Sunday, June 13, 2010

தவிர்க்க முடியாத உபதேசங்கள்






‘சுஜாதா’ தமிழ் எழுத்துலகின் பிரபல எழுத்தாளர்.மிகப் பெரிய வாசகர் வட்டத்தைத் தன்னகத்தே கொண்ட அவரின் எழுத்துக்கள் தனித்துவமானவை.நாவல்கள்,சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் என பல தளங்களில் இயங்குகின்ற எழுத்தாளரான இவரின் பன்முகத் திறமையை எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது.தமிழ்த் திரையுலகிலும் இவரது பங்கு அளப்பரியது.



சுஜாதாவின் கட்டுரைகளில் நிறைய ‘விஷயம்’ இருக்கும் அவை நமக்குள் ஆழமான சிந்தனைகளைத் தூண்டிவிடும்.அவை அறிவியல் முன்னேற்றங்கள்,இலக்கியம்,புத்தகங்கள் என எல்லா விடயங்களையும் தொட்டுச்செல்லும்.சுஜாதாவின் கட்டுரைகள் ‘கற்றதும் பெற்றதும்’இ’ஓரிரு எண்ணங்கள்’…’நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்’,’இன்னும் சில சிந்தனைகள்’ ஆகிய தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன.



சுஜாதா நிறைய புத்தங்களை வாசித்து தனது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றார். இங்கு அவரின் கட்டுரை ஒன்றைத் தருகின்றேன்… இது அவரால் மொழிபெயர்க்கபட்ட கட்டுரைஇமூலம் வேறொருவருடையது…
மற்றவரின் அறிவுரைகளைக் காது கொடுத்துக் கேட்கும் மனநிலை அருகிவருகின்ற இக்காலத்தில் தந்தை ஒருவர் தன் தனயனிற்கு எழுதும் கடிதம் இது,வாசித்துத்தான் பாருங்களேன் …



தவிர்க்க முடியாத உபதேசங்கள்
-----------------------------------------------------

அவர்கள் எல்லாம் உன்னை எல்லா மலையும் ஏறச் சொல்வார்கள்,நான் சொல்வது மலை ஏறு , ஆனால் நடைமுறைகளை விட்டுவிடாதே என்பதே.ஐம்பது வருஷமாக சேர்த்து வைத்த ஞானம்,ஒரு பக்கத்தில் சொல்லிவிடுகிறேன்.






உன் துணிகளை நீ துவைத்துக்கொள் சுத்தத்திற்காக மற்றவரை நம்பாதே.இந்த நாட்டைச் செலுத்தும் தலைமுறை வீதிகளில் குப்பை கொட்டி மற்றவர் அவைகளை நீக்கப் பழக்கப்பட்டவர்கள்.உன் குப்பையை நீ சமாளிக்கும்போது உணரும் சுத்தம் ஆச்சரியமளிக்கும்.பிட்ஸா கறைக்கு சோப்புத் தூள் உபயோகிக்கவும்.




அமைப்புக்களை ஸ்தாபனங்களை நம்பு.அரசாங்கம் பல்கலைக்கழகம் குடும்பம் எல்லாமே அமைப்புக்கள்தாம்.அவைகளில் நம்பிக்கையே இல்லை.இப்போது நீயே ஒரு நல்ல அமைப்புத்தான்.அதற்கு நானும் உன் அம்மாவும் உத்தரவாதம்.உறுதியான பாகங்கள் நல்ல உடலில் உள்ள அமைப்பு நீ.ஸ்தாபனங்களை நம்பு.ஆனால் அவைகளை வரிந்துகொள்ளாதே.நகரத்தில் வாழ்வதென்றால் சின்னத்தோட்டமாவது இருக்கும் சிறிய வீடுகள் கொண்ட பகுதியில் வசி.கொஞ்சமாவது நீல வானம் தெரியட்டும்.அப்போதுதான் நம் அளவின் அற்பம் புரியும்.கடற்கரைக்குச் செல்.மலைகளை நாடாதே! மலைகள் பெரிதாக அளவாக இருந்தாலும் நாளடைவில் உன்னை நம்பிக்கையிழக்க வைக்கும்.நீ பெற்றோர்கள் அருகில் வசிக்க முடிந்தால் மிக நல்லது.

வாழ்க்கையில் கொஞ்சமாவது பகல் கனவு வேண்டும்.பகல் கனவுகள் உண்மையின் பகுதிதான்.உன் அப்பா ஒருமுறை வகுப்புக்கு வெளியே சன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தபோது ஆசிரியர் என்ன திரும்ப வந்து மற்றவர்களுடன் சேர உத்தேசமா? இல்லையா? என்று கேட்டார்.அப்போதுமே இல்லை என்றுதான் சொல்ல நினைத்தேன்.நாம் நமக்குத் தெரிவதை கற்பனை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஷெல்லி சொன்னார்.தினத்தில் ஏதாவது ஒரு பகுதியை அழகை ஏதாவது ஒரு வடிவத்தில் ரசிக்க முயற்சி செய்.ஒரு கவிதை வரியையோ ,பாடல் வரியையோ சித்திரத்தின் வரியையோ-வரி என்பதுதான் அழகின் ஆதாரமான அங்கம்.

தினத்தில் மற்றொரு பகுதியை சோம்பேறித்தனமாக செலவிடவும் கற்றுக்கொள்.இக்காலத்து இளைஞர்கள் அதிகமாக கடினமாக இலக்கற்று மற்றவர் நலனுக்காக உழைக்கிறார்கள்.உன் நலனுக்காக கொஞ்சம் சும்மா இருக்கும் நேரங்கள் தேவை.விளையாட்டுக்களில் நாட்டம் நல்லது.உன்னால் எப்போதாவது ஜெயிக்கக்கூடிய விளையாட்டாய் தேர்ந்தெடுப்பது நல்லது.உனக்கு சித்திரம் வரையும் திறமை இருப்பதாக ஆசிரியர் சொல்கிறார்.அதை நீ அலட்சியப்படுத்துகின்றாய்.பிற்காலத்தில் சித்திரக்காரனாகவோ வேறு எந்தத் திறமை பெற்றாலும் நீ கற்றுக்கொள்ள வேண்டிய விமர்சனங்களைப் புறக்கணிப்பதே திறமையில்லாதவர்கள்தாம் விமர்சகராகிறார்கள்.

ஏய்ன்ரேண்டின் நீருற்று நாவலில் ஒரு விமர்சகன் கட்டடக் கலைஞன் கதாநாயகனை,”நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்? இஎன்று சொல்லேன்” எனக் கேட்கிறான்“நான் உன்னைப் பற்றி நினைப்பதே இல்லை” என்கிறான்.இதுதான் விமர்சகர்களுக்கு சரியான பதில்.சண்டை போட வேண்டும் என்றால் இடம் காலம் அறிந்து சண்டையிடவும்.வாழ்க்கையி;ல் விரோதிகள் வேண்டும்.ஒரே கொள்கையைப் பிடித்துக் கொண்டு அலையாதே.அது வெறுப்பை வளர்க்கும்.புகார் சொல்வதைத் தவிர்.புகார் சொல்வதனால் எதுவும் நடக்கப் போவதில்லை.வாழ்வில் எது செய்தாலும் மற்றவர் திறமையைப் பாராட்டும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.அப்போதுதான் உன் திறமையில் நம்பிக்கை வளரும்.

ஒரு சில பின்குறிப்புக்கள்:-
தேர்தல் சமயத்தில் நிச்சயம் வோட்டுப்போடு.நாய் வளர்.ஒரு மனித முகத்தில் அந்த நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பார்க்க முடியாது.’No problem’ ‘இந்தத் தருணத்தில்’ போன்ற சொற்றொடர்களை தவிர்.இறுதியாக அதிகாலை எழுந்து விடு.ஆறு மணி என்பது காலையிலும் உண்டு.5 மணி என்பது அதைவிட உத்தமம்.எழுந்திருந்து சூரியன் மேலே எழத் தடுமாறுவதையும் மெல்ல மெல்ல வானம் முழுவதையும் பார்க்கும்போது அந்த மௌனமான அற்புதத்திற்கு நன்றி சொல்லத் தோன்றும்.







1 comment:

பத்மநாபன் said...

அருமை...அழகாக எடுத்து போட்டுள்ளீர்கள்..
//ஆறு மணி என்பது காலையிலும் உண்டு// சுஜாதாவிற்க்கே உரித்தான நகைச்சுவை...

//கொஞ்சமாவது நீல வானம் தெரியட்டும்.அப்போதுதான் நம் அளவின் அற்பம் புரியும்.// கவித்துவமான உபதேசம்..
நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்....

Popular Posts