Tuesday, May 7, 2013

எங்கே எனது கவிதை - சிறுகதை



இந்த அதிகாலை எவ்வளவு அழகாக விடிந்திருக்கிறது. எனக்காகவே விடிந்த காலை இது. நான் இழந்த சந்தோஷத்தை மீண்டும் அடைந்துகொள்ளப் போகும் தருணத்தை எண்ணிப் பார்க்க்கும்போதே மகிழ்வூட்டுகிறதே!

அந்தக் கணத்தில் நான் தொலைந்துதான் போகப்போகிறேன்...!

அம்மா..... உன்னைப் பிரிந்து உன் அன்பு மகள் முழுதாய் ஐந்து வருடங்கள் வாழ்ந்துவிட்டாள்... இன்று மீண்டும் உன் மடிதேடி வருகிறாள்.

நீ இல்லாமல் உன்னைக் கட்டிக்கொள்ளாமல் எனக்குத் தூக்கமே வந்ததில்லையே .... என் அத்தனை இன்பங்களையும் துன்பங்களையும் முதலில் உன்னோடுதானே பகிர்ந்துகொண்டேன். எந்தக் கவலையும் உன் மடியில் முகம்புதைத்து அழும்போது ஓடிப்போய்விடுமே. நீ என் உற்ற நண்பியாய் இருந்தாய்.

ஒருநாள் உனக்குப் பிடிக்காத காதல் எனக்குப் பிடித்தது. நீயும் அப்பாவைக் காதலித்துத்தானே கல்யாணம் செய்தாய். ஆனால் ஏன் நான் காதலித்தது உனக்குப் பிடிக்கவில்லை? அம்மா உன்னையும் மீறி வினித்தை எனக்குப் பிடித்தது. எல்லாமே அவன்தான் என்று முடிவுசெய்து உன்னுடைய அப்பாவின் எதிர்ப்பையெல்லாம் மீறி நாங்கள் திருமணம் செய்து உன் முன்னால் வந்து நின்றோம். அன்று முதல் உன் அன்பு மகள் உன் எதிரியாகிப் போனாளே... 
அம்மா நீ எனக்கு சாபம் கொடுத்தாய்.... என்னை உன் வயிற்றில் பெற்றதற்காக வெட்கப்படுகின்றேன் என்று நீ அன்று சொன்ன வார்த்தையை இன்னும் மறக்கவில்லையம்மா. முள்ளாக என்னைக் குத்துகிறது

"
நீ ஒருநாள் இல்லை ஒருநாள் கண்ணைக் கசக்கிக்கொண்டு வந்து நிப்பாயடி" என்று நீ கூறினாய், எனக்கு அப்படி ஒரு நிலை வராதென்று அன்று நம்பினேன். இன்றுவரை அப்படி ஒரு நிலை வரவேயில்லை. 
வாழ்க்கையின் உன்னத தருணங்களிலெல்லாம் உன் நினைவு வந்துவிடும். மூன்று வருடங்களுக்கு முன்னால் நானும் ஒரு தாயாகியபோது உன் பாசத்தின் மொத்தத்தையும் உணர்ந்துகொண்டேன்.

எங்களுக்கு ஹரினிக்குட்டி பிறந்தபோது உன்னிடம் பேசினேன்....
இரண்டு வருடங்களிற்குப் பிறகு உன் கோபங்களை மறந்து பேசினாய். இன்று உன் பேத்தியைக் கூட்டிக்கொண்டு உன்னிடம் வருகிறேன்.... 
உன்னைச் சந்திக்கும் அந்தத் தருணத்தை நினைத்து நினைத்து மருகிப்போகிறேன். உன்னை மாதிரியே உன் பேத்தி எவ்வளவு அழகு தெரியுமா? நீ பார்க்கத்தானே போகிறாய்.

"
என்னம்மா பலமான சிந்தனை? ஊருக்குப் போகும் கனவா?..." நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். வினித் அழகாய் இடுப்பில் கைவைத்துக்கொண்டு புன்னகைத்தான். நான் ஒரு கணம் என்னை மறந்து அவனைப் பார்த்துக்கொண்டேன். என் அம்மாவை என்னிடமிருந்து பிரித்த கள்ளனடா நீ...

"
ம்ம்ம் கனவுதான், ஏன் வரக்கூடாதா?"

"
வரலாமே! உன்னைவிட எனக்குத்தாண்டி ஆர்வமாய் இருக்கு"

"
ஓ... என்ன ஆர்வம் எண்டு தெரிஞ்சுகொள்ளலாமா கணவரே?"

"
வேறெயென்ன உனக்கு ஒரு வடிவான தங்கச்சி இருக்கிறாளே அவளைப் பார்க்கும் அர்வம்தான்"

"
டேய் நீ வாங்கிக் கட்டப்போறாய், உனக்கு நான் கிடைச்சதே பெரிய விஷயம் அதில தங்கச்சியப் பாக்கப்போறியா?"

"
சரி சரி விடடி... சும்மா பகிடிக்கு சொன்னா உடனே சீரியஸாயிட்டு..."

நாங்கள் கோட்டை ரயில் நிலையத்தில் காத்திருந்தோம். திருகோணமலையில் இருக்கும் எனது பிறந்த வீட்டிற்குப் போகக் காத்துக்கொண்டிருந்தோம். நான் ஜன்னலோர இருக்கையில் சில்லிடும் காற்றின் இதமான தழுவலின் சுகத்தோடு உட்கார்ந்திருந்தேன். எதிர் இருக்கைகள் காலியாக இருந்தன. ரெயிலிலும் பெரிதாகக் கூட்டமில்லை. 

"
ஹரினி" அவளுக்கு மூன்று வயது. பாட்டியைப் பார்க்கும் சந்தோஷம் , முதன்முதலில் ரயிலில் பயணிக்கும் சந்தோஷம் என அவள் நாங்கள் இருந்த ரயில் பெட்டிக்குள் பட்டாம்பூச்சியாய்ப் பறந்துகொண்டிருந்தாள்.

"
அம்மா இந்த ரெயினை பாட்டி வீட்டில எப்பிடிம்மா பாக் பண்ணுவாங்க?"

"
பாட்டி வீட்டை நிறைய இடம் இருக்குத்தானே அங்க பாக் பண்ணினா போச்சு"

"
ஓமடா குட்டி இந்த ரெயின் மட்டுமில்ல இந்த ஸ்டேசன்ல இருக்கிற எல்லா ரெயினையும் பாக் பண்ற அளவுக்கு பாட்டி வீட்ல இடம் இருக்கு இல்லையாடி"

"
காணும் காணும் நிப்பாட்டுறீங்களா?"

"
ஏண்டி எப்படி திருகோணமலை ஸ்டேசனை விலைக்கு வாங்கினாரு உங்கப்பா?"

"
கொஞ்சம் அடங்கிறியாடா...?"

"
சரி சரி நான் போய் தண்ணிப் போத்தல் வாங்கிட்டு வாறன்" வினித் என்னிடம் சொல்லிவிட்டு கீழே இறங்கப் போக...
"
அப்பா நானும் வாறன்" ஓடிப்போய் தனது அப்பாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கினாள் ஹரினி.

எனக்கு மீண்டும் வீட்டு ஞாபங்கள் வரத்தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர்கள் எங்கள் உறவினர்கள் எல்லாம் எப்படி இருப்பார்கள். ஊர் கொஞ்சமாவது மாறியிருக்கும். விபரி;க்கமுடியாத இன்பத்தில் நான் திளைத்துக்கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் வினித் தனியாக மேலே ஏறி வந்தான்.
"
எங்கப்பா ஹரினி எங்க?"

"
அவள் கீழ இறங்கின உடனயே நான் அம்மாட்டப் போகப் போறன் எண்டு கேட்டாள், நானும் அவளை மேல ஏத்திவிட்டிட்டுத்தான் தண்ணி வாங்கப் போனான், அவள் இங்க வரலயா?"

எனக்குத் தலையெல்லாம் சுற்றியது....

"
கடவுளே என்னடா நீ இப்படியா பொறுப்பில்லாம இருப்ப? என்னட்டக் கொண்டந்து விட்டிட்டுப் போயிருக்கலாமே?"

இரண்டு பேரும் ஆளாளுக்கு எல்லாப் பெட்டிகளிலும் தேடத்தொடங்கினோம். ரெயில் வேறு புறப்படும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. எல்லாத் தெய்வங்களும் மனதில் வரிசையாக நிறுத்தி வேண்டிக்கொண்டேன். பக்கத்து முருகனிற்கு நேத்தி வைத்தேன்....

"
என்ட ஹரினிக்குட்டிய எப்படியாவது என்னட்டப் பத்திரமாச் சேத்திடு"
எனக்கு ஓடி ஓடி மூச்சு வாங்கியது.

"
இங்க ஒரு சின்னப் பிள்ளையப் பாத்தனீங்களா?, புளூ கலர் ஜீன்ஸ் வைட் டி.சேர்ட் போட்டிருந்தாள்..."

எல்லோரும் என்னைப் பரிதாபமாய் பார்த்தார்கள்... 
"
இல்லையேம்மா.."

வினித் எங்கே போனான் என்றும் தெரியவில்லையே...! கடவுளே என்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு சோதனையை நான் அனுபவித்திருக்கவே இல்லை.

"
ஐயோ ஹரினிக்குட்டி அம்மாவை விட்டு எங்கம்மா போனாய்? எவ்வளவு சின்னப் பிள்ளையடா நீ... எங்க மாட்டிக்கொண்டு அழுதுகொண்டு நிக்கிறாயோ நீ...",எனக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.

என்னைவிட வினித் இன்னும் துடித்துப் போயிருப்பான். அவன் உயிரையே வச்சிருக்கிறானே அவளில... ஹரினி அந்தப் பெயரக்கூட அவன்தானே ஆசையாய் வச்சான்...!

ரெயிலின் நீளமான ஹோன் சத்தம் என் காதுகளில் இடியாக விழுந்தது.

ஐயோ ரெயின் புறப்படப் போகிறதே...!

நான் பதறிக்கொண்டு எங்களது இருக்கையை நோக்கி ஓடினேன். 
எதிலோ இடறி தடுக்கி விழுந்தேன்.... மீண்டும் எழும்பி ஓடினேன்...!

அங்கே... !

"
அம்மா ...!"

ஹரினி என்னை நோக்கி ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டாள். 

"
என் நெஞ்சில் பாலை வாத்தியேடி செல்லம்..! என்னைவிட்டு எங்கடா போனாயடி செல்லம்?", அப்படியே அள்ளி எடுத்து முத்தமழை பொழிந்தேன்.

"
குட்டி அப்பா எங்கடா?"

"
அப்பா என்னை இந்த ஆன்டிக்குப் பக்கத்தில இருக்கச் சொல்லீட்டு உங்களத் தேடிப் போட்டாரு"

வண்டி ஒரு குலுக்கலுடன் நகரத் தொடங்கியது…!

மறுபடியும் என்னடா சோதனை இது?

என் தோள்களில் ஒரு கை பதிந்துகொள்ள நான் திரும்பிக்கொண்டேன்…!

வினித்

"
இண்டைய நாள என் வாழ்நாளில மறக்கவே மாட்டேனடா"

"
எங்க போய் இவளப் புடிச்சனீங்கள்?"

"
அவாவோ? அவா இந்த ரெயினால இறங்கி பக்கத்தில நிண்ட ரெயினுக்குள்ள ஏறி அங்க ஒரு சீட்டில ஹாயா இருக்கிறா..."

"
என்ன துணிச்சல் பாரடி இவளுக்கு?, அதில்லை பக்கத்தில இருக்கிறவை கேட்டிருக்கினம் யாரோடா வந்தனீங்கள்எண்டு"

"
அதுக்கு இவா சொல்லி இருக்கிறா அம்மாவும் அப்பாவும் என்னை இங்க இருக்கச் சொல்லீட்டு ரெண்டு பேரும் தண்ணிப் போத்தல் வாங்கப் போட்டினமமாம்’'

"
அப்படியாடி சொன்னாய் எண்ட குட்டி?"

ஹரினி நடந்த ரணகளம் எதுவும் புரியாமல் அழகாய் சிரித்தாள்..!

நான் அள்ளிக்கொண்டேன்.....!

Saturday, May 4, 2013

காகிதக் கப்பல் - சிறுகதை

மழை பொழிந்துகொண்டிருக்கிறது. ஒரு நாளில்லை, இரண்டு நாளில்லை ஒரு வாரமாய கொட்டித்தீர்க்கிறது.
எங்கும் வெள்ளக்காடு...!
எனது சின்னப் பொண்ணு நித்யா வீட்டுக்கு முன்னே வெள்ளத்தில் காகிதக்கப்பல் விட்டு விளையாடிக் கொண்டிருக்கிறாள்.
நான்கே வயதுதான், சுட்டித்தனத்துக்குக் கொஞ்சமும் குறைச்சலில்லை...!
மழை நாட்கள் எப்போதும் கடந்தகாலத்தின் இன்னொரு அழகிய மழைநாளை ஞாபகப்படுத்திவிடுகிறது. இந்த மழையும் நித்யாவும் எனது சின்ன வயசு ஞாபகங்களை அள்ளிவருகிறார்கள்.

"உங்களுக்கு நல்ல கொண்டாட்டம்தான்டா பள்ளிக்கூடமும் இல்லை படிப்பும் இல்லை, நல்லா மழையில கூத்தடிச்சுக் கொண்டு திரியுங்கோ..."

அம்மாவின் பேச்சை கேட்கும் நிலையில் நாங்கள் இருக்கவில்லை. நானும் என் தங்கையும் போட்டிக்கு காகிதக் கப்பல் செய்து விளையாடிக் கொண்டிருந்தோம்.
, அவளுக்கு என்னை விட இரண்டு வயசு குறைவு. என்னை விடக் கெட்டிக்காரி. பெரும்பாலும் என்னைக் கேள்வி கேட்டே படுத்தி எடுப்பாள். முடிந்தவரை பதில் சொல்லுவேன் சொல்லாவிட்டால் அன்று முழுவதும் வருவோர் போவோரிடம் எல்லாம் என் மானத்தைக் கப்பலேற்றுவாள்.
"அண்ணா இப்பிடியே மழை பெஞ்சு கொண்டே போய் எங்கட வீட்டுக்கயும் தண்ணி வந்திடுமே...!, அப்ப என்னண்ணா செய்யிறது?" நியாயமான கேள்விதான்...

மேசைக்கு மேல ஏறி நிப்பம்

அதுக்கு மேலயும் தண்ணி வந்திட்டா என்னண்ணா செய்யிறது...?” தொடங்கீட்டாள்....!

ஒரு முடிவோடதான் இருக்கிறாள் போல, ம்ம்ம் முடிந்தவரை சமாளிப்பம்...!

அதுக்கு பிறகு என்ன... கூரைக்கு மேல ஏறவேண்டியதுதான்..!

அதுக்கு மேலயும் வெள்ளம் வந்திட்டா....?”
இது நான் எதிர்பார்த்ததுதான்...
அதுக்கு மேல எனக்குத் தெரியாது போடி.....அவள் கேள்வியால் எரிச்சலூட்டப்பட்டுச் சொன்ன பதில் இல்லை அது, தப்பிக்க அதைவிட ஒருவழியும் எனக்குத் தோன்றவில்லை.
ஐயோ அண்ணா எனக்கு பயமா இருக்கு....!
அண்ணா அண்ணா என்ன செய்யிறதெண்டு அம்மாட்டக் கேப்பமா...?”
இப்ப எனக்குள் ஒருவிதமாய் பயம் தொற்றிக் கொண்டுவிட்டது. இரண்டு பேரும் அம்மாவிடம் ஓடிப்போய்,

அம்மா நிறைய மழை பெஞ்சு வீட்டுக்கு மேலயும் வெள்ளம் வந்தடுமா... அப்பிடி வந்தா என்ன செய்யிறதம்மா...?”

அப்பிடி வந்தா இந்தியாவில இருந்து ஒரு கப்பல் வந்து எங்கள எல்லாம் ஏத்திக் கொண்டு போவாங்கள்...
எங்களுக்கு அதைக் கேட்டாப் பிறகு உற்சாகம் தாங்க முடியவில்லை. இரண்டு பேரும் துள்ளிக் குதித்தோம். கப்பல் வந்து ஏத்தேக்க என்னவெல்லாம் கொண்டு போக வேண்டும் எண்டு பிளான் பண்ணினோம்.... உடுப்புகள் புத்தகங்கள் எல்லாம் ஒரு சூட்கேஸில் அடுக்கி வைத்தோம்....

நாங்கள் கப்பலில் போக ரெடி....!

மழை இன்னும் பெய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டோம். 

வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் கூடிக்கொண்டே போனது.

வீட்டின் ஒவ்வொரு படிகளையும் தாண்டிக் கொண்டு போனது.
வீட்டிற்குள் வெள்ளம் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.


ஒருநாள் மழை நின்றே போனது....!

Wednesday, May 1, 2013

நீச்சல் பழகிய குளங்கள்


 ங்கும் பசுமையாய் நெல் வயல்கள் பெருவெளியாய் கண்ணுக்கு எட்டியதூரம் வரை விரிந்திருந்தது. வெளிநடுவே ஓர் தாமரைக்குளம். அதன் நீர் அணைகளில் முட்டி வழிந்துகொண்டிருந்தது. முழுதாக இல்லாமல், அங்கங்கே தாமரைகள். நான்கு புறத்தேயும் துருசுகள்.
வானம் அவசரமாய் மழை மேகங்களை ஒன்றுகூட்டி தூறல்கள் மாநாட்டை அறிவித்துக்கொண்டிந்தது. கொக்குகள் வயல்களில் இருந்து அணிவகுத்துப் பறந்தன. அவைகளின் வெண்மை வானத்தின் கருமையிலும் வயல்களின் பச்சையிலும் பளிச்சிட்டன. வயல்களிற்கு நடுவே அமைந்திருந்த பிள்ளையார் கோவிலின் மணியோசை ஒலித்து பின்னே எதிரொலித்துக் கொண்டிருந்தது.

காற்றில் ஈரலிப்பு!

குளக்கட்டுப்
புல்களில் என் பாதங்கள் பதிய நடந்துகொண்டிருந்தேன். பல வருடங்களின் பின்னால் இங்கே வருகிறேன். இந்த இதமான காலநிலையும், என் கண்முன்னே விரிந்திருந்த அழகான காட்சியும் ஒருவிதமான சிலிர்ப்பைத் தருகிறது. குளத்தின் துருசுப் படிகளில் இறங்கி கடைசிப் படியில் இருந்தவாறு கால்கள் இரண்டையும் மெதுவாய் நீரிற்குள் வைக்க ஒருவிதமான உற்சாகம் கரைபுரண்டோடியது.

என்
பதின்ம வயதுகள்வரை நான் இங்கே என்னைத் தொலைத்து மகிழ்ச்சியில் திளைத்த நாட்களை எண்ணிப்பார்க்கிறேன். மீண்டும் அந்த நாட்கள் வரப்போவதில்லை, ஆயினும் அதையெல்லாம் நினைக்கையில் மனதில் இனம்புரியாத உணர்ச்சிகள் பெருக்கெடுக்கிறது.
என் நினைவு தெரிந்து சிறு வயதில் அம்மாவின் கரங்கள் பிடித்து முதன்முதலில் கோவிலுக்குப் போகையில் இதே குளக்கட்டில் நடந்துபோயிருக்கிறேன்.

அங்கே
சிறுவர்கள் தொடக்கம் இளைஞர்கள் வரை குளத்தில் நீச்சலடித்துக் கொண்டிருந்தார்கள்துருசுக் கட்டுகளில் ஏறி பல்டி அடிப்பார்கள், குளத்தைக் குறுக்கே நீந்திக் கடக்கப் போட்டியிடுவார்கள், இன்னும் கொஞ்சப் பேர் நீச்சல் கற்றுக்கொண்டிருப்பார்கள்.

அந்தக்
காலத்தில் நாங்கள் நீச்சல் தடாகம் ஒன்றைக்கூட நேரில் கண்டதில்லை. எங்களுக்கு இந்தக் குளம்தான் எல்லாவற்றையும் கற்றுத்தந்தது. நீச்சலை மட்டுமல்ல, எங்கள் நட்பை வளர்க்கும் இடமாக, எங்கள் உடற்பயிற்சிக்கூடமாக, பரீட்சை நாட்களில் மனதை அமைதியடைய வைக்கும் குருவாக, ஒரு தோழனாய் , எல்லாமுமாய் இருந்திருக்கிறது.
ஐம்பூதங்களில் ஒன்றுதான் நீர். ஐம்பூதங்களான நிலம், நீர், தீ, ஆகாயம் என்னும் ஐந்தும் நமக்கு வெளியிலும், உடலுக்குள்ளும் இருக்கின்றன. நமக்கும்

நீரிற்கும்
இடையிலான தொடர்பு அற்புதமானதுநீந்தும் போது, ஒரு விதமான ஆன்மவிழிப்பை அடைந்து கொள்ள முடியும். நீருடன் ஒன்றித்து நீந்தும்போது நம் அகம் விழித்துக்கொள்ளும். இறந்த
காலத்தினதும் எதிர்காலத்தினதும் நினைவுகளற்ற நிகழ்கால அனுபவத்தை உணர முடிகிறது. நீச்சலடிக்கப் போவோமா என்று யாராவது கேட்டால் உடனே எங்களுக்குள்; ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டுவிடும். அதன் அனுபவம் அப்படிப்பட்டது. நீச்சல் அடிக்கும் வாய்ப்புள்ள எந்த இடத்திலும், மற்றவர்கள்  நீந்திக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்க எவராலும் தங்கள் மனதைக் கட்டுப்படுத்திவிட முடிவதில்லை.

இப்பொழுது
இங்கு நிலவும் வெப்பமான காலநிலையில் எங்காவது அமைதியாய் நீந்துவதற்குத்தான் மனம் விரும்புகிறது. அது ஒரு கிணறாகக்கூட இருந்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது.
முதன்முதலாய் எனக்கு நீந்தும் ஆசை வந்து குளத்தில் கால்களை வைத்தேன். உற்சாகம் கரைபுரண்டோடியது. அப்போது எனக்கு எட்டுவயதுதான். எங்கள் வயதுகளை ஒத்த சிறுவர்கள் எல்லாம் நீச்சல் பழகும் ஆசையில் ஆழமில்லாப் பகுதியில் கைகளையும் கால்களையும் படபடவென அடிக்க அவர்களுக்கு நீச்சல் வந்ததோ இல்லையோ, நீர் மட்டும் நாலுபுறமும் சிதறிப் பறந்துகொண்டிருந்தது.

'ஒல்லித்தேங்காய்' அதாவது உள்ளே ஒன்றுமே இல்லாமல் டம்மியாய் இருக்கும். அது நீரில் இலகுவாய் மிதக்கும். இரண்டு ஒல்லித்தேங்காய்களை எடுத்து இணைத்துக்கட்டி, அதனை வயிற்றிற்குக் குறுக்கே வைத்து உடலை சமநிலைப்படுத்துவோம். அதனை அணிந்துகொண்டு நீந்துவது எளிது. ஒரு கட்டத்தில் அதுதேவைப்படாமல் போகும், அந்தக் கணம் அற்புதமானது. ஏதோ ஞானம் கிடைத்த மகிழ்ச்சி. ஏதோ ஒரு நாள் நாங்களாய் நீச்சலடிக்கும் தருணம் வாய்க்கும்.

நான்
அனுபவித்தேன். கைகளை நீரில் வெட்டிக்கொண்டு முகத்தை லாவகமாய் மாறி மாறித் திருப்பிக் கொண்டு நீச்சலடித்தேன்.  நானாய் பழகிக்கொண்டேன். இங்கு எல்லோரும் அப்படித்தான் பழகுவார்கள்.
குளத்திற்கு பக்கத்திலே இருக்கும் பயிரிடப்படாத வயல்கள்தான் எங்கள் தற்காலிக கிரிக்கெட் மைதானமாக இருந்தது. விடுமுறை நாட்களில் காலையிலிருந்து வெய்யில் உச்சி மண்டையைப் பிளக்கும்வரை விளையாடிக் களைத்துப்போய் குளக்கரையில் வளர்ந்து நிற்கும் மரநிழல்களில் படுத்துவிடுவோம்.

களைப்பாறிய
பின்னால் எல்லோரும் ஓடிப்போய் துருசின் உச்சியில் இருந்து ஒவ்வொருத்தனாய் ஆழத்தில் குதித்து, சுழியோடி நீண்டதூரம் கீழாக நீந்தி எங்கோ ஒரு இடத்தில் மிதப்போம்.

பசி
வயிற்றைக் கிள்ளும். அருகே இருக்கும் வெற்று வளவுகளுக்குள் புகுந்து, தேங்காய்களையும் மாங்காய்களையும் பறித்து உண்டு களைத்து மீண்டும் குளக்கரையை நாடியிருப்போம்.
சில போட்டிகள் கூட வைத்துக்கொள்வோம். ஆழத்தில் போய் கல் எடுத்துவருவது. சில பயல்கள் ஆழமாய் போகப்பயந்து வெளியில் போய் கல்லை எடுத்து பொக்கட்டில் வைத்துக்கொண்டு குதித்துவிட்டு, மேலே கொண்டு வந்து காட்டுவார்கள்.

நானும்
ஒரு வீரன்தான் என்று பீற்றிக்கொள்வார்கள்.

இதே
குளம் பலபேரைக் காவுகொண்டிருக்கிறது. அந்தப் பயத்திலே நாங்கள் இங்கே நீந்துவதற்கு வீட்டில் தடைவிதித்திருந்தார்கள். நாங்கள் வீட்டிற்குத் தெரியாமல் நீந்துவோம். காற்சட்டைகள் தொப்பலாய் நனைந்திருக்கும் அது காயும் வரை காத்திருந்து வீடுசெல்வோம். சில எட்டப்பர்கள் வீடுகளில் போட்டுக்கொடுத்துவிடுவார்கள். பிடிபட்டால் அன்று நன்றாக வேண்டிக்கட்ட வேண்டியதுதான்.

சிலவேளைகளில்
பின்மதிலால் பாய்ந்து, வீட்டிற்குள் நைசாக நுழைந்து நனைந்த உடைகளை மாற்றிவிட்டு எதுவும் தெரியாதது போல உள்ளே இருப்போம். கில்லி படத்தில் விஜய் தன் வீட்டிற்குள் நுழைய ஒரு வழி வைத்திருப்பாரே அதைப்போல, எங்களுக்கும் நிறைய வழிகள் இருந்தன.
சில சுவாரஷ்யங்களும் நடக்கும். ஓரு முறை வேறு இடத்திலிருந்து வந்த ஒரு திருட்டு கோஷ்டி இங்கே நீராடிக்கொண்டிருக்கும்போது அகப்பட்டது. பிறகென்ன அவர்களைக் கும்மி எடுத்து போலீஸில் பிடித்துக்கொடுத்துவிட்டு, ஊர் முழுக்க தம்பட்டம் கட்டிக்கொண்டு திரிந்த கதையெல்லாம் இருக்கு.

ஒருமுறை
எங்கள் பள்ளிக்கூட நண்பர்கள் குளத்தைப் பார்க்க வந்திருந்தார்கள்.குளத்தைப் பார்த்ததும் தாமதம், அதில் நான்கைந்து பேர் சேர்ட்டைக் கழற்றிப்போட்டுவிட்டு அடுத்தடுத்து துருசிற்குள் குதித்தார்கள். அதற்குள் ஒருவன் மட்டும் மேலே வந்ததும் ஏதோ கத்த நினைத்துவிட்டு மீண்டும் உள்ளே போவதும் வெளியே போவதுமாய்...

தம்பிக்கு
நீச்சல் தெரியாது... !

அவனை
ஒருவாறு இழுத்துவந்து, வயிற்றையெல்லாம் அழுத்திவிட்டு நீரை வெளியேற்றிய பின்னால்.

'உனக்குத்தான் நீந்தத் தெரியாதே, பிறகென்ன துணிச்சலில குதிச்சனி?'

'நான் இவங்கள் குதிச்சு நீந்தினதப் பார்த்திட்டு நினைச்சன், குதிச்சா தானா மேல வரலாம் அப்பிடியே கையையும் காலையும் அடிச்சு நீந்தலாம் எண்டு'
அவன் மேல் எந்தத் தப்பும் இல்லை. ஏனென்றால் யாழ்ப்பாணம் டவுணில் இருக்கும் அவனுக்குக் குளங்களைப் பற்றியும், நீச்சலைப் பற்றியும் பெரிதாய்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1996களில் நீச்சல் தடாகத்தைக்கூட கண்ணால் கண்டதில்லை நாங்கள். அவனால் நிச்சயமாய் அந்தச் சம்பவத்தை தன் வாழ்நாளில் மறந்திருக்க முடியாது.

கோடை
வெய்யிலில் குளத்து நீர் வற்றிப் போகும். அப்போதெல்லாம் நாங்கள் வயற்கிணறுகளில் நீச்சலடிப்போம். எங்களைக் கண்டு கிணற்றுச் சொந்தக்காரர் கம்புடன் வந்தால் பழிப்புக் காட்டிவிட்டுப் போன கதைகளை இன்றும் ஞாபகத்தில் வைத்திருந்து சொல்லுவார்கள் எங்கள் ஊர் பெரியவர்கள்.

மழை
காலத்தில் தூறல் போடும் மழையில் நீந்தும்போது அவ்வளவு சுகமாக இருக்கும். அனுபவித்தவர்களிற்குத்தான் அந்த சுகம் தெரியும்.
இப்பொழுது எல்லா இடங்களிலும் நீச்சல் தடாகங்கள் இருக்கின்றன. நிறைய வசதிகளோடு  under wager glass, swimming suite போட்டு
ஸ்டைலாக நீந்த முடியும். ஆனால் எங்கள் ஊர்க்குளத்தில் நாள்முழுக்க நீச்சலடிக்கும் சுகத்தை இதுவரையும் எந்த நீச்சல் தடாகமும் எனக்குத் தந்ததில்லை.

நீச்சல்
தடாகம் ஒன்றில் குளிக்கும்வரை ஒருவிதமான ஆசை மனதுக்குள் இருந்தது என்னவோ உண்மைதான், ஆனாலும் முதன்முறை அங்கு நீந்தும்போது அதன் செயற்கைத் தனமான வசதிகள் என்னை ஈர்க்கவில்லை. குளத்துக்குள் நாள்முழுக்கக் கிடந்திருக்கிறோம், ஆனால் இங்கு சில மணித்தியாலங்களுக்குள் அலுப்புத் தட்டிவிடுகிறது.

யாழ்ப்பாணத்தின்
வரலாற்றில் மன்னர்களால் கட்டப்பட்ட குளங்கள் எல்லாம் தூர்வாராது மோசமான நிலையிலே உள்ளன. தொண்ணூறுகளிற்குப் பிற்பட்ட காலங்களில்கூட அநேகமான குளங்கள் நல்ல நிலையில்தான் இருந்தன. ஆனால் இன்றைய நிலையில் எல்லாம் அழிவடையும் நிலையில் இருக்கின்றன.

இன்றைய
தலைமுறையைச் சேர்ந்த சிறுவர்களால் இதையெல்லாம் அனுபவிக்க முடியாது. இயற்கை நமக்குத் தந்த எல்லாவற்றையும் அழித்து
அவற்றையெல்லாம் செயற்கையாய் உருவாக்கி அதற்குள் சுகம் காண நினைக்கிறது மனித இனம்.

இதுவரை
அழித்த எல்லாவற்றையும் மீண்டும் உருவாக்க எத்தனையோ ஆண்டுகள் ஆகலாம் அல்லது மீள உருவாக்க முடியாமல்கூடப் போகலாம், இவற்றை மனதிற்கொண்டு இருக்கும் சிலவற்றையாவது அழியாமல் பாதுகாக்க வேண்டும். இதற்கான பொறுப்பை நாங்கள் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

பி
.கு: மூன்று வருடங்களுக்கு முன்னால் புளொக்கில் எழுதவெளிக்கிட்டு, கொஞ்சம் கவிதைகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில கட்டுரைகளையும் எழுதினேன். இதுவரை ஏதாவது உருப்படியாய் ஏதாவது எழுதியிருக்கிறேனா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இனிமேல் தீவிரமாய் எழுதவேண்டும் என்று வெளிக்கிட்டிருக்கிறேன். எனது எழுத்தில் உள்ள தத்துபித்துக்களை மன்னிக்க. தொடர்ந்து நன்றாக எழுத முயற்சிக்கிறேன். நானும் பதிவுலகில் நல்ல ஒரு இடத்திற்கு வர உங்களது ஆதரவை வேண்டிநிற்கிறேன்.

 


Popular Posts