Monday, May 2, 2016

”பராக்கா” கடவுளின் பார்வையில் எழுதப்பட்ட கவிதை

இந்த உலகம் வார்த்தைகளின் துணையுடன் ஒரு எல்லைக்குள் நின்று விளக்கமுடியாத பேரதிசயம். அந்த அதிசயத்தை வார்த்தைகளற்ற காட்சிப்புலன் அனுபவத்தினூடே ஒரு தியானத்திற்கீடான அனுபவமாக மாற்றுகிறது ”பராக்கா”. இங்கு இசை மட்டும் பேசுகிறது. இதை ஒரு ஆவணப்படம் என்று வகைப்படுத்தினாலும், இது அதனிலும் மேலானதாயே இருக்கிறது. பல்லின மக்களைக் கொண்ட இந்த உலகின் தொன்மையான கலாச்சாரங்களை, அவர்களின் மத வழிபாடுகளை, இயற்கையுடனான மக்களின் பிணைப்பை, வறுமையின் முகத்தை, இயந்திரங்களோடு இயந்திரங்களாகிப் போன மனிதர்களை என்று இந்தத் திரைப்படம் தனது காட்சி மொழியில் சொல்லும் கதைகள் கனதியானவை



பல்லின மக்களைக் கொண்ட இந்த உலகின் தொன்மையான  கலாச்சாரங்களை, அவர்களின் மத வழிபாடுகளை, இயற்கையுடனான மக்களின் பிணைப்பை, வறுமையின் முகத்தை, இயந்திரங்களோடு இயந்திரங்களாகிப் போன மனிதர்களை என்று இந்தத் திரைப்படம் தனது காட்சி மொழியில் எம்மிடம் கடத்தும் அனுபவம் அற்புதமானது.
நகரத்து சாலைகளில் செல்லும் வாகனங்கள், பரபரக்கும் மனிதர்கள் ஏரியல் வியு காட்சிகளில் பூச்சிகளைப் போன்று தோன்றுகிறார்கள். தொழிற்சாலைகளில் இயந்திரங்களோடு வேலைசெய்கிற மனிர்களின் வேலையில் காணப்படுகிற ரிதம், அவர்களையும் ஒரு இயந்திரம் போலத் தோன்ற வைக்கிறது. வேகமாக்கப்பட்ட காட்சிகள் அதற்கு வலுச்சேர்ப்பதாய் இருக்கின்றன.



விடிந்தது கூடத் தெரியாமல் மனைவியைக் கட்டிக்கொண்டு உறங்கும் பிரேசிலின் தெருவோரத்து மனிதனைப் பார்க்கும்போதும்,
பக்கத்தில் தனது பொம்மைக்காரை வைத்துவிட்டு சாலையைக் கடக்கும் ஒவ்வொரு மனிதனின் முகத்திற்குள்ளும் கருணையை எதிர்பார்த்து இரந்து நிற்கிற சிறுவனைப் பார்க்கும்போதும்,
உலகெங்கும் பரந்திருக்கும் குறுகிய மனத்து மனிதர்களால் உலகம் ஒரு கிராமமாய்ச் சுருங்கிவிட்டதை உணரமுடிகிறது.

இன்னமும் இயற்கையுடன் நெருக்கமாய் வாழ்கின்ற எளிமையான மக்கள் பொறாமை கொள்ள வைக்கிறார்கள். அந்த எல்லைகளில்லா நிலங்களில் வாழ்கின்ற சுதந்திர மக்களிடம் பல்லிளிக்கிறது என்னுடைய சுதந்திரம்.

இன்னமும் இயற்கையுடன் தம் வாழ்வை பிணைத்துக் கொண்டு, முன்னோர்களின் வழிவந்த ஆன்மீக நம்பிக்கைகளுடன் எளிமையான வாழ்வை வாழ்கின்ற பாசாங்கில்லாத கிராமத்து மனிதர்களே இந்த உலகில் உண்மையான சந்தோஷத்துடன் வாழ்கின்ற மனிதர்கள்.

நகரத்தின்
இயந்திரத்தனமான routine Life இற்குள் தலையைக் கொடுத்து தாம் நினைத்த வாழ்வையும் வாழ முடியாமல், கிடைத்த வாழ்வையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் நாகரிக மனிதர்கள் நாம்.

வாழ்வதற்குத்
தேவையான அடிப்படை தேவைகளிற்குக் கூட போராடுகின்ற தெருவோரத்து மனிதர்கள் நாகரிக உலகின் பகட்டுத்தனத்தையும் போலியான முகத்தையும் கிழித்துப் போடுகிறார்கள்.

இந்த
ஒவ்வொரு வகையான உலகங்களிலும் இருக்கின்ற அழகியலையும் அபத்தங்களையும் காட்சிகளின் வழியே மாத்திரம் கதை சொல்கின்ற ஆவணப்படம்தான் "BARAKA".



இந்த ஆவணப்படம் என் இதயத்தின் ஒரு மூலையில் நிறைவான உணர்வையும், இன்னொரு மூலையில் குற்றவுணர்வையும் கொட்டிவிட்டுப் போய்விட்டது.


No comments:

Popular Posts