Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, August 4, 2013

இருந்தாலும் நாம் நண்பர்கள்தான்

சினேகம் இல்லா
முதற்சந்திப்பு

நமக்குள் எப்போதும்
சரியாக இருந்ததில்லை
நட்பு

ஞாபகம் இருக்கிறதா?
எப்போதும்
சண்டையை
நீயேதான் தொடங்குவாய்

சட்டெனக்
குரலுயர்த்துவாய்
பின் கண்ணீர் சிந்த
கூர்வாள்கள்
எனை நோக்கித்
திரும்பும்,
நீ மறைவாய்ப் புன்னகைப்பாய்

நம் எதிரெதிர்
குணங்களில்
பகை வளர்த்து
விருட்சமாகிப் போக,
அடியில்
நிழல் தேடுகிறார்கள்
சில மனிதர்கள்

அகந்தை
அடங்காத பெருந்தீ
இன்னும்
அதில் நாம்
எரியத்தான் வேண்டுமா?


Thursday, April 25, 2013

எனக்குள் ஒரு கேள்வி




வார்த்தைகள் பின்னிய
வலைகளுக்குள்
தொலைவதும்
பின் மீள்வதுமாய்
இருக்கிறது வாழ்வு!

அலைகள் எப்போதும்
ஓய்வதில்லை;
இரைச்சலும் அலைக்கழிப்புமாய்
மேலெழுகின்ற அகந்தை
ஆழத்தில்
எனது இருத்தலை
ஒளித்து வைத்துவிடுகிறது!

முடிவில்லாத பயணத்தில்
இளைப்பாற அமர்ந்த
மரத்தின்
ஒர் கிளையில
எழுந்தது
எனக்குள் ஒரு கேள்வி!
இன்னொரு மரத்தில்
கிடைக்கலாம்
என் கேள்வியை
அழித்துவிடுவதற்கான பதில்...!


Saturday, February 2, 2013

அப்துல் ரகுமான் கவிதைகள் - பறவையின் பாதை

'பறவையின் பாதை' – அப்துல் ரகுமானின் சுஃபிக் கவிதைத் தொகுப்பு. இன்றுதான் வாங்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன். முன்னுரையிலே சொல்லிவிட்டார் 'இந்தத் தொகுதி படிமங்களின் பூங்கா' என்று. அப்துல் ரகுமான் தன் கவிதைகளில் படிமம், தொன்மம், குறியீடு என அத்தனை அம்சங்களையும் அருமையாய் பயன்படுத்துவார்.

படிமம் என்பது சொற்களால் வாசகனின் மனதில் கவிஞனால்; வரையப்படும் ஓவியம். ஒரு வர்ணனை கூடப் படிமம்தான். ஆனால் உவமை, உருவகம், தொன்மம் ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதும் கவிதை ஒரு அழகான படிமமாய் உருவாகும்.

அப்துல் ரகுமானின் சொல்லாட்சித் திறன், தன் கவிதைளிற்கும் தொகுப்புக்களிற்கும் தலைப்பிடும்போதுகூட அழகாய் வெளிப்படும். இந்தத் தொகுப்பின் பெயரைப் பாருங்கள் 'பறவையின் பாதை'. நான் இதற்கு முன்னர் ஒருபோதும் இந்த சொல்லை யார் சொல்லியும் கேள்விப்பட்டதில்லை.

தொகுப்பிலிருந்து ஒரு கவிதை.

ஒளிதல்

கொளுத்தப்பட்ட கற்பூரம் போல்
உன் காதலால்
நான் அழிந்துபோவேன் என்று
எனக்குத் தெரியும்

அதனால் உன்னிடமிருந்து தப்ப
இருள்களுக்குள் ஓடினேன்
நீ புன்முறுவல் செய்தாய்

நான் உறக்கத்தில் ஒளிந்தேன்
நீ கனவாக வந்தாய்

நான் விதையில் ஒளிந்தேன்
நீ நீராக வந்தாய்

நான் வீணையில் ஒளிந்தேன
நீ விரலாக வந்தாய்

நான் மொட்டுக்குள் ஒளிந்தேன்
நீ சூரிய கிரணமாய் வந்தாய்

நான் பாவத்தில் ஒளிந்தேன்
நீ மன்னிப்பாய் வந்தாய்

நான் பொய்யில் ஒளிந்தேன்
அது என் முகத்திரை என்றாய்

நான் சந்தேகத்தில் ஒளிந்தேன்
அது என் விளக்கடி நிழல் என்றாய்

நான் இல்லை என்ற பாலையில்
ஒளிந்தேன்
`சிலந்திப் பூச்சியே!
என் வீட்டு மூலையில்
வலை பின்னுகிறாய்` என்றாய்

Saturday, January 12, 2013

வீடு செல்ல மனமில்லை 2


மாலைப் பொழுது
மழை வரும் நேரம்
காற்றில் சலசலப்பு
கதைபேசுகின்றன கிளிகள்

அகன்ற வானம்
கலையும் மேகங்கள்
மறையும் ஞாயிறு
மரிக்கும் பகல்

நெல் வயல்கள்
நீளமாய் வரப்புகள்;
கால் நனைக்க
அருகில் கால்வாய்

கோவில் மணியோசை
கோலமயில் நடனம்;
காற்று வெளியில்
புற்களின் சுகந்தம்

வீடு செல்ல இன்னும்
மனம் வரவில்லை....

Monday, December 24, 2012

வீடு செல்ல மனமில்லை....


பின்னிரவு
மௌனம் -
அது ஓர் அகன்ற பாத்திரம்

இசையை நிறைத்துக்கொண்டிருக்கிறது
புல்லாங்குழல்

இருளின் தூக்கத்தைக்
கலைக்க முயல்கிறது
நிலவின் வெளிச்சம்

பூக்களின் நறுமணத்தை
காற்று
கவர்ந்து வருகிறது

புற்களின் மென்மை
இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது
பாதங்களில்

வீடு செல்ல மனமில்லை....

Tuesday, March 29, 2011

வாழ்வை வழியனுப்புதல்

எனது பயணம்
சில பொழுதுகளில்
கனவுகளில்
தொடர்கிறது

விழிப்பு வந்தபோதும்
விழிகளிலேயே தங்கிவிடுகிறது
வியர்த்தமான பொழுதுகள்

இப்போது
பாலைவனத் தனிமையை
உணர்கிறேன்
முன்பும்
இங்கேதான் இருந்தேன்
ஆனால்
நீயிருந்தாய்!

வார்த்தைக்கு வார்த்தை
மௌனத்திற்கு மௌனம்
நம்மிடையே
நிகழ்ந்துகொண்டேயிருந்தது

இப்போது
வெறுமையின் திக்கில்
நகர்கிறது
வாழ்க்கை

தவறி வீழ்ந்தவனிலும்
தானாய் வீழ்ந்தவனின்
அனுபவம்
அலாதியானது

சிறிய
உணர்வுகள் கூட
சிலவேளைகளில்
அத்திவாரத்தையே பெயர்த்துவிடும்
ஆனால்
எனது அத்திவாரமே
அவைகளில்
உருவானதுதான்
அறிவாயா?

Monday, November 22, 2010

தவறுகள் ....









நான் விரும்பாவிடினும்

என்னைவிட்டு விலகா
என் நிழல் ....
முழு வாழ்க்கைக்குமாய்
நீள்கிறது
எளிதில் அழித்துவிடமுடியா
கறைகள்!

Wednesday, November 17, 2010

பச்சை தேவதை


பலசமயங்களில்
கவிதைகள்
எங்கினும் கனன்றுகொண்டேயிருக்கின்றன…
எப்போதும்,
அவை பூக்கள் போல் அல்ல…

‘பச்சை தேவதை’
சல்மாவின் கவிதைகள்

முன்னையதைப் போல் இல்லா
எல்லைமீறல்கள் அதிகம் !
இருப்பினும் வெகு இயல்பு…
எல்லாவற்றையும் மீறி
சில கவிதைகள்
மனதில் தரிக்கிறது
பகிர்வதில்
எனக்குத்
தயக்கம் இல்லை….

திசைபழகுதல்
யாருடைய ஆட்காட்டி விரலையோ
பற்றியபடிதான்
திசைகளை வகுக்கிறோம்
திசைபழகிய பிறகு
தன் கைநழுவுமாவென்கிற
தாளவியலாத எளிய பதற்றத்தில் சீர்குலைகின்றன
எல்லா உறவுகளும்

மௌனத் துரு
சொல்வாய் எனும் எதிர்பார்ப்பில்
இடைவெளியின்றி விழுந்து
நிரம்பிக்கொண்டிருக்கிறது
திடமான மௌனம்
எளிதாகவேயிருக்கிறது
வார்த்தைகளைப் பற்றிக்கொள்வதைவிடத்
துருவேறியிருந்தாலும் கூட
மௌனத்தைப் பற்றிக்கொள்வது


மரணக்குறிப்பு 1

அவன் கொல்லப்பட்ட நாளில்
மழை பெய்துகொண்டிருந்தது
பெரும் கருணையுடன்

கொல்லப்பட்டவனின் மனைவியிடம் படிகிறது
எதிர்வரப்போகிற
காலத்தின் தனிமை

வந்திருப்பவர்களுக்குச்
சிறந்த உணவொன்றினைத்
தயாரிக்கத் தொடங்கின
துக்கம் கலைந்த சில உறவுகள்

யாரிடமும்
வலுவாகப் பதியாத இழப்பு
ஒரு ரகசியச் செய்தியாய்
கூட்டத்தில் ஊருடுவி அலைகிறது

ஊருக்குப் போய்விட்டுத்
திரும்புவானென்கிற
எளிய நம்பிக்கை போதும்
குழந்தைகளுக்கு

விடியுமுன்
எஞ்சிய ஓலமும்
மழைநீரெனக் காய்ந்து
வீடு விறைப்புற்றுவிடுமென்பதைச்
சலசலக்கிற குரல்கள்
உறுதிப்படுத்துகையில்

அவனது மரணம்
என்னிடத்தில் இன்னொருமுறை நிகழ்கிறது






Wednesday, September 1, 2010

நினைவால் ஒரு பயணம்



சில கவிதைகளை
எழுதுவதில் தோற்றுப்போய்
இன்னோரிடத்தில் பிரமிக்கின்றேன்
ஒரு வாசகனாய்,
சல்மாவின் கவிதைகளில்
....

நினைவால் ஒரு பயணம்


குழம்பிய என்னுள்
நீ விட்டுச் சென்ற
நினைவுகள்
அடர்ந்து படரும்
நானில்லாத பொழுதுகள்
என் அறையில் படரும் தூசிபோல

அன்றாடப் பொழுதின்
முதல் கசப்பை
நான் விழுங்கிச் செரிக்கவும்

எங்கோ நிகழும் மரணம்
ஏற்படுத்தும் இன்மையின் பீதியை
இல்லாமல் செய்வதும்
உன் நினைவுதான்

இன்று மாலை வந்துசென்ற
வானவில்லைப் பார்க்காமல் போனதில்
எனக்கு வருத்தங்களில்லை

நேற்றைய எனது பயணம்
வழமையான
அசௌகர்யங்களோடிருந்தாலும்
எளிதாய் மாறியது உன் நினைவுகளால்தான்

உனது பிரியங்களின்
அருகாமையில் அமைதியிறும்
எனது பெரும் துயரங்கள்

நிலவூ இரக்கமற்று பிரகாசிக்கும்
இந்த இரவு
இன்று உருவாக்கும் தனிமை
எப்போதை விடவும் கடுமையானது

இலக்கை நோக்கிப் பாயும் நதியாய்ப்
பெருகும் எனது தவிப்புகள்
போய்ச் சேரும் உன் நினைவுகளுக்கு

இருந்தும்
உன் அருகாமை வேண்டிப் பெருகும்
தாபம் கரைக்க
வெறும் நினைவுகள் மட்டும்
போதுமானதாயில்லை

Tuesday, August 17, 2010

விலகிப் போகும் வாழ்க்கை


‘கவிதை எழுதுவது குறித்து அவரவர்க்கும் அவரவர்க்கான காரணங்கள் இருக்கலாம்.எனக்கோ இது வேறெதையும் விட ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.தோல்விகளும் இயலாமைகளும் மொழியாக உருவாகும்போது ஏதோ ஒரு நிம்மதி. அது பாவனையாகவும் இருக்கலாம்…..’




என்று நான் கூறவில்லை,’சல்மா’ என்கிற கவிஞரின் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் அவர் கூறியது அது….




‘சல்மா’வின் கவிதைக்கு அறிமுகம் தேவையில்லை அவரது கவிதைகளிலேயே அது இருக்கிறது…‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ தொகுப்பில் ஒரு கவிதை…


விலகிப் போகும் வாழ்க்கை


இன்றும்
ஒருவரை
என்னை விட்டு
வழியனுப்ப நேர்கிறது
நேற்றும்
அதற்கு முன்பும் கூட
நீங்கள்
நினைப்பது போல
இது வாசல் வரை சென்று
வெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல

ஒவ்வொரு வழியனுப்புதலும்
வயதை மட்டும் வைத்துக்கொண்டு
வாழ்வை வழியனுப்புதல் போல
இதயத்தைக் கனக்க வைக்கிறது



இப்படியே
நம் நண்பர்களை
நினைவூகளை
சிந்தனைகளை
தினமும்
ஏதேனும் ஒன்றை
வழியனுப்பிக்கொண்டிருப்பதை
நீங்கள் யாரும்
ஆழமாய் அறிவதில்லை

அதனாலேயே
உங்களால்
சிரித்த முகத்துடன் இருக்கவூம்
பத்திரிகை படிக்கவும் முடிகிறது

நானோ
பயணத்தில் விலகிப் போகும்
ஒற்றை மரத்தின் நிழலையும்
என்னோடு அழைத்துப் போக நினைக்கிறேன்


இந்த வாசலில்
மிகவூம் விரும்பத்தக்க
எதையோ எதிர்பார்த்து
எப்போதும் தனித்திருக்கிறேன்

ஆனால் எப்போதும்
யாராலுமே விரும்ப இயலாத
கள்ளிச் செடிகள் மட்டும்தான்
நம் வாழ்க்கை முழுவதற்குமான
மலர்ச்செண்டுகாளய்
அனுப்பப்படுகின்றன

அவர் பற்றிய குறிப்புக்கள்:தமிழில் எழுதிவரும் குறிப்பிடத்தக்க இளம் கவிஞர் சல்மா.பெண் கவிதை மொழி சார்ந்து இவரது படைப்புகள் புதிய தடங்களை உருவாக்குபவையாக உள்ளன.இவரது கவிதைகள் ‘சுட்டும் விழிச்சுடர்’,’நிகழ்’,’காலச்சுவடு’,’இந்திய டுடே’ முதலிய இதழ்களில் வெளியாகியூள்ளன.இவரது பெரும்பாலான கவிதைகள் ஆங்கிலத்திலும் ,இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு

Tuesday, August 3, 2010

மௌன மொழி


கனவுச் சிதறல்களில்
பட்டுத் தெறிக்கும்
உன் நினைவுப் பிம்பங்கள்….


வாழ்க்கை மரத்தின் வேர்கள்
எங்கு புகுந்துகொள்ளும்?
அல்லது
அது எத்திசைதான் கிளைவிடும்?

உலகம் சிலவேளைகளில்
காட்டுக் கூச்சல் போடும்
பலசமயங்களிலோ
மௌனமாய் வேடிக்கை பார்க்கும்

ரணமும் வேதனையும்
பின்னே தொடரும்
நிழல்போல

ஒரு சமயம்
என் ஆன்மா
தள்ளிநின்று என்னை
வேடிக்கை பார்த்தது
அது உன்னைப் பிரிந்துபோனகணம்
நிகழ்ந்தது….

எனக்குசிறகுகள் தந்தது
நீதான்!
ஆனால் திருப்பிக் கேட்கிறாய்
கீழே இறங்கு முன்னமே!

வார்த்தைகள் மட்டுமல்ல
மௌனம் கூடசுடுகின்றது …

நீ கருமையான பகல்
வெளிச்சமான இரவு

அமைதியான நீரோடைபோலிருக்கிறாய்
உனக்குள் இருக்கும் சுழலோ
வெளியில் தெரிவதில்லை

உன்னைத் தூர நின்று
ரசிக்கும் போது
நிலவைப் பார்த்து
பிரமித்துப்போகின்ற குழந்தையாய் நான்….

Tuesday, June 29, 2010

18 வயசுல




நம் ஒவ்வொருவரது வாழ்க்கையின் ஞாபகப் பதிவுகளில் இன்னும் பசுமையாக இருக்கின்றது "18 வயது’… பருவத்தின் விளிம்பில் மன அலைகள் கட்டுக்கடங்காமல் கரைபுரண்டோடும்… காதல் துளிர்விடும் நட்பு பலம்பெறும் எதுவும் அழகாய்த் தெரியும்… பார்க்கும் யாவும் கவிதையாகும்,உதடுகளில் உதிர்ந்து விழும் பாடல் வரிகள்… பூக்கள்,நிலவு,காற்று கடற்கரை இவைகளைப் பொறுமையாய் ரசிக்கும் மனம்… பா.விஜயின் ‘18 வயது’ நமது ஞாபங்களையும் மீட்டிப்போகிறது இங்கே….

18 வயசுல

கொலுசு உன் கால்களோடு
போய்விட்டது
சத்தம் மட்டும் என் காதுகளோடே
வருகிறது

எண்ணெய் அப்பிய
ரெட்டை ஜடையில் சிக்கி
வழுக்குது
மல்லிகைப் பூவும் என் மனசும்…

பெரிய தலைகாணிக்கு போட்ட
சின்ன தலைகாணி
உறை போல்உன் உடை

பாஸாக வேண்டும் என்று
கோயில் சுவற்றில்
இருவருமே பேர் எழுதினோம்.
நீ மட்டும் பாஸானாய்
சாமி கூட உன்னை மட்டும்தான் பார்க்கிறது

கம்பெனி சைக்கிளில் போகும் உனை
வாடகை சைக்கிளில் தொடர்வேன்
உன்னை சமீபிக்கையில்
அறுந்து போகும்செயினும் என் தைரியமும்

பேச முடிவதேகொஞ்ச நேரம்தான்
வெட்கத்தை வீட்டிலேயே
வைத்துவிட்டு வரக்கூடாதா?

குனிந்தபடி கிணற்றில் நீ
தண்ணீர் மொண்டு போய்விடுவாய்
வாளியில் தொங்கிக் கொண்டிருக்கும்
திருட்டுத்தனமாய் சிந்திய புன்னகை

ரோஸ் ஐஸ் சாப்பிட்டு
வாய் சிவக்க நிற்பாய்
நிறமாற்ற விதி என்பது
இயற்பியல் அல்லஇதழியல்
சின்ன வயசில்
நிறையசிலேட்டு குச்சிகளை முழுங்குவேனாம்
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம் உன்னைப்பற்றி எழுதத்தானோ?

உன் தலையில்
ஊர்ந்துஉன்னைக் கடிப்பது
பேன்களாக இருக்காது
வண்டுகளாகத்தான் இருக்கும்

கோடை விடுமுறைக்கு நீ
ஊருக்குப் போகையில்
நான் பள்ளிக்கூடம் போவேன்
உன்னைப் பற்றி படிக்க

மளிகைக் கடையில்
அரைக்கிலோ சிரித்தபடி
கால்கிலோ சக்கரை வாங்குவாய்
கடைக்காரனோ ஒருகிலோ உருகுவான்

உன் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு
நடைவண்டியில்
நடக்கக் கற்றுக் கொடுத்தாய்
நடந்து கொண்டிருந்த என்னை
தத்தித் தவழ செய்துவிட்டாய்

கோலம் போடும் முன்
வாசலில் தண்ணீர் தெளிக்கிறாயே
உன் அடர்த்தியான அருகாமையில்
பூமி தீப்பற்றக் கொள்ளக்கூடாதென்றா?

விலை மதிக்க முடியாத
உன் உதட்டின் உஷ்ணத்தை
ஐம்பது பைசா பலூனுக்குள்
ஊதி வைக்கிறாயே

அக்கா சேலையைக் கட்டிக்கொண்டு
அண்ணன்காரனுடன் நீ
கோயிலுக்குப் போகையில்
மாமனாகிறது மனசு

கருப்பு மணிகோர்த்துப்
போட்டுக் கொண்டிருக்கும்
வெள்ளரிக் கனி நீ

உடைத்துத் தேங்காயைப்
பற்களில் கடித்து
நீ செய்த பல்வெட்டுக்கள்
தேங்காய்க்குத் தந்த கல்வெட்டுக்கள்

காதைப் பிடித்து
திருகுவது நீ என்பதால்
வானொலி கூட ஆனந்தமாய்
வாய்ப்பாட்டே பாடுகிறது

பாண்டி ஆட்டத்தில்
வானத்தைப் பார்த்துக்கொண்டே
கோடு தாண்டுவாய்
உன்னைப் பார்த்துக் கொண்டே நான்
ரோடு தாண்டுவேன்

தூக்கணாங் குருவிக் கூட்டை
ஆச்சர்யமாய் பார்த்தாய்
உள்ளிருந்த குருவிகள்
உன்னை ஆச்சர்யமாய் பார்த்தன…
அதிசயங்கள் ஒன்றையொன்று பார்த்து
அதிசயித்துக் கொள்வது
அதிசயமில்லை தானே!

துணி துவைக்கும் போது
சோப்பு நுரையைக்
கையில் அள்ளி ஊதி விடுவாய்
நாலாபுறமும் நுரை தெறிக்கும்
காற்றுக்கும் எனக்கும் உடல் சிலிர்க்கும்

நீ தலைவாரும் சீப்பிலிருந்த
கேசத்தை எடுத்து புத்தகத்தில் வைத்தேன்
மயிலிறகு குட்டிபோடும் என்றால்
உன் மயிர் இறகு போடாதா?

கொல்லைப் புறத்தில் மண்சுவர் கட்ட
உன்னை மண்குழைத்து மிதிக்க விட்டிருந்தார்கள்
நீ மிதித்த மண்ணில்
கட்டப்படும் சுவர்
மண்சுவர் அல்ல
பொன்சுவர்

ஆற்றுத் தண்ணீரில் நீ
வெள்ளை வெளேர் கால்களை வைத்ததுமே
ஆம்பிளை மீன்கள் எல்லாம்
ஆளாகிவிட்டன

வெள்ளிக் கிழமையானால்
அரசமரத்து விநாயகருக்கு
அகல்விளக்கு போடுவாய்
விநாயகருக்கும் எனக்கும்
வெள்ளிக்கிழமை வெளிச்ச நாள்

வடகம் காயப்போட்டு விட்டு
காக்கா ஒட்டிக்கொண்டிருந்தாய்
நீ ஓட்டும் அழகைக் காணவே
காகங்கள் வந்து குவிந்தன

முற்றத்திலிருந்த துளசி மாடத்தை
நீ சுற்றிவரும் போது
மாடத்துக்கடியில் அதன் வேர்கள்
மத்தளம் கொட்டிக்கொண்டது

முள்குத்திய இடத்தில்
கள்ளிப் பால் வைத்தாய்
உன் கண் குத்தியதற்காய்
நான்கள்ளிப்பால் வைக்க ஆரம்பித்தால்
அதில் குளித்தால் தான் ஆறும்

ஓவியப் போட்டியில்
பாரதியார் படம் நீ வரைந்திருப்பாய்
பாரதியார் அதைப் பார்த்திருந்தால்
தன் முண்டாசைக் கழற்றி
உன் தலைக்குக் கட்டிவிட்டிருப்பார்.

தினசரி உன் வீட்டு வாசலில்
கோலங்கள் தான் போடுகிறாயா?
இல்லை
பாத ஸ்பரிசங்களை சேமித்த நிலம்
ஒவ்வொரு காலையிலும்
அதைவெளிப்படுத்துகிறதா?

கொஞ்சம் உப்புக்கரிக்கிறதுஎன்பதால்
மதியம் நீ சாப்பிடவில்லையாம்
உப்பு சத்தியாக்கிரகம் என்பதுஇதுதானோ!

கொலைக் கருவிகளின் பட்டியலில்
நீ கால்களில் அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம்

நீண்ட நேரம் நின்று
கண்ணாடியில் முகம் பார்க்காதே
கண்ணாடியின் உள்நாடிஆடிவிடப் போகிறது

குட்டி ஆட்டைப் பார்த்தால்
ஹை என்பாய்
உன்னைப் பார்த்தால்
குட்டி ஆடு மே என்னும்
மே என்பது ஆட்டு மொழியில்
ஹை தானே

பழைய பேப்பர் பையனுக்கும்
ஏன் புதிய புன்னகை போடுகிறாய்
அரிசி புடைக்கும்
உன் அம்மாவுக்குத்தெரியுமா?
மகள்புருவ அசைவிலேயே
இதயத்தைபுடைத்து எடுப்பாள் என்று

புறாக்காலில் கடிதம் கட்டிவிடும்
சங்ககால ஆசை சிறகடிக்கிறது
கண்ணில்ஆனால்
சூப்பாகி விடுவோமா
புறாவும் நானும்?

பறவைகளின் மொழி கூடபுரிந்து விடும்-
ஆனால் உன்பார்வைகளின்
மொழிபுரிவது கடினம்
ஐந்து மணி அடித்ததும்
கண்களை விழிக்கிறாயா?
அல்லது நீ கண்களை விழித்ததும்தான்
ஐந்து மணி அடிக்கிறதா

நீ காது குடைவதற்காகத்தானே
இறகு வளர்க்கின்றன
இள மைனாக்கள்

டீக்கடையில் - உன்
பத்தாங்கிளாஸ் நோட்டுப்புத்தகம்
பஜ்ஜி மடிக்க வந்திருந்தது
அதைப் படிப்பதற்காகவே
நோட்டுப் புத்தகம் தீரும்வரை
பஜ்ஜிகள் வாங்கக் கொண்டிருந்தேன்

தீக்குச்சியை கொளுத்தி விட்டு
தீப்பெட்டி சும்மாயிருப்பது மாதிரித்தான்
என்னைப் படுத்திவிட்டு
இளிக்கிறாய் நீ

உன் கூந்தல் சிலுவையில்
அறையப்படும்மல்லிகைப் பூக்கள்
மறுநாள் மரிப்பதில்லை
உயிர்த்தெழுகின்றன

புதுசாய் ஓவியம் வரைபவன்
மாதிரியேபுதுசாய் காதலிப்பவனும்
எங்கே ஆரம்பிப்பது என்பதுதெரிவதில்லை

சும்மா இருக்கும் நேரத்தில்
வயர் கூடை பின்னுகிறாய்
உன்னைப் பற்றி யோசிப்பதால்
நான் சும்மாவே இருப்பதில்லை

சிலந்தி நூலை விட மெல்லிய
உன் கேசத்திற்குள் புகும்
சாம்பிராணி புகையை
சுவாசிக்கவாவது
உன் கணவனாக வேண்டும்

ஆட்டுக்கு முள் குத்தினால்
அச்சச்சோ என்கிறாய்
என் ஹாட்டுக்குள் முள் குத்துதே
ஏன் அமைதியாய் செல்கிறாய்?

வாழைமரத் தண்டைப் பார்த்துவிட்டு
வளவளப்பாய் இருக்கிறது என்றாய்
உன் முதுகைப் பார்க்க
பாவம் முடியாதே உன்னால்

தினம் ஒரு முறையாவது
துணிகாயப்போட
மொட்டை மாடிக்கு வந்து
காய்ந்து நிற்கும் என் மனசை
நனைக்கக் கூடாதா?

உலகத்தில்
கவிஞர்களும் பைத்தியங்களும்
உருவாக்கப்படுகிறார்கள் போல
உன்னைப் பார்த்து இரண்டுமாய் நான்

பூஜை நேரம் ஆனால்
கோயில் மணி அடிக்கிறது
நீ வரும் நேரம் ஆனால்
என் இதயத்தில் பூஜை நடக்கிறது


மிகுதி அடுத்த பதிவில்….

Thursday, June 3, 2010

கண்ணீர் பூக்கள்- ஒரு கஸல் ஓவியம்





















படித்தவர்களுக்கு மட்டுமேயான கவிதைக்கலை பாரதிக்குப் பின் பாமரர்க்கும் என்றாகிவிட்டது.அந்த வழியில் கவிஞர் அப்துல் ரகுமானின் கஸல் கவிதைகள் யாப்பிலக்கணத்தை மீறி வெகு அழகாக சொல்கின்றன.


உள்ளோட்ட மன உணர்வுகளை முக்கியமாகக் கருதியே தனிமனிதன் ஒருவனின் மனக்குகை ஓவியங்களாக புதுக்கவிதைகள் வெளிவருகின்றன.அந்த வகையில் ரகுமானின் கவியலைகளில் கூறின்,


‘அவர் கவிக்கு
அவர் கண்ணேபட்டு விடும்
வெகு அழகான
கவிவரிகள்…’


இவற்றைப் படித்து நீண்ட நேரம் சென்ற பின்பும் அவை எழுப்பிச்செல்லும் மன அதிர்வுகள் பல இளைஞர்களை நிலை பெறச் செய்யாது என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டுது….


வெறும் வார்த்தை விமர்சனங்களால் மட்டும் கவியையோ , கவிதையையோ தரிசித்துவிட முடியாது.வாசகனின் அனுபவமும் கவிதையின் மூலம் பெறப்படும் அனுபவமும் இணைந்து கொள்ளும் சமநிலைப் பரிமாற்றமுமே கவிவரிகள் நிலைபெறச் செய்யும் எனவே அவரின் துளிகளில் ஒரு சில தேன் துளிகளை நீங்களும் பருகிவிடுங்கள்.


ரகுமானின் கவிவரிகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் அவாவினால் அவரின் அனுமதியின்றி அவரின் பதிவுகளை நான் செதுக்குவதினால் அவரின் சொல்வரிகளினாலேயே அவரிடம் மன்னிப்பையும் யாசிக்கிறேன்.


‘பிதாவே என்னைமன்னியும்

இவர்கள் தாங்கள் எழுதுவது

உங்களது கவிவரிகள்

என்று அறிந்தும்

பதிவுசெய்கின்றார்கள்’


வைரமுத்து அவர்கள் இளைஞர்களுக்கு அளித்த வாடாத மாலை ‘காதலித்துப் பார்’ என்றால் ரகுமான் எமக்களித்த கல்வெட்டு ‘கண்ணீர் பூக்கள்’...
அடுத்த பதிவில் மிகுதிக் கவிதைகள்....






Popular Posts