Tuesday, May 7, 2013

எங்கே எனது கவிதை - சிறுகதை



இந்த அதிகாலை எவ்வளவு அழகாக விடிந்திருக்கிறது. எனக்காகவே விடிந்த காலை இது. நான் இழந்த சந்தோஷத்தை மீண்டும் அடைந்துகொள்ளப் போகும் தருணத்தை எண்ணிப் பார்க்க்கும்போதே மகிழ்வூட்டுகிறதே!

அந்தக் கணத்தில் நான் தொலைந்துதான் போகப்போகிறேன்...!

அம்மா..... உன்னைப் பிரிந்து உன் அன்பு மகள் முழுதாய் ஐந்து வருடங்கள் வாழ்ந்துவிட்டாள்... இன்று மீண்டும் உன் மடிதேடி வருகிறாள்.

நீ இல்லாமல் உன்னைக் கட்டிக்கொள்ளாமல் எனக்குத் தூக்கமே வந்ததில்லையே .... என் அத்தனை இன்பங்களையும் துன்பங்களையும் முதலில் உன்னோடுதானே பகிர்ந்துகொண்டேன். எந்தக் கவலையும் உன் மடியில் முகம்புதைத்து அழும்போது ஓடிப்போய்விடுமே. நீ என் உற்ற நண்பியாய் இருந்தாய்.

ஒருநாள் உனக்குப் பிடிக்காத காதல் எனக்குப் பிடித்தது. நீயும் அப்பாவைக் காதலித்துத்தானே கல்யாணம் செய்தாய். ஆனால் ஏன் நான் காதலித்தது உனக்குப் பிடிக்கவில்லை? அம்மா உன்னையும் மீறி வினித்தை எனக்குப் பிடித்தது. எல்லாமே அவன்தான் என்று முடிவுசெய்து உன்னுடைய அப்பாவின் எதிர்ப்பையெல்லாம் மீறி நாங்கள் திருமணம் செய்து உன் முன்னால் வந்து நின்றோம். அன்று முதல் உன் அன்பு மகள் உன் எதிரியாகிப் போனாளே... 
அம்மா நீ எனக்கு சாபம் கொடுத்தாய்.... என்னை உன் வயிற்றில் பெற்றதற்காக வெட்கப்படுகின்றேன் என்று நீ அன்று சொன்ன வார்த்தையை இன்னும் மறக்கவில்லையம்மா. முள்ளாக என்னைக் குத்துகிறது

"
நீ ஒருநாள் இல்லை ஒருநாள் கண்ணைக் கசக்கிக்கொண்டு வந்து நிப்பாயடி" என்று நீ கூறினாய், எனக்கு அப்படி ஒரு நிலை வராதென்று அன்று நம்பினேன். இன்றுவரை அப்படி ஒரு நிலை வரவேயில்லை. 
வாழ்க்கையின் உன்னத தருணங்களிலெல்லாம் உன் நினைவு வந்துவிடும். மூன்று வருடங்களுக்கு முன்னால் நானும் ஒரு தாயாகியபோது உன் பாசத்தின் மொத்தத்தையும் உணர்ந்துகொண்டேன்.

எங்களுக்கு ஹரினிக்குட்டி பிறந்தபோது உன்னிடம் பேசினேன்....
இரண்டு வருடங்களிற்குப் பிறகு உன் கோபங்களை மறந்து பேசினாய். இன்று உன் பேத்தியைக் கூட்டிக்கொண்டு உன்னிடம் வருகிறேன்.... 
உன்னைச் சந்திக்கும் அந்தத் தருணத்தை நினைத்து நினைத்து மருகிப்போகிறேன். உன்னை மாதிரியே உன் பேத்தி எவ்வளவு அழகு தெரியுமா? நீ பார்க்கத்தானே போகிறாய்.

"
என்னம்மா பலமான சிந்தனை? ஊருக்குப் போகும் கனவா?..." நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். வினித் அழகாய் இடுப்பில் கைவைத்துக்கொண்டு புன்னகைத்தான். நான் ஒரு கணம் என்னை மறந்து அவனைப் பார்த்துக்கொண்டேன். என் அம்மாவை என்னிடமிருந்து பிரித்த கள்ளனடா நீ...

"
ம்ம்ம் கனவுதான், ஏன் வரக்கூடாதா?"

"
வரலாமே! உன்னைவிட எனக்குத்தாண்டி ஆர்வமாய் இருக்கு"

"
ஓ... என்ன ஆர்வம் எண்டு தெரிஞ்சுகொள்ளலாமா கணவரே?"

"
வேறெயென்ன உனக்கு ஒரு வடிவான தங்கச்சி இருக்கிறாளே அவளைப் பார்க்கும் அர்வம்தான்"

"
டேய் நீ வாங்கிக் கட்டப்போறாய், உனக்கு நான் கிடைச்சதே பெரிய விஷயம் அதில தங்கச்சியப் பாக்கப்போறியா?"

"
சரி சரி விடடி... சும்மா பகிடிக்கு சொன்னா உடனே சீரியஸாயிட்டு..."

நாங்கள் கோட்டை ரயில் நிலையத்தில் காத்திருந்தோம். திருகோணமலையில் இருக்கும் எனது பிறந்த வீட்டிற்குப் போகக் காத்துக்கொண்டிருந்தோம். நான் ஜன்னலோர இருக்கையில் சில்லிடும் காற்றின் இதமான தழுவலின் சுகத்தோடு உட்கார்ந்திருந்தேன். எதிர் இருக்கைகள் காலியாக இருந்தன. ரெயிலிலும் பெரிதாகக் கூட்டமில்லை. 

"
ஹரினி" அவளுக்கு மூன்று வயது. பாட்டியைப் பார்க்கும் சந்தோஷம் , முதன்முதலில் ரயிலில் பயணிக்கும் சந்தோஷம் என அவள் நாங்கள் இருந்த ரயில் பெட்டிக்குள் பட்டாம்பூச்சியாய்ப் பறந்துகொண்டிருந்தாள்.

"
அம்மா இந்த ரெயினை பாட்டி வீட்டில எப்பிடிம்மா பாக் பண்ணுவாங்க?"

"
பாட்டி வீட்டை நிறைய இடம் இருக்குத்தானே அங்க பாக் பண்ணினா போச்சு"

"
ஓமடா குட்டி இந்த ரெயின் மட்டுமில்ல இந்த ஸ்டேசன்ல இருக்கிற எல்லா ரெயினையும் பாக் பண்ற அளவுக்கு பாட்டி வீட்ல இடம் இருக்கு இல்லையாடி"

"
காணும் காணும் நிப்பாட்டுறீங்களா?"

"
ஏண்டி எப்படி திருகோணமலை ஸ்டேசனை விலைக்கு வாங்கினாரு உங்கப்பா?"

"
கொஞ்சம் அடங்கிறியாடா...?"

"
சரி சரி நான் போய் தண்ணிப் போத்தல் வாங்கிட்டு வாறன்" வினித் என்னிடம் சொல்லிவிட்டு கீழே இறங்கப் போக...
"
அப்பா நானும் வாறன்" ஓடிப்போய் தனது அப்பாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கினாள் ஹரினி.

எனக்கு மீண்டும் வீட்டு ஞாபங்கள் வரத்தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர்கள் எங்கள் உறவினர்கள் எல்லாம் எப்படி இருப்பார்கள். ஊர் கொஞ்சமாவது மாறியிருக்கும். விபரி;க்கமுடியாத இன்பத்தில் நான் திளைத்துக்கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் வினித் தனியாக மேலே ஏறி வந்தான்.
"
எங்கப்பா ஹரினி எங்க?"

"
அவள் கீழ இறங்கின உடனயே நான் அம்மாட்டப் போகப் போறன் எண்டு கேட்டாள், நானும் அவளை மேல ஏத்திவிட்டிட்டுத்தான் தண்ணி வாங்கப் போனான், அவள் இங்க வரலயா?"

எனக்குத் தலையெல்லாம் சுற்றியது....

"
கடவுளே என்னடா நீ இப்படியா பொறுப்பில்லாம இருப்ப? என்னட்டக் கொண்டந்து விட்டிட்டுப் போயிருக்கலாமே?"

இரண்டு பேரும் ஆளாளுக்கு எல்லாப் பெட்டிகளிலும் தேடத்தொடங்கினோம். ரெயில் வேறு புறப்படும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. எல்லாத் தெய்வங்களும் மனதில் வரிசையாக நிறுத்தி வேண்டிக்கொண்டேன். பக்கத்து முருகனிற்கு நேத்தி வைத்தேன்....

"
என்ட ஹரினிக்குட்டிய எப்படியாவது என்னட்டப் பத்திரமாச் சேத்திடு"
எனக்கு ஓடி ஓடி மூச்சு வாங்கியது.

"
இங்க ஒரு சின்னப் பிள்ளையப் பாத்தனீங்களா?, புளூ கலர் ஜீன்ஸ் வைட் டி.சேர்ட் போட்டிருந்தாள்..."

எல்லோரும் என்னைப் பரிதாபமாய் பார்த்தார்கள்... 
"
இல்லையேம்மா.."

வினித் எங்கே போனான் என்றும் தெரியவில்லையே...! கடவுளே என்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு சோதனையை நான் அனுபவித்திருக்கவே இல்லை.

"
ஐயோ ஹரினிக்குட்டி அம்மாவை விட்டு எங்கம்மா போனாய்? எவ்வளவு சின்னப் பிள்ளையடா நீ... எங்க மாட்டிக்கொண்டு அழுதுகொண்டு நிக்கிறாயோ நீ...",எனக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.

என்னைவிட வினித் இன்னும் துடித்துப் போயிருப்பான். அவன் உயிரையே வச்சிருக்கிறானே அவளில... ஹரினி அந்தப் பெயரக்கூட அவன்தானே ஆசையாய் வச்சான்...!

ரெயிலின் நீளமான ஹோன் சத்தம் என் காதுகளில் இடியாக விழுந்தது.

ஐயோ ரெயின் புறப்படப் போகிறதே...!

நான் பதறிக்கொண்டு எங்களது இருக்கையை நோக்கி ஓடினேன். 
எதிலோ இடறி தடுக்கி விழுந்தேன்.... மீண்டும் எழும்பி ஓடினேன்...!

அங்கே... !

"
அம்மா ...!"

ஹரினி என்னை நோக்கி ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டாள். 

"
என் நெஞ்சில் பாலை வாத்தியேடி செல்லம்..! என்னைவிட்டு எங்கடா போனாயடி செல்லம்?", அப்படியே அள்ளி எடுத்து முத்தமழை பொழிந்தேன்.

"
குட்டி அப்பா எங்கடா?"

"
அப்பா என்னை இந்த ஆன்டிக்குப் பக்கத்தில இருக்கச் சொல்லீட்டு உங்களத் தேடிப் போட்டாரு"

வண்டி ஒரு குலுக்கலுடன் நகரத் தொடங்கியது…!

மறுபடியும் என்னடா சோதனை இது?

என் தோள்களில் ஒரு கை பதிந்துகொள்ள நான் திரும்பிக்கொண்டேன்…!

வினித்

"
இண்டைய நாள என் வாழ்நாளில மறக்கவே மாட்டேனடா"

"
எங்க போய் இவளப் புடிச்சனீங்கள்?"

"
அவாவோ? அவா இந்த ரெயினால இறங்கி பக்கத்தில நிண்ட ரெயினுக்குள்ள ஏறி அங்க ஒரு சீட்டில ஹாயா இருக்கிறா..."

"
என்ன துணிச்சல் பாரடி இவளுக்கு?, அதில்லை பக்கத்தில இருக்கிறவை கேட்டிருக்கினம் யாரோடா வந்தனீங்கள்எண்டு"

"
அதுக்கு இவா சொல்லி இருக்கிறா அம்மாவும் அப்பாவும் என்னை இங்க இருக்கச் சொல்லீட்டு ரெண்டு பேரும் தண்ணிப் போத்தல் வாங்கப் போட்டினமமாம்’'

"
அப்படியாடி சொன்னாய் எண்ட குட்டி?"

ஹரினி நடந்த ரணகளம் எதுவும் புரியாமல் அழகாய் சிரித்தாள்..!

நான் அள்ளிக்கொண்டேன்.....!

No comments:

Popular Posts