Sunday, August 11, 2013

மழை

புலராத பொழுதில்
தொடங்கிய 
சிறுமழை

ஜன்னல் வழி
வந்து என்னைத்
துயில்கலைத்துப்
போனதின்று

பெயர் தெரியாக் குருவியொன்று
இடம்தெரியாது
மழைக்கொதுங்கியது,
வீட்டுக்குள் வந்த
விருந்தாளிக்கு என்ன கொடுக்க?

வருகையின் சத்தம்
கூரையில் தெறிக்கும் சத்தம்
மண்ணை முத்தமிடும் சத்தம்
இலைகளில் படியும் சத்தம்
சோவென்ற சத்தம்
மழையின் சத்தம்,
இளையராஜாவின் பாடலொன்று
மனதிற்குள் வந்துபோகும்

மின்சாரக் கம்பிகளில்
முத்துக்கள் கோர்க்கும்
மழை

கருவானம்
மெல்லிருள்
குளிர்காற்று
மண்வாசம்
சிறுவெள்ளம்
நீரக்குமிழ்,
கவிதைக்கு என்ன தலைப்பிட?

தென்னை ஓலைகளில்
சொட்டும் துளி
ஓட்டுவீட்டிற்குள் ஒழுகும் துளி
மண்ணில் இட்டதுளி
கொடிக்கயிற்றில் தெறிக்கும் துளி
கைகளில் நான்-
வாங்கிய துளி
எதற்கு விலை அதிகம்?

சுடச்சுடத் தேநீர்
குவளையில் தீர
இன்னொன்று கேட்கலாம்
அம்மாவிடம்

மழை இன்னும் விடவில்லை....

No comments:

Popular Posts