Tuesday, June 15, 2010

அலெக்ஸான்டரும் ஒரு கோப்பை தேநீரும்


‘அலெக்ஸான்டரும் ஒரு கோப்பை தேநீரும்’ என்ன ஒரு அழகிய தலைப்பு…! இந்த நாவலும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கின்றது.அலெக்ஸான்டரின் சரித்திர கதையும் தற்கால சமூகக் கதையும் இரு சமாந்தரப் பாதைகளாக நீண்டு செல்லும் நாவலில் ஒரு சமயம் அவைகளை சந்திக்கவும் வைக்கிறார் எழுத்தாளர்.Autofiction என்கின்ற தன்பெருக்கி முறையை இந்நாவலில் சுரேஷ் கையாண்டிருக்கிறார்.


போர் எந்தக்காலத்திலும் தீராத வேதனைகளையே பரிசாகத் தந்திருக்கிறது.யுத்த வடுக்கள் காலத்திற்கும் மறைவதில்லை.இடப்பெயர்வும் புலம்பெயர்வும் மானுடத்தை அலைக்கழிக்கின்றது.அலெக்ஸான்டர் தன் வாழ்வின் இறுதித் தருணங்களில் தன் தவறுகளை உணர்ந்துகொள்கின்றான்.ஞானி டயோஜினஸ் அவனது அகந்தையை நோக்கி வீசிய கேள்விகளை காலம் கடந்து புரிந்துகொண்டபோதும் ஒரு பயனும் ஏற்பட்டிருக்கவில்லை.டயோஜினஸ் அலெக்ஸான்டரைப் பார்த்துக் கேட்கின்றார்…. ‘நான் சுதந்திரமாக இருக்கிறேன்.நீயோ அடிமையாக இருக்கிறாய்.உனது அகந்தைக்கு; உன் அதிகாரத்துக்கு; உன் புகழ் போதைக்கு நீ அடிமையல்லவா, உண்மையில் ஜெயித்துக் கொண்டிருப்பது நீயல்ல.உன்னை உன் அகந்தைதான் ஜெயித்துக்கொண்டிருக்கிறது.தன்னை சர்வ வல்லமையுள்ளவனாக நினைத்துக் கொண்டு,அகந்தையுடன் திரியும் ஒரு மனிதனை ஒரு சாதாரண காய்ச்சலால் வீழ்த்திக் காட்டிவிட முடியும் என்பதை மறந்துவிடாதே…


உலகை வெல்லப் புறப்பட்டிருக்கிறேன் என்கிறாய்.ஒருவேளை, வழியில் ஜூரம் வந்து சாக நேர்ந்தால் என்ன செய்வாய்? நிறைவேறாத ஆசைகளுடன் அணு அணுவாக உயிரை விட்டுக்கொண்டிருப்பாயே… அது மிகப்பெரிய ஒரு சோகம்.ஒரு கொடிய தண்டனை அல்லவா?


இவை இக்காலத்திற்கும் மிகச் சரியாக பொருந்துகின்றது அல்லவா? இன்றும் எத்தனை டயோஜினஸ் வந்தாலும் நிகழ்கால யுத்த வெறியை மாற்ற முடியாது என்பதே உண்மை.


இந்த நாவலில் ஒரு பகுதியான சரித்திரக் கதையுடன் சமாந்தரமாகப் பயணிக்கும் சமூகக் கதையின் ஒரு சாத்தியப்பாட்டில் அதில் வரும் அலெக்ஸ், ருக்ஸானா ஆகியோர் இறந்த காலமான அலெக்ஸான்டரின் காலத்திற்குள் நுழைகின்றனர்.அதே சமயத்தில் வேறான எதிர்காலங்களுக்குள்ளும் நுழைந்து வெளியேறுகின்றனர்.எகிப்திய பிரமிட்டிற்குள் இருக்கும் ராஜாவின் அறைக்குள் கண்மூடிய கணப்பொழுதுக்குள் காலங்களைக் கடந்து இவர்களால் செல்ல முடிகின்றது.


அலெக்ஸ் நுழையும் காலத்தின் ஒரு சாத்தியப்பாட்டில், அங்கு எமது பூமியின் எதிர்காலம் அதிர்ச்சியூட்டுகின்றது.இன்னொன்றில் நுழையும் ருக்ஸானாவின் அனுபவம் எமது கனவுலகம் போன்று வியப்பூட்டுகின்றது.இறுதியில் இவர்கள் சந்தித்த எதிர்காலம் அவர்களை அதிரடித்ததைப் போன்று எம்மையெல்லாம் கலங்கடிக்கும்.வாசித்து முடித்தவுடன், நாவலின் இறுதியில் கதாபாத்திரங்கள்; உறைந்து போவதைப் போன்று நாமும் உறைந்து போய்விடுகின்றோம்;…..இந்நாவல் பற்றி சுரேஷ் சொல்வது….
‘ நவீன மனிதன் இடமற்ற இடத்தில்(Non place) வாழ நேர்ந்தவன்.அனுதினமும் மொழி,தேசம்,இனம் போன்ற பிரேத்யேக அடையாளங்களைத் தொலைத்து வருபவன்.தவிரவும், புலம் பெயர்தலால் கலாச்சார அதிர்ச்சிகளுக்கு ஆளானவன்.நிச்சயமற்ற இருத்தலின் விளைவாக சமனிலை குலைந்து போனவன்.இயல்பிலேயே இரட்டைத் தன்மை கொண்டவன்.இதனால் சமயங்களில் இவன் தான்(Ego) வேறு; தன் ஆன்மா(Alter Ego) வேறு என்று இரண்டாக பிரிந்து போக(Homo Dupleix) நேர்கிறது.அதன் விளைவாக தன் ஆன்மாவுடனேயே தீவிரமாக மோதிக் கொள்ளும் மல்யுத்தம் சாத்தியமாகி விடுகிறது.இந்த யுத்தம் சம்பந்தமற்றதை இணைக்கிறது(Fuses) சம்பந்தமுள்ளதைக் குழப்புகிறது(Confuses) கால வித்தியாசங்களைக் கலைத்து எல்லாக் காலங்களுக்குமாய் வியாபிக்கிறது(Diffuses) எனவே, இவனைப் பற்றிப் பின்னப்படும் ஒரு கதை பல கதைகளாகத் தன்னைப் பெருக்கிக் கொள்வது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.இதில் வரும் அலெக்ஸாண்டர் வேறு காலங்களில் வேறு அலெக்ஸாண்டர்களாகத் தன்னைப் பெருக்கிக் கொள்கிறான்.மூர்க்கத்தனமான கடந்த காலத்தின் மேல்,க்ரூரமான நிகழ்காலம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டுமானத்தில் அலைந்து கொண்டிருக்கும் இவன் எதிர்கொள்ள நேரும் எதிர்காலம் பற்றிய விபரீத சாத்தியங்களே இந்த் கதை என்றும் சொல்லலாம்.இந்தக் கதைக்கு அத்தியாயங்கள் கிடையாது.பாகங்கள் இல்லை.வரிசையாக எழுதப்பட்டிருக்கும் இதை ஒரே மூர்ச்சனையில் யாரும் படிக்கலாம்.எல்லா அலெக்ஸாண்டரும் ஒரே அலெக்ஸாண்டர்தான்.வேறு காலங்களில் வேறு பிரதேசங்களில் அலைவுறும்போது அவன் வேறு மாதிரியான உளவியல் நெருக்கடிகளுக்கு ஆளாக வேண்டியதாகி விடுகிறது.இதனால் இந்தக் கதை ஏககாலத்தில் தன்னை ஒரு சரித்திரக் கதையாகவும்,சமூகக் கதையாகவும்,துப்பறியும் கதையாகவும் எதிர்காலப் புனைவாகவும் பலவிதமாகத் தன்னைப் பெருக்கிக் கொண்டு விடுகிறது.எனவே,இது ஜெர்ஸி கோஸின்ஸ்கியின் நிறைவேறாத இலட்சியப் பிரதியான-‘உள்ளார்ந்த நாடகமான’ ‘சரித்திரபூர்வமான’’உண்மையும் அற்ற பொய்யும் அற்ற’-ஒரு பிரதியாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்டு விடுகிறது.ஆரூபங்களாகக் கைகோர்த்துக் கனவுகளுடன் அலையும் என் முன்னோடிகளான போர்ஹேயும்,கோஸின்ஸ்கியும் என் முதுகுக்குப் பின்னால் நின்று மௌனமாக நான் எழுதுவதைக் கவனிக்கிறார்கள்.மீசை மழிக்கப்பட்ட அந்த முகங்களில் புன்னனை அரும்புகிறது.ஆனால் ,என் கையோ தொடர்ந்து எழுதிச் செல்கதிறது….’என்பது ‘அலெக்ஸான்டரும் ஒரு கோப்பை தேநீரும்’ நாவலின் முகவுரையில் சுரேஷ் கூறியவை…..


ஒரு விடயத்தைக் கூற மறந்துவிட்டேன்.நாவலின் இன்னொரு முக்கிய பாத்திரமான அலெக்ஸ் கிளிநொச்சியில் பிறந்து சென்னைக்கு குடிப்பெயர்ந்து பின்னர் கனடாவில் வாழ்ந்து எகிப்திய மண்ணில் அலைகின்றவன். இதற்குப் பின்னர் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை நீங்கள் நாவலைப் புரட்டும் வரை….
Post a Comment

Popular Posts