட்டின் அந்தத் துடிப்பான நடிப்பு. எல்லாவற்றிற்கும்

ஆன்மாவாய் ரகுமானின் இசை இவையெல்லாம் இந்த சினிமாவில் கிடைக்கிற நல்லவிதமான அனுபவங்கள்.

இறுதியாய் நுழைகிற காஷ்மீரில், அழகு கொஞ்சும் மலைகளின் பின்னணியில், ஓர் குடிசையில் மலர்போலப் பூக்கிறது காதல். அழகு!

பெரிய சைஸ் லொஜிக் ஓட்டைகளுடன் அமைக்கப்பட்ட திரைக்கதைதான் இருந்தும் ஏதோ ஓர் ஈர்ப்பு படத்தில் இருக்கிறது.



ஒரு வாழ்க்கை ஒரு பயணம், பெயர் தெரியா ஊரிற்கு வழி தெரியாது போகிற பயணம்.

ஒரு பயணத்தின் அனுபவத்தைக் கடக்கிறபோது இன்னொருமுறை சிலிர்க்கிறது, ஒவ்வொரு கணமும் புதிய உணர்வின் திக்குகளில் மோதிச் சிதறிப்போகிறது. இந்த வாழ்க்கை என்னிடம் சலிக்காது சொல்லிக்கொண்டிருக்கிறது,

'நீ அடிக்கடி நழுவிப் போகாதே' என்று.

ஓர் உயிர்ப்புள்ள அனுபவத்தை இழக்க வைக்கிற நினைவுகளையெல்லாம் ஒதுக்கிவிட்டுத் திரும்பும்போது, அங்கு வாழ்க்கை இருக்கும்!

ஆம் நிகழ்காலத்தில் பயணப்படு என்பதைத் தவிர பெறுமதியான போதனைகளெதுவும் இந்த உலகில் இல்லை.

வாழ்க்கை ஒரு பயணம்.



Thursday, February 27, 2014

மிர்தாதின் புத்தகம் - எனது புத்தக அலுமாரியில் ஓர் வைரம்

"Love is the law of God. You live that you may learn to love. You love that you may learn to live. No other lesson is required of Man"
How much more infinite a sea is man? Be not so childish as to measure him from head to foot and think you have found his borders."

- Mikha'il Na'ima

ஒரு புத்தகம், அது எதிர்பாராமல் எனக்குக் கிடைக்கிறது. அந்தப் புத்தகம் உலகிலுள்ள புத்கங்களிலேயே மேன்மையானது எனப்படுகிறது. அன்புச் சகோதரர்கள் இரோஷன் , கனிஷ் கர் இருவரும் எனது திருமணத்திற்கான பரிசாக அந்தப் புத்தகத்தை அளித்திருந்தார்கள்.

அதன் மூலம் மிகெல் நைமியால் எழுதப்பட்டது. தமிழில் புவியரசு மொழிபெயர்த்திருக்கிறார்.

அந்தப் புத்தகத்தின் பெயர் 'மிர்தாதின் புத்தகம்'  - The Book of Mirdad

புத்தகமென்பது அதில் இருக்கும் விடயப்பரப்பைத் தாண்டி அது கொடுக்கும் அனுபவத்தில்தான் முக்கியத்துவம் பெறுகிறது என நினைப்பவன் நான். இந்தப் புத்தகம் அதன் வாசிப்பு அனுபவத்தின் பின்னர் என்னை நெடு நேரம் உறைய வைத்துவிடுகிறது. கிடைக்கும் நேரத்தில் ஒரு அத்தியாயத்தைத்தானும் முழுமையாகப் படித்துவிடுவேன். அந்த அனுபவத்தின் பின்னர் நான் சந்திக்கிற ஒவ்வொரு கணங்களும் எனக்கு எல்லையற்ற ஆனந்தத்தை அளிக்கிறது. அது எந்தக் காரணமும் அற்ற ஆனந்தம்.

மதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, உங்களை ஒரு முறை உடைத்துப் பார்த்துவிடுங்கள். இங்கு மிர்தாத்தின் தெறிக்கும் வசனங்கள் உங்களைப் பலமுறை உடைத்துவிடும் என்பது திண்ணம்.

புவியரசு அந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்துப் தனது முன்னுரையில்  வாசக அனுபவங்களையும் மொழிபெயர்ப்பு அனுபவங்களையும் கூறுகிறார், அதனை வாசிக்கும்போதே ஆர்வ மிகுதியால் கண்கள் வார்த்தைகள் மேல் தாவத் தொடங்கியது.

ஞானத்தின்பால் நாட்டமுடையவர்களிற்கு இந்தப் புத்தகம் பெரும் கொடையாக இருக்கும். இதை ஒரு நாவல் என்று கூறலாம். அல்லது ஒரு தத்துவப் புத்தகம் என்றும் சொல்லலாம். இதை ஓர் நாவலாகப் பார்ப்பதோ அல்லது தத்துவப் புத்தகமாகப் பார்ப்பதோ அவரவரின் பக்குவநிலையைப் பொறுத்தது.

புத்தகம் பற்றி ஓஷோ கூறியிருப்பது:
உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களையும்விட, மேலோங்கி உயர்ந்து நிற்பது 'மிர்தாதின் புத்தகம்' மட்டுமே.

படிக்கும்போது, உங்கள் மனம் தியானநிலையில் இல்லையென்றால், அது ஒரு நாவல் படிப்பதுபோல ஆகிவிடும்.

'வெற்றி பெறும் ஏக்கம் கொண்டவர்களுக்கு இது, ஒரு கலங்கரை விளக்கமும், ஒரு கடற்கரையும் ஆகும்.மற்ற அனைவருக்கும் இது ஓர் எச்சரிக்கை'

இவ்வாறு மிகெல் நைமி ஒரு எச்சரிக்கையுடன் பயணத்திற்கான பாதையில் நம்மை அழைத்துச் செல்கிறார். உண்மையில் அது ஒரு பயணத்துடன்தான் தொடங்குகிறது.

ஆதி வெள்ளப்பெருக்கின் பின்னால் உயிர்தப்பியவர்களுடன் மிதந்துபோன பேழை கரை ஒதுங்கிய இடமான பலிபீடச் சிகரத்தை நோக்கிய ஒருவனின் பயணமே அது. அந்த ஒருவன் நாமாக இருக்கிறோம். அவன் தனது பயணத்தை வழமைக்கு மாறாய் மலையின் ஆபத்தான செங்குத்துப் பாதையில் அமைத்துக்கொள்கிறான். பலிபீடச் சிகரத்தை அடையும் வரை வழியில் அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் சிலிர்ப்படைய வைக்கின்றன. அங்கு சந்திக்கும் ஒவ்வொருவிதமான மனிதர்களும் அவர்களின் வார்த்தைகளும்
அற்புதமானவை.

மிகெல் நைமி கலீல் ஜிப்ரானின் உயிர்த்தோழன். ஜிப்ரான் மொத்தமாக 99புத்கதங்கள் எழுதியிருக்கிறார். அவருடன் கூடவே வாழ்ந்த மிகெல் நைமி ஒரே ஒரு புத்தகத்தை எழுதி இந்த உலகத்திடம் கொடுத்துவிடுகிறார். அந்த ஒரு புத்தகமே எல்லாவற்றிற்கும் விடையாக அமைகிறது.

புத்தகத்தின் நாயகனான மிர்தாத் தூவும் வார்த்தைகள் எல்லாம் அற்புதம். ஆன்மீக நாட்டமுடையவர்களிற்கு அதன் பொருள் தெளிவாய் விளங்கக்கூடும்.

புத்தகத்தின் முதற்பகுதி பலிபீடச் சிகரத்தை நோக்கிப் பயணிக்கும் ஒருவனின் அனுபவங்களைச் சொல்கிறது, அந்தச் சிகரத்தில் ஒரு மடாலயம் இருக்கிறது. அங்கே ஒன்பது துறவிகள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு ஒன்பது துறவிகள் மாத்திரமே இருக்க வேண்டும். ஒருவர் இறந்துவிட்டால் இறைவன் தகுந்த ஆளை அனுப்பி வைப்பான் என்பது நம்பிக்கை.

அப்படி ஒருவர் இறந்தபோது, மிர்தாத் அங்கே வந்து சேர்கிறார். அவரை அங்கே இருக்கும் மூத்த துறவி சமாதம் வேலைக்காரனாக மட்டும் அனுமதிக்கிறார். ஏழு ஆண்டுகளாக மிர்தாத் மௌனக் கோலம் பூண்டுகொள்கிறார். ஏழு ஆண்டுகளின் பின்னால் அவரைத் துறவியாக மூத்த துறவி ஏற்றுக்கொள்கிறார். மிர்தாத் மௌனம் கலைந்து பேசத் தொடங்குகிறார். அவரது பேச்சுக்களையும், நிகழ்வுகளையும் அங்குள்ள இளம் துறவியான நரோண்டா பதிவு செய்கிறார்.

அந்தப் பதிவேடுதான், 'மிர்தாதின் புத்தகம்'

"முன்வாசல் வழியாகவே உள்ளே செல்லுங்கள்..." என்ற அறிவுரைக்கேற்ப முதலிலிருந்தே வாசிக்கவேண்டும். இல்லாவிடின் புத்கத்தின் முழுப்பயனையும் இழக்க நேரிடும்.

ஒரு ஞானப்புதையலான இந்தப் புத்தகத்திலிருந்து பளிச்சிடும் முத்துக்கள்.

'சிறந்த பேச்சு, ஒரு நேர்மையான பொய்
மோசமான மௌனம், ஒரு நிர்வாண உண்மை'

'வாழ்வதற்காகச் செத்துப்போ!
சாவதற்காக வாழ்ந்திரு!'

' அன்புக்கு பரிசுகள் தேவை இல்லை. அன்பே அன்பின் பரிசு '

'நான் என்பது ஒரு நீரூற்று. அந்த மூலத்திலிருந்துதான், எல்லாமும் பொங்கி வருகின்றன. மறுபடியும் அவை, அதற்குள் சென்றுதான் ஒடுங்குகின்றன. நீரூற்று எப்படியோ, அப்படித்தான் வெள்ளப்பெருக்கமும், பாய்ச்சலும்'

"உங்களது உள்ளுணர்வுக்கு ஏற்றபடியே உங்களது 'நான்' அமைந்திருக்கும். உங்கள் 'நான்' எப்படிப்பட்டதோ, உங்கள் உலகமும் அப்படிப்பட்டதே. உங்கள் 'நான்' தெளிவாகவும், உறுதியான பொருள் கொண்டதாகவும் இருந்தால், உங்கள் உலகமும், தெளிவாகவும், உறுதியான அர்த்தம் கொண்டதாகவும் இருக்கும்."

"இறைவன், 'நான்' என்று சொல்லும்போது, சொல்லப்படாதது எதுவுமே மிச்சம் மீதி இல்லை. "

"மனிதன், கடவுளின் பிள்ளையல்லாமல் வேறென்ன? அவன் கடவுளைவிட வேறாகத்தான் இருக்கமுடியுமா? ஒரு வித்துக்குள்ளே தேக்குமரம் ஒடுங்கியிருக்கவில்லையா? "

"கடவுளைப் போவே மனிதனும் ஒரு படைப்பாளி. 'நான்' என்பதே அவனது படைப்பு."

"உங்கள் கண்களில் தோன்றம் ஒளி, உங்களது ஒளி மட்டுமல்ல. கதிரொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அனைவரின் ஒளியும் அதுதான்."

"உங்கள் கனவுகள், உங்களுடையவை மட்டுமல்ல. உங்கள் கனவுகளில், பிரபஞ்சமே கனவு காண்கிறது."

"கடவுள் பல அல்ல, கடவுள் ஒன்றுதான், மனிதரின் நிழல்கள் பலவாக இருக்கும் வரை அது பலதான். நிழல் இல்லாதவன், ஒளியில் இருப்பவன், நிழல் அற்றவனே ஒன்றே கடவுள் என்பதை உணர்வான் கடவுளே ஒளிதான், ஒளியால் தான் ஒளியை உணரமுடியும்"


மிர்தாதின் புத்தகம் நம்மை அழைத்துச் செல்லும் உலகம் வேறு. அந்தப் புத்தகத்திற்கான வாசிப்பு அனுபவமே ஒரு தியானத்திற்கு நிகரானது. அதன் முடிவும் முடிவற்ற

பல்லாயிரம் கேள்விகளுக்கான விடையாகவும் அமைகிறது.

ஒருவரும் தம் வாழ்வில் தவறவிடக்கூடாத புத்தகம். எனது புத்தக அலுமாரியில் இது ஓர் வைரமாய் ஜொலிக்கிறது. பரிசளித்த இரோஷன், கனிஷ்கர் இருவருக்கும் எனது நன்றிகளைச் சொல்லிக்கொள்கிறேன்.

Popular Posts