Sunday, October 27, 2013

ஒரு கப்பல் பயணமும் சூரியனும்

எனக்கு அப்போது ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். அப்பாவின் சைக்கிள் முன்பாரில் அமர்ந்திருந்தேன். நாங்கள் மட்டுவில் அம்மன் திருவிழாவுக்குப் போய்க்கொண்டிருந்தோம். காலை மலருகின்ற வேளை. பங்குனி மாதத்துப்பனிக் காற்று மேனியில் மோதிச் சிலிர்க்க வைத்தது. ஹாண்டில் பாரில் ஏறிய குளிர் அதில் பற்றியிருந்த எனது கைகள் வழியே உடலுக்குள் ஊடுருவியது. நாங்கள் கைதடிப் பாலத்தின் மேலே போய்க்கொண்டிருந்தோம்.

அப்போது நான் கண்ட காட்சி எனது வாழ்நாளில் முதன்முறையானது. நதியில் குளித்து எழும் ஆதவன் வானில் மிதந்துபோக நான் வாய்பிளந்து பார்த்திருந்தேன். அப்பா சைக்கிளை ஓரமாய் நிறுத்தினார். என்னை இறக்கிவிட்டார். நான் ஓடிப்போய்ப் பாலத்தின் கட்டுகளைப் பிடித்தவாறு அந்தக் காட்சியில் லயித்திருந்தேன். அன்று கண்ட அந்த அழகான காட்சி எனது ஒவ்வொரு ஓவியப் பரீட்சைகளிலும் காலைக் காட்சியைத் தெரிவு செய்துவரைய வேண்டும் என்ற பைத்தியக்காரத்தனத்தை எனக்குள்ளே விதைத்தது.

எங்கள் ஊரின் பின்னால் இருக்கும் வயல்வெளிகளைக் கடந்து, அதற்கும் அப்பால் இருக்கும் சம்பு வயல்களையும் கடந்தபின்னால் தொண்டமானாறு நோக்கி ஓடும் உப்பு ஏரியைக் காணலாம். அங்கிருந்து பார்க்கும்போது சூரிய உதயத்தைத் தெளிவாகப் பார்க்கலாம்.

சிறிய வயதுகளில் பார்த்த காட்சிகள் மனதில் ஓட. அதைக் கமராவில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் கமராவுடன் புறப்பட்டுவிட்டேன். அதிகாலையில் வயல்வரம்புகளில் நடந்துபோவது அத்தனை சுகமாக இருந்தது. பறவைகள் ஒலியெழுப்பிப் பறக்கையில் அவைகளில் உற்சாகம் எனக்குள்ளும் தொற்றிக்கொண்டது.

போட்டோகிராபேர்ஸ் சூரியன் முதன்முiறாய் பூமிக்குத் தரிசனம் கொடுக்கும் அந்தக் கணத்தை magical moment என்று அழைப்பார்கள். அண்மையில் ஒரு வீடியோ பாரத்தேன். அதில் அந்த போட்டோகிராபர் ரிப்பொட்டில் கமராவைப் பொருத்தி அந்த மஜிக்கல் மூமன்டிற்காகக் காத்திருப்பார். அலைகள் புரளும் கடலுக்குள் இருந்து அழகாய் சூரியன் மேல் நோக்கி மிதந்து போகும் காட்சியைப் படாமாக்குவார். என்னிடம் ரிப்பொட் இல்லை. லோ டைட்டில் ஷட்டர் ஸ்பீடைக்குறைக்கும்போது கமரா ஷேக் ஆகி ஷொட்டுகள் பாழாகிவிடும் ஆபத்து இருக்கிறது. அதனால் ரிப்பொட் பயன்படுத்தி எடுப்பதே ஷொட்டுகளுக்கு ஆரோக்கியமானது.

கொஞ்சம் தாமதித்தாலும், இவ்வளவு தூரம் நடந்து வந்ததற்குப் பிரயோசனம் இல்லாமல் போய்விடும் என்பதால் மெதுவாய் ஓடத்தொடங்கினேன். அப்போது யாரோ என்னைத் தொடர்வதாய் ஒரு பிரம்மை, திடுக்கிட்டுத் திரும்பினேன்.

எங்கள் வீட்டு நாய்க்குட்டி!

செல்லம என்பின்னாலேயே வந்து கொண்டிருக்கிறது.

எரியின் ஒருமுனையில் காத்திருந்தேன், அற்புதமான கணத்திற்காக!

அங்கே எதிர்பார்க்காத ஒரு கணத்தில் சிவப்பாய், கால்வட்டமாய் ஏரிக்கு அப்பால் இருக்கும் மரங்களின் பின்னணியில் உதித்தான் ஆதவன். கொஞ்சம் கொஞ்சமாய் மேலெழுந்து வருகையில் நான் ஷொட்டுகளை வெறித்தனமாக எடுத்துக்கொண்டிருந்தேன்.

எத்தனை கோடிப்பேர் எத்தனை விதமாய் அந்தக் காட்சியை சுட்டுத்தள்ளியிருப்பார்கள், எனக்கு இந்த அனுபவம் புதிது!


மெல்லிருள் விலக
ஒரு சித்தனின் தவம் கலைகிறது

நதியில் குளித்து எழுந்த அவன்
புற்களில் பனித்துளி
உண்டு பசி தீர்ப்பான்

போர்வையை விலக்கிய வானத்தில்
நீலமும் மஞ்சளுமாய் பரவிக்கிடக்க
அங்கங்கே சிவப்பும் 
அப்பிக்கிடக்கிறது!



ஒரு கப்பல் அனுபவம்

ஒருமுறை காங்கேசன்துறையிலிருந்து( கே.கே.எஸ்)
திருகோணமலை வரை கப்பலில் பயணம். 1997ஆம் ஆண்டு. நான் அப்போது ரொம்பச் சின்னப் பொடியன். அதிகாலையில் யாழிலிருந்து  கே.கே.எஸ் வரை போய்ச்சேரவே பின்னேரம் ஆகிவிட்டது. பாதுகாப்பு வலயம் என்ற பெயரால் ஆயிரத்தெட்டுக்  கெடுபிடிகள்.

முதன்முதலில் கப்பல் பயணம். 'தாரகி' அந்தக் கப்பலின் பெயர். சிறிய கப்பல்தான். அதனுடன் பெரிய சரக்குக் கப்பல்களும் பயணிகளை ஏற்றி இறக்கும் சேவையை  அப்போது செய்துகொண்டிருந்தன.

இது பயணிகள் கப்பல் என்பதால், நல்ல வசதிகளுடன் இருந்தது. ஹார்பரில் இருந்து கப்பலுக்குள் நுழையும்போது அத்தனை உற்சாகம். அதே ஆண்டில்தான் டைட்டானிக்  என்னும் பிரமாண்ட கப்பலைப்பார்த்து வியந்துபோய் இருந்தேன். அந்தப் படத்தில் ஜக்கும் அவனுடைய நண்பனும் கப்பலிற்குள் ஏறி நின்று உற்சாகமாய் கத்தும் காட்சி மனதுக்குள் வந்துபோனது.

எல்லோரும் இருக்கைகளிற்கு அடிபட்டுக்கொண்டார்கள். கிடைக்காதவர்கள் கீழே அமர்ந்துகொண்டார்கள். நான் கப்பலின்  பின்தளத்திற்குப் போய்ப்பார்த்தேன். அங்கே பல்கனி கபின் அமைந்திருந்தது. அங்கே போடபட்டடிருந்த இருக்கைகளிலொன்றில் அமர்ந்துகொண்டேன்.

அப்போதுதான் என் கண் முன்னே விரிந்தது அந்த அழகான காட்சி.

அழகான சூரிய அஸ்தமனம் !

சூரியன் செந்நிறமாகிப் பெரிதாய் காட்சி தந்துகொண்டிருந்தான். நான் ஓடிப்போய் பல்கனித் தடுப்புக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு அந்தக் காட்சியை  பார்த்துக்கொண்டிருந்தேன். நான் நின்ற அந்த பல்கனிக் கபினை 'சன்செட் கபினட்' என்று அழைப்பார்கள் என்று பின்னர் தெரிந்துகொண்டேன்.

திடீரென் இருள் சூழந்துகொண்டது. விளக்குள் போடப்பட்டன.

கப்பல் புறப்பட்டுவிட்டது. சிறிய கப்பல் என்பதால் துள்ளும் அலைகளின் நடுவே கப்பலும் உயர்ந்து தாழ்ந்து பயணித்துக் கொண்டிருந்தது. அது ஊஞ்சல் ஆடுவதைப் போன்ற  ஒரு அனுபவத்தை எனக்குள் தந்துகொண்டிருந்தது. அலைகள் மேவும் கடலிற்குள் சூரியன் குபுக்கென்று மூழ்கிப்போனான்.

கப்பல் தந்த இதமான ஆட்டம் போகப்போகப் பேயாட்டமானது. எனக்கு வயிற்றைப் பிசைந்தது. நான் அம்மா இருந்த இடத்திற்குப் போவோம் என்று வெளிக்கிட்டு இரண்டு அடி  வைத்ததும் தடுமாறி விழுந்துபோனேன். என்னைப் போன்று நடந்து தொபுக்கடீர் என்று ஒவ்வொருவராய் பலன்ஸ் தவறி விழ. கப்பல் சிப்பந்திகள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனார்கள்.

தொடர்ந்துவந்த இரவோ பயங்கரமாக இருந்தது. எல்லோருக்கும் சொப்பிங் பாக் கொடுக்கப்பட்டன. விளக்குகள் அணைக்கப்பட்டன. எல்லோரும் அவர் அவர் இடங்களில் படுத்துக்கொண்டார்கள்.

கப்பல் அந்தரத்தில் மிதப்பதாயும், பின்னர் தொபுக்கடீர் என்று கடலில் விழுவதாயும் உணர்வு. எனக்கு குடலைப் பிரட்டிக்கொண்டு வாந்தி வந்தது. எல்லோரும் எடுத்தார்கள்.

'அம்மாளாச்சி கடலை அவியச்செய்யம்மா' எனக்குப் பக்கத்தில் ஒரு வயதான அம்மா குரலெடுத்துக் கத்த எனக்கு அந்த ரணகளத்திலும் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

அதிகாலையில் திருகோணமலை துறைமுகத்துக்குள் கப்பல் நுழைந்தது. நான் கப்பலின் பின்பகுதியில் இருந்த சன்செட் கபினற்றிற்குப் போனேன். திருகோணமலை துறைமுகம் உலகப்பிரசித்தமானது. அது ஒரு இயற்கையான துறைமுகம்.

காலை புலர்ந்துகொண்டிருக்கையில் அதன் எழில் கொஞ்சும் அழகு வியப்புடன் பார்த்தேன். இந்தமுறை முந்தைய தினம் போல் இன்னொரு ஆச்சர்யம் காத்திருந்தது.

அங்கே ஒரு அழகான சூர்யோதயம்!

கடலுக்குள் இருந்து ஆதவன் சிவப்பாய் எழுந்தான். ஒரு கப்பலுக்குள் இருந்து பார்க்கும் சூர்யோதயம் அத்தனை அழகானது. ஒரு சூர்ய அஸ்தமனத்தையும் பின்னர் ஒரு  சூர்யோதயத்தையும் கண்டுகளித்த அந்த அழகான நாட்கள் என் நினைவுகளுக்குள் இன்னும் உயர்ப்புடன் இருக்கிறது.

எனக்கு அந்தக் கப்பல் பயணம் தந்த அழகான அனுபவத்தை மீண்டும் அனுபவிக்க மனம் ஏங்குகிறது. அப்போது சிறுவனாய் இருந்தேன், இப்போது வளர்ந்தவனாய், கையில்  கமராவுடன் கப்பலில் பயணிக்கும் ஆசை மனசுக்குள் வந்துவிட்டது. பார்ப்போம் எப்போது அந்தக் கொடுப்பினை எனக்குக் கிடைக்கப்போகிறதென்று.



உலகின் அழகான சூர்யோதயங்கள் இங்கே தோன்றுகின்றன

எங்களது வாழ்நாளின் ஒவ்வொரு நாட்களும் ஒரு அழகான சூர்யோதயத்தோடுதான் தொடங்குகிறது. இந்த இடங்களிலெல்லாம் அழகான சூர்யோதயத்தைக் காண முடியும் என்கிறார்கள்.

1. The Taj Mahal | Agra, India
2. Surfers Paradise | Gold Coast, Australia
3.Grand Canyon | Arizona
4. Easter Island | Chile
5. Great Pyramids | Egypt

6. Great Wall of China | China

Popular Posts