Monday, October 25, 2010

ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்......

ஹைக்கூ என்கிற ஜப்பானிய கவி வடிவம் உலகப் பிரசித்தமானது.தமிழில் ஏராளம் ஹைக்கூக்கள் எழுதப்படுகின்றன… அழகிய மூன்று வரிக்கவிதைதான் ஹைக்கூ! அது வானவில் போன்றது..அதன் கண நேர அனுபவத்தைப் படிப்பவர்களுடன் பகிர்ந்துகொள்கிறது.

பெரும்பாலும் தமிழில் எழுதப்படும் ஹைக்கூக்கள்; அதன் அடையாளத்தைத் தொலைத்துவிட்டனவாகவே உள்ளன.அதற்காக உண்மையான ஹைக்கூ என்பது இதுதான் என்று நானே அதை நீட்டி முழங்காமல் சுஜாதாவின் ‘ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்’ நூலைத் துணைக்கழைக்கிறேன்.(மேலே எழுதிய ஹைக்கூக்கள் என்னுடைய சிறிய முயற்சி)

இனி சுஜாதாவினுடைய விளக்கத்திற்கு வருவோம்….

நள்ளிரவில்
தூரத்தில் ஒரு கதவு
இழுத்து சாத்தப்பட்டது.

மேலே குறித்த மூன்று வரிகளைப் படித்ததும் உங்கள் மனதில் எழுந்த நினைவுகள் என்ன? உடனே பார்க்கும்போது இந்த மூன்று வரிகள் ஒரு நிகழ்ச்சியை விவரிக்கும் வெறும் வரிகள்தாம்.ஆனால் சற்றே சிந்திக்கையில் இதன் பரிமாணங்கள் விரிவதை கவனிக்க முடியும்.நள்ளிரவு இந்த வரிகளை எழுதியவன் விழித்திருக்க வேண்டும்.அவன் தனிமை வெளிப்படுகிறது.அவனுக்கு ஏன் தூக்கம் வரவில்லை? கவலையா? தனிமையா? உடல் நலமில்லையா? ஏன் விழித்திருக்கிறான்.எங்கே விழித்திருக்கிறான்.நகரத்திலா… கிராமத்திலா? நகரத்தில் இருக்க முடியாது அத்தனை நிசப்தம்.நகரத்தில் ஏது?அத்தனை நிசப்பதம்? தூரத்தில் கதவு சாத்துவதைக் கேட்க முடியும் சப்தம். அந்த சப்தத்தின் அர்த்தம் என்ன…? அந்த வேளைக்கு வீட்டுக்கு வந்தது யார்? ஒரு தகப்பனா? ஒரு மனைவியா? ஒரு மகனா? வயசுக்கு வந்த பெண்ணா…? அல்லது யாராவது கோபத்தில் வீட்டைவிட்டு வெளியே செல்கிறார்களா?

மூன்றே மூன்று வரிகள்.அவை ஏற்படுத்தும் சலனங்கள் எத்தனை பாருங்கள்.ஒஸாகி ஹோஸாய் என்கிற நவீன ஜப்பானிய கவிஞரின் ஹைக்கூ இது.

உங்கள் சிந்தனை என்னும் ஜலப்பரப்பில் எறியப்படும் சிறிய கல் ஹைக்கூ.
நம் தின வாழ்வில் ஆச்சரியகரமான வசீகரமான பரவசமான சோகமான கணங்கள் பலப்பல உள்ளன.காலை நடந்து செல்லும்போது குட்டி நாய் உன்று உங்களைப் பார்த்து வாலாட்டுகிறது.அல்லது ஜன்னல் வழியாக ஒரு குழந்தை எட்டிப் பாரத்துச் சிரித்துவிட்டு டாட்டா காட்டுகிறது.பஸ்ஸில் ஒரு இளம் பெண் உங்களை அதிகப்படியாகப் பார்க்கிறாள்.முற்றிலும் அன்னியர் ஒருவர் ஓடிவந்து பஸ் கிடைத்த சந்தோஷத்தில் உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார்.திடீர் என்று காய்ந்த சருகுகளை குப்பைத் தொட்டியில் போட்டுக் கொளுத்தும்போது மூக்கில் படரும் வாசனை உங்களுக்குப் பிடித்திருக்கிறது.அலுவலகத்து மாடிப்படியில் ஒருவருடன் மோதாமல் தப்பிக்கிறீர்கள்.அல்லது மோதிக்கொண்டு லேசாக நெற்றியில் வலிக்க தடவிக்கொள்கிறீர்கள்.இவ்வாறு எத்தனை கணங்கள் ! உன்னதக் கணங்கள்! சின்ன சின்ன இன்ப துன்பங்களை நமக்கு இறைவன் பரிசுப் பொருட்கள் போல தினம் தினம் கிடைக்கின்றன.

ஹைக்கூ எழுதுவதும் படிப்பதும் இவ்வகையான கணங்களை மற்றவருடன் பகிர்ந்துகொள்வதுதான்.அனுபவம் உணர்வு இரண்டையும் பிறருக்கு தர முயல்வதுதான் ஹைக்கூ.

சொல்லப் போனால் கலை இலக்கியம் எல்லாவற்றுக்குமே இதுதான் குறிக்கோள்.கலைஞனும் கவிஞனும் தமக்குக் கிடைத்த அனுபவங்களை வரைந்தோ,எழுதியோ மற்றவர்களுக்குச் சொல்வதுதான்… அந்த அனுபவ வார்ப்புக்கள் சில சமயம் நேரடியாக இருக்கின்றன;சில சமயம் மறைமுகமாக உயிர் வாழ்தலில் உள்ள சிலிர்ப்புக் கணங்களை உன்னதங்களை நாம் எத்தனையோ முறை கண்களில் வெளிப்படுத்துகிறோம்.விளையாட்டு வீரன் வெற்றி பெறும்போது துள்ளிக் குதிக்கிறான்.அல்லது கையை உயர்த்தி வானில் குத்துகிறான்.வியப்பில் புருவங்களை உயர்த்துவது சட்டென்று வாய் திறப்பது,அட என்று வியப்பது,கை தட்டுவது போன்ற அத்தனையும் ஒரு உன்னதக் கணத்தை சந்தித்ததன் வெளிப்பாடுகள்தான்.இவைகளில் ஹைக்கூவும் ஒன்று.
ஹைக்கூ என்பது ஜப்பானிய வார்த்தை.இப்போது சர்வதேச வார்த்தையாகி அத்தனை அகராதிகளிலும் இடம்பெற்றுவிட்டது.அதனால் இந்த வார்த்தையை தமிழிலும் சேர்த்துக்கொள்வோம்.சிறுகவி.கடைசி உகரம் சற்று நீண்டது.குறிலில் எழுதினாலும் பாதகமில்லை.

ஹைக்கூ என்பதற்கு அர்த்தம் என்ன? சேம்பர்ஸ் அகராதி 5,7,5 அசைகள்
;(syllables) கொண்ட ஜப்பானிய கவிதை என்கிறது.இது வெறும் வார்த்தை வருணனை.ஹைக்கூ ஒரு அனுபவம்.தனியே இருக்கும்போது வானத்திலோ ,வீதியிலோ , வீட்டிலோ ஒரு விந்தையான சமாச்சாரத்தைப் பார்த்ததும் உடனே தெரிந்தவரைக் கூப்பிட்டு, ‘அட ! இதை வந்து பாரு’ என்று சொல்கிறோமேääஅதுபோல் ஒரு அனுபவப் பங்கீடு.வியப்பு என்பதை மற்றவருக்கு சுட்டிக் காட்டும் விருப்பமே ஹைக்கூ.

அப்படிச் சுட்டிக்காட்டும் வடிவம் கவிதை.ஒரு சிறிய பூப்போன்ற மூன்று வரிக் கவிதை.ஒரு ஹைக்கூ எழுதும்போதுää”எனக்கு ஒரு அனுவம் ஏற்பட்டது.அதை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.அந்த அனுபவத்தைää என்னில் ஏற்படுத்திய சம்பவத்தை மட்டும் உனக்குச் சொல்கிறேன்.அதே மாதிரி அனுபவம் அல்லது உணர்ச்சி உனக்கு ஏற்படுகிறதா பார்” என்று சொல்கிறோம்.
அனுபவம் அல்லது உணர்ச்சி கடத்தல் ஹைக்கூ.ஒரு சில வார்த்தைகள் மூலம்:

முன்பனி இரவில்
யாத்ரிகனின்
ஊசி நூல் தையல்

கொ ப யாஷி இஸ்ஸா என்ற 18ம் நூற்றாண்டுக் கவிஞனின் இந்த ஹைக்கூ மூன்று நூற்றாண்டுகளைக் கடந்து எத்தனை உணர்ச்சிகளைக் கடத்துகிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.

இரவில் விளக்கு வெளிச்சத்தில் ஊசி நூலால் தைக்கும் ஒருவனைப் பார்க்கிறோம்.அவன் தனிமையானவன்.அவனுக்கு மனைவியோ மகளோ உடன் இருந்தால் எதற்காக கிழிந்த துணியை திரும்பத் திரும்ப தைக்கும் அளவுக்கு ஏழை அவன்… அவ்வப்போது அவன் தையல் ஊசி விளக்கு வெளிச்சத்தில் மின்னுகிறது.
எத்தனை படிமங்கள் மூன்று வரியில்!

இதேபோல் கீழ்க்காணும் வரிகளையும் யோசித்துப் பாருங்கள்:
என் தொப்புளில்
ஒரு கடல்துளி
அதில் பிரதிபலிக்கும்
விளையாட்டரங்கம்!
சாயங்கால இருட்டு
கதவோர மலர் வளையம்
காற்றில் எழுகிறது
சாக்கடையில்
மிதக்கும் முகமூடி
மெல்லத் தலையசைக்கிறது!

ஹைக்கூ எழுதியவனின் அனுபவமும் அதைப் படிப்பவரின் அனுபவமும் ஒத்துப் போக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.அவரவர் நினைவுகளுக்கு ஏற்ப ஹைக்கூ தரும் அனுபவம் வேறுபடலாம்.முன்பனி இரவில் யாத்ரிகனின் ஊசி நூல் நான் குறிப்பிட்டதை போலில்லாமல் உங்களுக்கு வேறு வித ஞாபங்களைத் தரலாம்.நீங்கள் பார்த்த யாத்ரிகர்கள்ääஊசி நூல்ääமுன்பனி எல்லாமே படிம அளவில் வேறுபடலாம்.

முக்கியம் ஹைக்கூ சிறிய எளிய வரிகள் தரும் நீண்ட சிந்தனைத் தொடர்.இந்த சிந்தனைத் தொடரை அதிகம் சிறைப்படுத்தாமல் இருக்கவே ஹைக்கூவின் வரிகள் எளிமையாகவும் சிறியதாகவும் உள்ளன.
ஹைக்கூ ஒரு நெருப்புக் குச்சி.

மனமென்னும் மருந்துச் சரத்திற்கு அருகே உரசப்படும் சிறய நெருப்புத் துண்டு.
மேலும் நம்மைப் பாதிக்கும் சிறிய,அந்தரங்க விஷயங்களை பிறருடன் ஹைக்கூ மூலம் பகிர்ந்துகொள்ளும்போது நம் அந்தரங்க உலகில் அவர்களை அனுமதிக்கிறோம்.எனக்குக் கிடைத்த எண்ணங்கள் உனக்கும் ஏற்படும்போது நானும் நீயும் ஒன்றாகிறோம்.

ஹைக்கூ உனக்கும் எனக்கும் ஒரு சின்னப் பாலம்.
Post a Comment

Popular Posts