Tuesday, June 29, 2010

18 வயசுல




நம் ஒவ்வொருவரது வாழ்க்கையின் ஞாபகப் பதிவுகளில் இன்னும் பசுமையாக இருக்கின்றது "18 வயது’… பருவத்தின் விளிம்பில் மன அலைகள் கட்டுக்கடங்காமல் கரைபுரண்டோடும்… காதல் துளிர்விடும் நட்பு பலம்பெறும் எதுவும் அழகாய்த் தெரியும்… பார்க்கும் யாவும் கவிதையாகும்,உதடுகளில் உதிர்ந்து விழும் பாடல் வரிகள்… பூக்கள்,நிலவு,காற்று கடற்கரை இவைகளைப் பொறுமையாய் ரசிக்கும் மனம்… பா.விஜயின் ‘18 வயது’ நமது ஞாபங்களையும் மீட்டிப்போகிறது இங்கே….

18 வயசுல

கொலுசு உன் கால்களோடு
போய்விட்டது
சத்தம் மட்டும் என் காதுகளோடே
வருகிறது

எண்ணெய் அப்பிய
ரெட்டை ஜடையில் சிக்கி
வழுக்குது
மல்லிகைப் பூவும் என் மனசும்…

பெரிய தலைகாணிக்கு போட்ட
சின்ன தலைகாணி
உறை போல்உன் உடை

பாஸாக வேண்டும் என்று
கோயில் சுவற்றில்
இருவருமே பேர் எழுதினோம்.
நீ மட்டும் பாஸானாய்
சாமி கூட உன்னை மட்டும்தான் பார்க்கிறது

கம்பெனி சைக்கிளில் போகும் உனை
வாடகை சைக்கிளில் தொடர்வேன்
உன்னை சமீபிக்கையில்
அறுந்து போகும்செயினும் என் தைரியமும்

பேச முடிவதேகொஞ்ச நேரம்தான்
வெட்கத்தை வீட்டிலேயே
வைத்துவிட்டு வரக்கூடாதா?

குனிந்தபடி கிணற்றில் நீ
தண்ணீர் மொண்டு போய்விடுவாய்
வாளியில் தொங்கிக் கொண்டிருக்கும்
திருட்டுத்தனமாய் சிந்திய புன்னகை

ரோஸ் ஐஸ் சாப்பிட்டு
வாய் சிவக்க நிற்பாய்
நிறமாற்ற விதி என்பது
இயற்பியல் அல்லஇதழியல்
சின்ன வயசில்
நிறையசிலேட்டு குச்சிகளை முழுங்குவேனாம்
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம் உன்னைப்பற்றி எழுதத்தானோ?

உன் தலையில்
ஊர்ந்துஉன்னைக் கடிப்பது
பேன்களாக இருக்காது
வண்டுகளாகத்தான் இருக்கும்

கோடை விடுமுறைக்கு நீ
ஊருக்குப் போகையில்
நான் பள்ளிக்கூடம் போவேன்
உன்னைப் பற்றி படிக்க

மளிகைக் கடையில்
அரைக்கிலோ சிரித்தபடி
கால்கிலோ சக்கரை வாங்குவாய்
கடைக்காரனோ ஒருகிலோ உருகுவான்

உன் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு
நடைவண்டியில்
நடக்கக் கற்றுக் கொடுத்தாய்
நடந்து கொண்டிருந்த என்னை
தத்தித் தவழ செய்துவிட்டாய்

கோலம் போடும் முன்
வாசலில் தண்ணீர் தெளிக்கிறாயே
உன் அடர்த்தியான அருகாமையில்
பூமி தீப்பற்றக் கொள்ளக்கூடாதென்றா?

விலை மதிக்க முடியாத
உன் உதட்டின் உஷ்ணத்தை
ஐம்பது பைசா பலூனுக்குள்
ஊதி வைக்கிறாயே

அக்கா சேலையைக் கட்டிக்கொண்டு
அண்ணன்காரனுடன் நீ
கோயிலுக்குப் போகையில்
மாமனாகிறது மனசு

கருப்பு மணிகோர்த்துப்
போட்டுக் கொண்டிருக்கும்
வெள்ளரிக் கனி நீ

உடைத்துத் தேங்காயைப்
பற்களில் கடித்து
நீ செய்த பல்வெட்டுக்கள்
தேங்காய்க்குத் தந்த கல்வெட்டுக்கள்

காதைப் பிடித்து
திருகுவது நீ என்பதால்
வானொலி கூட ஆனந்தமாய்
வாய்ப்பாட்டே பாடுகிறது

பாண்டி ஆட்டத்தில்
வானத்தைப் பார்த்துக்கொண்டே
கோடு தாண்டுவாய்
உன்னைப் பார்த்துக் கொண்டே நான்
ரோடு தாண்டுவேன்

தூக்கணாங் குருவிக் கூட்டை
ஆச்சர்யமாய் பார்த்தாய்
உள்ளிருந்த குருவிகள்
உன்னை ஆச்சர்யமாய் பார்த்தன…
அதிசயங்கள் ஒன்றையொன்று பார்த்து
அதிசயித்துக் கொள்வது
அதிசயமில்லை தானே!

துணி துவைக்கும் போது
சோப்பு நுரையைக்
கையில் அள்ளி ஊதி விடுவாய்
நாலாபுறமும் நுரை தெறிக்கும்
காற்றுக்கும் எனக்கும் உடல் சிலிர்க்கும்

நீ தலைவாரும் சீப்பிலிருந்த
கேசத்தை எடுத்து புத்தகத்தில் வைத்தேன்
மயிலிறகு குட்டிபோடும் என்றால்
உன் மயிர் இறகு போடாதா?

கொல்லைப் புறத்தில் மண்சுவர் கட்ட
உன்னை மண்குழைத்து மிதிக்க விட்டிருந்தார்கள்
நீ மிதித்த மண்ணில்
கட்டப்படும் சுவர்
மண்சுவர் அல்ல
பொன்சுவர்

ஆற்றுத் தண்ணீரில் நீ
வெள்ளை வெளேர் கால்களை வைத்ததுமே
ஆம்பிளை மீன்கள் எல்லாம்
ஆளாகிவிட்டன

வெள்ளிக் கிழமையானால்
அரசமரத்து விநாயகருக்கு
அகல்விளக்கு போடுவாய்
விநாயகருக்கும் எனக்கும்
வெள்ளிக்கிழமை வெளிச்ச நாள்

வடகம் காயப்போட்டு விட்டு
காக்கா ஒட்டிக்கொண்டிருந்தாய்
நீ ஓட்டும் அழகைக் காணவே
காகங்கள் வந்து குவிந்தன

முற்றத்திலிருந்த துளசி மாடத்தை
நீ சுற்றிவரும் போது
மாடத்துக்கடியில் அதன் வேர்கள்
மத்தளம் கொட்டிக்கொண்டது

முள்குத்திய இடத்தில்
கள்ளிப் பால் வைத்தாய்
உன் கண் குத்தியதற்காய்
நான்கள்ளிப்பால் வைக்க ஆரம்பித்தால்
அதில் குளித்தால் தான் ஆறும்

ஓவியப் போட்டியில்
பாரதியார் படம் நீ வரைந்திருப்பாய்
பாரதியார் அதைப் பார்த்திருந்தால்
தன் முண்டாசைக் கழற்றி
உன் தலைக்குக் கட்டிவிட்டிருப்பார்.

தினசரி உன் வீட்டு வாசலில்
கோலங்கள் தான் போடுகிறாயா?
இல்லை
பாத ஸ்பரிசங்களை சேமித்த நிலம்
ஒவ்வொரு காலையிலும்
அதைவெளிப்படுத்துகிறதா?

கொஞ்சம் உப்புக்கரிக்கிறதுஎன்பதால்
மதியம் நீ சாப்பிடவில்லையாம்
உப்பு சத்தியாக்கிரகம் என்பதுஇதுதானோ!

கொலைக் கருவிகளின் பட்டியலில்
நீ கால்களில் அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம்

நீண்ட நேரம் நின்று
கண்ணாடியில் முகம் பார்க்காதே
கண்ணாடியின் உள்நாடிஆடிவிடப் போகிறது

குட்டி ஆட்டைப் பார்த்தால்
ஹை என்பாய்
உன்னைப் பார்த்தால்
குட்டி ஆடு மே என்னும்
மே என்பது ஆட்டு மொழியில்
ஹை தானே

பழைய பேப்பர் பையனுக்கும்
ஏன் புதிய புன்னகை போடுகிறாய்
அரிசி புடைக்கும்
உன் அம்மாவுக்குத்தெரியுமா?
மகள்புருவ அசைவிலேயே
இதயத்தைபுடைத்து எடுப்பாள் என்று

புறாக்காலில் கடிதம் கட்டிவிடும்
சங்ககால ஆசை சிறகடிக்கிறது
கண்ணில்ஆனால்
சூப்பாகி விடுவோமா
புறாவும் நானும்?

பறவைகளின் மொழி கூடபுரிந்து விடும்-
ஆனால் உன்பார்வைகளின்
மொழிபுரிவது கடினம்
ஐந்து மணி அடித்ததும்
கண்களை விழிக்கிறாயா?
அல்லது நீ கண்களை விழித்ததும்தான்
ஐந்து மணி அடிக்கிறதா

நீ காது குடைவதற்காகத்தானே
இறகு வளர்க்கின்றன
இள மைனாக்கள்

டீக்கடையில் - உன்
பத்தாங்கிளாஸ் நோட்டுப்புத்தகம்
பஜ்ஜி மடிக்க வந்திருந்தது
அதைப் படிப்பதற்காகவே
நோட்டுப் புத்தகம் தீரும்வரை
பஜ்ஜிகள் வாங்கக் கொண்டிருந்தேன்

தீக்குச்சியை கொளுத்தி விட்டு
தீப்பெட்டி சும்மாயிருப்பது மாதிரித்தான்
என்னைப் படுத்திவிட்டு
இளிக்கிறாய் நீ

உன் கூந்தல் சிலுவையில்
அறையப்படும்மல்லிகைப் பூக்கள்
மறுநாள் மரிப்பதில்லை
உயிர்த்தெழுகின்றன

புதுசாய் ஓவியம் வரைபவன்
மாதிரியேபுதுசாய் காதலிப்பவனும்
எங்கே ஆரம்பிப்பது என்பதுதெரிவதில்லை

சும்மா இருக்கும் நேரத்தில்
வயர் கூடை பின்னுகிறாய்
உன்னைப் பற்றி யோசிப்பதால்
நான் சும்மாவே இருப்பதில்லை

சிலந்தி நூலை விட மெல்லிய
உன் கேசத்திற்குள் புகும்
சாம்பிராணி புகையை
சுவாசிக்கவாவது
உன் கணவனாக வேண்டும்

ஆட்டுக்கு முள் குத்தினால்
அச்சச்சோ என்கிறாய்
என் ஹாட்டுக்குள் முள் குத்துதே
ஏன் அமைதியாய் செல்கிறாய்?

வாழைமரத் தண்டைப் பார்த்துவிட்டு
வளவளப்பாய் இருக்கிறது என்றாய்
உன் முதுகைப் பார்க்க
பாவம் முடியாதே உன்னால்

தினம் ஒரு முறையாவது
துணிகாயப்போட
மொட்டை மாடிக்கு வந்து
காய்ந்து நிற்கும் என் மனசை
நனைக்கக் கூடாதா?

உலகத்தில்
கவிஞர்களும் பைத்தியங்களும்
உருவாக்கப்படுகிறார்கள் போல
உன்னைப் பார்த்து இரண்டுமாய் நான்

பூஜை நேரம் ஆனால்
கோயில் மணி அடிக்கிறது
நீ வரும் நேரம் ஆனால்
என் இதயத்தில் பூஜை நடக்கிறது


மிகுதி அடுத்த பதிவில்….

5 comments:

தனி காட்டு ராஜா said...

பா.விஜயின் ‘18 வயது’ -அருமையோ அருமை ...பகிர்வுக்கு நன்றி

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக மிக அருமை......

வாழ்த்துக்கள்

THARMIKA said...
This comment has been removed by the author.
THARMIKA said...

எண்ணெய் அப்பிய
ரெட்டை ஜடையில் சிக்கி
வழுக்குது
மல்லிகைப் பூவும் என் மனசும்…
that is பா.விஜய்
nice

Unknown said...

நன்றி நன்றி நன்றி.... எல்லாப் புகழும் விஜயிற்கே!!!

Popular Posts