Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Thursday, July 8, 2010

நிலாப் பார்த்தல்


நிலவை விரும்பாதர்வகள் அதனை ரசிக்காதவர்கள் யாராவது இருப்பார்களென நான் நினைக்கவில்லை.சில மாதங்களிற்கு முன் வாசிக்கக் கிடைத்த இந்தக் கட்டுரையில் அழகாக நிலவைப் பார்த்து ரசிக்கும் அனுபவத்தை அளிக்கின்றார்.அறிமுகம் தேவையில்லை இந்தக் கட்டுரைக்கு.’கதா விலாசம்’ என்ற புத்தகத்தில் உள்ளது இது… பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த புத்தகத்தைப் பற்றி பார்ப்போம்… இப்போது இதை வாசித்துப் பாருங்கள்.


மனிதன் நிலவுக்குப் முதன் முதல் பயணம் செய்து கால் நுற்றாண்டைக் கடந்விட்டோம்,ஆனாலும் இன்று வரை...


திடீரென உலகம் ஒரு நெல்லிக்காயை விடவும் சிறியதைப் போலச் சுருங்கி விட்டது போன்று தோன்றுகிறது.தொலைவு என்பதைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் போய்விட்டது.காரணம்,மின்சாரமும் நவீன விஞ்ஞான சாதனங்களின் வளர்ச்சியும் நம் இருப்பிடத்துக்குள் உலகைச் சுருக்கிட்டு இழுத்து வந்துவிட்டன.


தண்ணீரை விடவும் மின்சாரம் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது.மின்சாரமில்லாத வாழ்வைப் பற்றி நினைவுகொள்வது கூட அர்த்மற்றதாகிவிட்டது!


ஆனாலும் மின்சாரம் நுழையாத காலத்தின் இரவுகள் தந்த நெருக்கமும்,அரிக்கேன் விளக்கொளியிலிருந்து கசிந்து வரும் மஞ்சள் திரவம் போன்ற வெளிச்சமும் மனதின் மூலையில் அப்படியே படிந்து போயிருக்கின்றன.அந்த நாட்களில் சிறுவர்களுக்கு இருந்த ஒரே விளையாட்டு நிலா பார்த்தல்! இரவானதும் நிலா எங்கேயிருக்கிறது,எந்தப் பக்கம் போகிறது என்று அண்ணாந்து பாhத்தபடி,அதைத் தன் கூடவே கூட்டிக்கொண்டு தெருத்தெருவாக அலைவது ஒரு தீராத விளையாட்டு!


தெருவில் இருந்த அத்தனை பையன்களும் தங்களோடு ஒரு நிலவை தன் வீட்டுக்கு கூடவே கூட்டிப்போவதும் வழியில் அது மேகத்தில் மறைந்தபோது அங்கே நின்று நிலவை வெளியே வரும்படி கூப்பிட்டுக் கத்தியதும் எல்லா இரவுகளிலும் நடந்தேறியது.அந்த நாட்களில் வானில் ஒரேயொரு நிலவுதான் இருந்தது என்று எவராவது சொன்னால்,யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.


நான் என் வீட்டுக்கு கூட்டிவந்த நிலவு என் ஜன்னலுக்கு வெளியில்தான் நின்றிருந்தது.அதுபோல இன்னொரு நண்பன் அவனது நிலவை தன் வீட்டுக்குக் கூட்டிப் போயிருப்பான்.இப்படி எத்தனை சிறுவர்கள் கிராமத்தில் இருந்தார்களோ,அத்தனை நிலவுகள் இருந்தன.


நிலா வராத நாட்களில் நட்சத்திருங்களை ஆகாசத்திலிருந்து பறிப்பதற்காகக் கிறுகிறுவென தட்டாமாலை சுற்றுவோம்.நிலா முற்றிய நாட்களில் அதன் பால் வெளிச்சம் தெருக்களை,வீடுகளை குளிர்மை செய்யத் துவங்கும்.தெருவில் பாயை விரித்து தூங்குபவர்கள் யாரோ தங்களை நெருக்கமாக நின்று பார்த்துக்கொண்டு இருப்பது போல வெட்கமடைவார்கள்.அது போனற நாட்களில் கல் உரல்களில் தேங்கி நிற்கும் நிலா வெளிச்சத்தை ஆசையோடு நாய்கள் நக்குவதைக் கண்டிருக்கிறேன்.


நிலா பார்த்தல்,தாயின் இடுப்பில் அமர்ந்த நாளில் துவங்கி இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.பால்யத்தில் என் வீடு வரை கூட்டி வந்த நிலவு இன்றும் எனது பயணத்தில் எப்போதும் கூடவே வந்துகொண்டு இருந்தது.எந்த ஊருக்குப் போகும்போதும் தெரிந்த நபர் கூட இருப்பது போல ஒரு நெருக்கம் கூடிவிடுகிறது.


கையில் காசில்லாமல் சுற்றியலைந்த நாட்களில் கர்நாடக மாநிலத்தின் பட்டகல்,பதாமி என்ற இடங்களில் உள்ள புராதன கோயிலையும் சௌந்தர்யமிக்க சிற்பங்களையும் பார்த்துவிட்டு,பீஜப்பூரை நோக்கி லாரியில் பயணம் செய்ய நேர்ந்தது.டிசம்பர் மாதத்தின் இரவு என்பதால் நட்சத்திரங்கள் சிதறிக் கிடந்தன.மேகம் இருண்டிருந்தது.லாரியில் ஓட்டுநரும் இரண்டு உதவியாளர்களும் முன்னால் இருந்ததால் என்னையும் இன்னொரு வயதான நபரையும் பின்னால் ஏறிக்கொள்ளச் சொன்னார்கள்.அந்த லாரியில் சிமென்டு மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்தன.
லாரியில் ஏறியதும் தூங்கிவிட வேண்டியதுதான் என்று சுருண்டு படுத்தேன்.ஆனால்,குளிர்காற்றும் திறந்த ஆகாசமும் தூக்கத்தை நெருங்கவிடாமல் செய்தன.குளிர் தாங்கமுடியாமல் உடல் நடுங்கத் துவங்கியது.உட்கார முடியவில்லை.
என் மீதே எனக்குக் கோபமாக வந்தது.எதற்காக இப்படிக் காரணமில்லாமல் அலைந்துகொண்டு இருக்கிறேன்? எனக்கு என்னதான் வேண்டும். ஏன் இப்படி குளிரில் நடுங்கிக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்? ஏன யோசனை நீண்டு விரிய விரிய… என் மீதான ஆத்திரம் அதிகமாகக்கொண்டு இருந்தது.


குளிரில் நடுங்கியபடி கைகளை மார்பின் குறுக்காகக் கட்டிக்கொண்டு ஆகாயத்தைப் பார்த்தபடியே வந்தேன்.லாரி ஒரு மலைப்பாதையில் செல்லத் துவங்கியபோது,பள்ளத்தாக்கின் மீது ஒரு பருந்து வட்டமிடுவது போல தனியே மிதந்துகொண்டு இருந்தது நிலா.அது பௌர்ணமியின் மறுநாள் போலும்.மரங்களும் பாறைகளும் ஏன் அந்த மொத்த நிலப்பரப்பே வெண்ணிற வெளிச்சத்தின் சல்லாத்துணியை போர்த்திக் கொண்டு இருப்பது போலிருந்தது.
இரவு எத்தனை அழகானது என்பதை அந்த இரவில்தான் தெரிந்து கொண்டேன்.ஏதோ என் வீட்டின் வாசலில் கயிற்றுக்கட்டிலை போட்டுப் படுத்துக்கொண்டு நிலவைக் காண்பது போல அத்தனை நெருக்கம் கூடியது.அத்தோடு அதுவரை அழுத்திக்கொண்டு இருந்த எண்ணங்கள் கரைந்துபோய் இது போல ஒரு காட்சியைக் காண்பதற்கு கிடைத்த சந்தர்ப்பம் எத்தனை பேருக்கு கிடைக்கப்போகிறது என்று மனது சந்தோஷத்தில் பொங்கியது.

குழந்தைகள் நிலவை பார்த்துப் பாடுவது போல சத்தமாகப் பாட வேண்டும் போலிருந்தது.தானறியாமல் வாய் ஒரு பாடலை முணுமுணுக்கத் துவங்கியது.லாரியில் இருந்தபடி எழுந்து வட்டம் சுற்ற வேண்டும் என்று நினைத்தேன்.அருகில் சுருண்டுகிடந்த நபர் வேடிக்கையாக என்னையும் நிலவையும் பார்த்தார்.

இதே நிலவைத்தானே சிறுவயதிலிருந்து துரத்துகிறேன்.இந்தச் சந்திரன்தானே என் வீட்டுக் கிணற்றில் வீழ்ந்து கிடந்தது.கனவுகள் சூழ நான் உறங்கிக் கிடந்தபோது என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தது இந்த நிலவுதானே! ஏனோ ஆகாசமும,நட்சத்திரமும்,நிலவும் திடீரென கைதொடும் நெருக்கத்துக்கு வந்துவிட்டது போலிருந்தது.


லாரியில் நன்றாகப் படுத்துக்கொண்டேன்.என் தலைக்கு மேலாகக் கூடவே வந்து கொண்டு இருந்தது நிலா.புகை போல குளிர் நிரம்பிய பாதைகளில் லாரி கடந்து சென்றுகொண்டு இருந்தது.உலகில் ஒரேயொரு மனிதனும் ஒரு நிலவும் மட்டுமே விழித்திருக்கிறோம் என்பது போல நிலாவைக் கூடவே அழைத்துச் சென்றுகொண்டு இருந்தேன்.விடிகாலையின் மணம் காற்றில் படரத் துவங்கியபோது,திடீரெனத் தோன்றியது…
விட்டிலிருந்து வெளியேறித் துறவியாக அலைந்த நாட்களில் கௌதம புத்தரும் இதே நிலவைத்தானே பாரத்திருப்பார்! என்றால் இந்த நிலவு புத்தரின் தோழன் இல்லையா?


சங்க இலக்கியத்தில் வரும் பாணன் தன் காட்டு வழியில் கண்டதும் இதே நிலவுதானே? சிறைச்சாலையின் ஜன்னல் வழியாக பகத்சிங் இதே நிலவைப் பார்திருப்பார் அல்லவா? காலத்தின் காட்சியின் பெயர்தான் நிலவா? மனதில் இருந்த கசடுகள்,வலிகள் யாவும் கழுவித் துடைக்கப்பட்டுவிட்டன போலானது.
பொழுது புலர்ந்து,முதல் வெளிச்சத்தின் கீற்றுகள் வானில் தோன்றத் துவங்கியபோது நிலா மேற்கில் கரை தட்டி நின்ற படகைப் போல அசைவற்று அப்படியே நின்றிருந்தது.
ஓரிடத்தில் லாரி நின்றபோது கீழே இறங்கினேன்.சூரியன் உதயமாகியிருந்தபோது,மெதுவாக நிலா மறைந்துகொண்டு இருந்தது.என் கூடவே நிலவு துணைக்கு வரும்வரை எந்த ஊருக்கு வேண்டுமானாலும் சென்று வர முடியும் என்று மன தைரியம் உண்டானது.அதன் பிறகு இன்றுவரை ரயிலில்,பேருந்தில்,கார்களில் பயணம் செய்யும்போது,நிசப்தமாக ஒரு மீன் தண்ணீரில் நீந்துவது போல நிலவு தொலைவில் அலைவதைப் பார்த்தபடி நீள்கிறது பயணம்.


தற்செயலாக இரண்டு நாட்களுக்கு முன்னால் ஓர் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு யாவரும் மொட்டைமாடியில் உறங்க வேண்டியதாகியது.நகரத்துக்கு வந்த பிறகு குழந்தைகள் முதன் முறையாக நிலா பார்த்தபடி உறங்கும் முதல் நாள் அது.நட்சத்திரங்களையும்,நிலவையும்,வழி தெரியாமல் அலையும் பறவைகளையும் பார்த்தபடி படுத்துக் கிடந்தோம்.ஏதாவது கதை சொல்ல வேண்டும் என்று பையன் கேட்டதும் என் நினைவில் வந்த கதை பி.எஸ்.ராமையாவின் நட்சத்திரக் குழந்தைகள்.
இக்கதையை எனது கல்லூரி நாட்களில் வாசித்திருக்கிறேன்.ஒரு கூழாங்கல் தண்ணீருக்குள் அமிழ்ந்து கிடப்பது போல இன்று வரை ஈரம் உலராமல் அப்படியே மனதில் இருக்கிறது.


பி.எஸ்.ராமையா மணிக்கொடி இதழை நடத்தியவர்.சிறந்த சிறுகதையாசிரியர்.அவரது இக்கதை சிறந்த தமிழ்ச் சிறுகதைத் தொகுப்புகள் யாவிலும் இடம்பெற்றுள்ளது.நட்சத்திரக் குழந்தைகள் கதையில் ரோகிணி என்ற ஆறு வயதுச் சிறுமியும் அவளது அப்பாவும் ஒரு நாள் ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.நட்சத்திரங்களுக்கு அப்பா இருக்கிறாரா என்று ரோகிணி கேட்கிறாள்.சுவாமிதான் நட்சத்திரங்களுக்கு அப்பா என்று பதில் சொல்கிறார்.உடனே சிறுமி கேட்கிறாள்… ‘சுவாமி உன்னைப் போல அழகாக இருப்பாரா அப்பா?’ அவரும்,’சுவாமியைப் போல அழகானவர் உலகத்திலேயே வேறு யாரும் கிடையாது!’ என்கிறார்.ரோகிணி அதை ஆமோதிப்பது போல சொல்கிறாள்… ‘அதனால்தான் நட்சத்திரங்கள் இத்தனை அழகாக ஜொலிக்கின்றன!’ அப்போது ஒரு நட்சத்திரம் எரிந்து கீழே விழுகிறது.அதைக் கண்ட சிறுமியின் தந்தை ‘யாராவது பொய் சொல்லிவிட்டால் ஒரு நட்சத்திரம் இப்படி உதிர்ந்து விழுந்துவிடும்!’ என்கிறார்.இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு இரவில் வானத்திலிருந்து எரிந்து விழும் நட்சத்திரம் ஒன்றைக் கண்டு வேதனை தாங்க முடியாமல் ரோகிணி அழுகிறாள்.அப்பா சமாதானப் படுத்தும்போது.’நம் ஊரில் யாரோ பொய் சொல்கிறார்கள் அப்பா.
ஒரு நட்சத்திரம் உதிர்ந்து போனால் கடவுள் எவ்வளது வேதனைப்படுவார் அதை நினைத்துத்தான் வருத்தப்படுகிறேன்!’ என்கிறாள் குழந்தை.குழந்தையின் மனதும்,வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத துக்கமும் கொண்ட கதை இது.எப்போதாவது பின்னிரவில் விழித்துக்கொண்டு ஜன்னலைத் திறந்து பார்க்கும்போது சொந்த ஊரை நினைவுபடுத்துகிறது நிலா.குற்றவாழியைப் போல்.
பொய் சொல்வதால் நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும் என்பது உண்மையாக இருந்தால்.இன்று வானில் ஒரு நட்சத்திரம் கூட இருக்காது.ஆனாலும்,இக்கதையை வாசிக்கும்போது, கடவுளுக்காக குழந்தையைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

Tuesday, June 15, 2010

அலெக்ஸான்டரும் ஒரு கோப்பை தேநீரும்


‘அலெக்ஸான்டரும் ஒரு கோப்பை தேநீரும்’ என்ன ஒரு அழகிய தலைப்பு…! இந்த நாவலும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கின்றது.அலெக்ஸான்டரின் சரித்திர கதையும் தற்கால சமூகக் கதையும் இரு சமாந்தரப் பாதைகளாக நீண்டு செல்லும் நாவலில் ஒரு சமயம் அவைகளை சந்திக்கவும் வைக்கிறார் எழுத்தாளர்.Autofiction என்கின்ற தன்பெருக்கி முறையை இந்நாவலில் சுரேஷ் கையாண்டிருக்கிறார்.


போர் எந்தக்காலத்திலும் தீராத வேதனைகளையே பரிசாகத் தந்திருக்கிறது.யுத்த வடுக்கள் காலத்திற்கும் மறைவதில்லை.இடப்பெயர்வும் புலம்பெயர்வும் மானுடத்தை அலைக்கழிக்கின்றது.அலெக்ஸான்டர் தன் வாழ்வின் இறுதித் தருணங்களில் தன் தவறுகளை உணர்ந்துகொள்கின்றான்.ஞானி டயோஜினஸ் அவனது அகந்தையை நோக்கி வீசிய கேள்விகளை காலம் கடந்து புரிந்துகொண்டபோதும் ஒரு பயனும் ஏற்பட்டிருக்கவில்லை.டயோஜினஸ் அலெக்ஸான்டரைப் பார்த்துக் கேட்கின்றார்…. ‘நான் சுதந்திரமாக இருக்கிறேன்.நீயோ அடிமையாக இருக்கிறாய்.உனது அகந்தைக்கு; உன் அதிகாரத்துக்கு; உன் புகழ் போதைக்கு நீ அடிமையல்லவா, உண்மையில் ஜெயித்துக் கொண்டிருப்பது நீயல்ல.உன்னை உன் அகந்தைதான் ஜெயித்துக்கொண்டிருக்கிறது.தன்னை சர்வ வல்லமையுள்ளவனாக நினைத்துக் கொண்டு,அகந்தையுடன் திரியும் ஒரு மனிதனை ஒரு சாதாரண காய்ச்சலால் வீழ்த்திக் காட்டிவிட முடியும் என்பதை மறந்துவிடாதே…


உலகை வெல்லப் புறப்பட்டிருக்கிறேன் என்கிறாய்.ஒருவேளை, வழியில் ஜூரம் வந்து சாக நேர்ந்தால் என்ன செய்வாய்? நிறைவேறாத ஆசைகளுடன் அணு அணுவாக உயிரை விட்டுக்கொண்டிருப்பாயே… அது மிகப்பெரிய ஒரு சோகம்.ஒரு கொடிய தண்டனை அல்லவா?


இவை இக்காலத்திற்கும் மிகச் சரியாக பொருந்துகின்றது அல்லவா? இன்றும் எத்தனை டயோஜினஸ் வந்தாலும் நிகழ்கால யுத்த வெறியை மாற்ற முடியாது என்பதே உண்மை.


இந்த நாவலில் ஒரு பகுதியான சரித்திரக் கதையுடன் சமாந்தரமாகப் பயணிக்கும் சமூகக் கதையின் ஒரு சாத்தியப்பாட்டில் அதில் வரும் அலெக்ஸ், ருக்ஸானா ஆகியோர் இறந்த காலமான அலெக்ஸான்டரின் காலத்திற்குள் நுழைகின்றனர்.அதே சமயத்தில் வேறான எதிர்காலங்களுக்குள்ளும் நுழைந்து வெளியேறுகின்றனர்.எகிப்திய பிரமிட்டிற்குள் இருக்கும் ராஜாவின் அறைக்குள் கண்மூடிய கணப்பொழுதுக்குள் காலங்களைக் கடந்து இவர்களால் செல்ல முடிகின்றது.


அலெக்ஸ் நுழையும் காலத்தின் ஒரு சாத்தியப்பாட்டில், அங்கு எமது பூமியின் எதிர்காலம் அதிர்ச்சியூட்டுகின்றது.இன்னொன்றில் நுழையும் ருக்ஸானாவின் அனுபவம் எமது கனவுலகம் போன்று வியப்பூட்டுகின்றது.இறுதியில் இவர்கள் சந்தித்த எதிர்காலம் அவர்களை அதிரடித்ததைப் போன்று எம்மையெல்லாம் கலங்கடிக்கும்.வாசித்து முடித்தவுடன், நாவலின் இறுதியில் கதாபாத்திரங்கள்; உறைந்து போவதைப் போன்று நாமும் உறைந்து போய்விடுகின்றோம்;…..இந்நாவல் பற்றி சுரேஷ் சொல்வது….
‘ நவீன மனிதன் இடமற்ற இடத்தில்(Non place) வாழ நேர்ந்தவன்.அனுதினமும் மொழி,தேசம்,இனம் போன்ற பிரேத்யேக அடையாளங்களைத் தொலைத்து வருபவன்.தவிரவும், புலம் பெயர்தலால் கலாச்சார அதிர்ச்சிகளுக்கு ஆளானவன்.நிச்சயமற்ற இருத்தலின் விளைவாக சமனிலை குலைந்து போனவன்.இயல்பிலேயே இரட்டைத் தன்மை கொண்டவன்.இதனால் சமயங்களில் இவன் தான்(Ego) வேறு; தன் ஆன்மா(Alter Ego) வேறு என்று இரண்டாக பிரிந்து போக(Homo Dupleix) நேர்கிறது.அதன் விளைவாக தன் ஆன்மாவுடனேயே தீவிரமாக மோதிக் கொள்ளும் மல்யுத்தம் சாத்தியமாகி விடுகிறது.இந்த யுத்தம் சம்பந்தமற்றதை இணைக்கிறது(Fuses) சம்பந்தமுள்ளதைக் குழப்புகிறது(Confuses) கால வித்தியாசங்களைக் கலைத்து எல்லாக் காலங்களுக்குமாய் வியாபிக்கிறது(Diffuses) எனவே, இவனைப் பற்றிப் பின்னப்படும் ஒரு கதை பல கதைகளாகத் தன்னைப் பெருக்கிக் கொள்வது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.இதில் வரும் அலெக்ஸாண்டர் வேறு காலங்களில் வேறு அலெக்ஸாண்டர்களாகத் தன்னைப் பெருக்கிக் கொள்கிறான்.மூர்க்கத்தனமான கடந்த காலத்தின் மேல்,க்ரூரமான நிகழ்காலம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டுமானத்தில் அலைந்து கொண்டிருக்கும் இவன் எதிர்கொள்ள நேரும் எதிர்காலம் பற்றிய விபரீத சாத்தியங்களே இந்த் கதை என்றும் சொல்லலாம்.இந்தக் கதைக்கு அத்தியாயங்கள் கிடையாது.பாகங்கள் இல்லை.வரிசையாக எழுதப்பட்டிருக்கும் இதை ஒரே மூர்ச்சனையில் யாரும் படிக்கலாம்.எல்லா அலெக்ஸாண்டரும் ஒரே அலெக்ஸாண்டர்தான்.வேறு காலங்களில் வேறு பிரதேசங்களில் அலைவுறும்போது அவன் வேறு மாதிரியான உளவியல் நெருக்கடிகளுக்கு ஆளாக வேண்டியதாகி விடுகிறது.இதனால் இந்தக் கதை ஏககாலத்தில் தன்னை ஒரு சரித்திரக் கதையாகவும்,சமூகக் கதையாகவும்,துப்பறியும் கதையாகவும் எதிர்காலப் புனைவாகவும் பலவிதமாகத் தன்னைப் பெருக்கிக் கொண்டு விடுகிறது.எனவே,இது ஜெர்ஸி கோஸின்ஸ்கியின் நிறைவேறாத இலட்சியப் பிரதியான-‘உள்ளார்ந்த நாடகமான’ ‘சரித்திரபூர்வமான’’உண்மையும் அற்ற பொய்யும் அற்ற’-ஒரு பிரதியாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்டு விடுகிறது.ஆரூபங்களாகக் கைகோர்த்துக் கனவுகளுடன் அலையும் என் முன்னோடிகளான போர்ஹேயும்,கோஸின்ஸ்கியும் என் முதுகுக்குப் பின்னால் நின்று மௌனமாக நான் எழுதுவதைக் கவனிக்கிறார்கள்.மீசை மழிக்கப்பட்ட அந்த முகங்களில் புன்னனை அரும்புகிறது.ஆனால் ,என் கையோ தொடர்ந்து எழுதிச் செல்கதிறது….’என்பது ‘அலெக்ஸான்டரும் ஒரு கோப்பை தேநீரும்’ நாவலின் முகவுரையில் சுரேஷ் கூறியவை…..


ஒரு விடயத்தைக் கூற மறந்துவிட்டேன்.நாவலின் இன்னொரு முக்கிய பாத்திரமான அலெக்ஸ் கிளிநொச்சியில் பிறந்து சென்னைக்கு குடிப்பெயர்ந்து பின்னர் கனடாவில் வாழ்ந்து எகிப்திய மண்ணில் அலைகின்றவன். இதற்குப் பின்னர் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை நீங்கள் நாவலைப் புரட்டும் வரை….

Sunday, June 13, 2010

தவிர்க்க முடியாத உபதேசங்கள்






‘சுஜாதா’ தமிழ் எழுத்துலகின் பிரபல எழுத்தாளர்.மிகப் பெரிய வாசகர் வட்டத்தைத் தன்னகத்தே கொண்ட அவரின் எழுத்துக்கள் தனித்துவமானவை.நாவல்கள்,சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் என பல தளங்களில் இயங்குகின்ற எழுத்தாளரான இவரின் பன்முகத் திறமையை எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது.தமிழ்த் திரையுலகிலும் இவரது பங்கு அளப்பரியது.



சுஜாதாவின் கட்டுரைகளில் நிறைய ‘விஷயம்’ இருக்கும் அவை நமக்குள் ஆழமான சிந்தனைகளைத் தூண்டிவிடும்.அவை அறிவியல் முன்னேற்றங்கள்,இலக்கியம்,புத்தகங்கள் என எல்லா விடயங்களையும் தொட்டுச்செல்லும்.சுஜாதாவின் கட்டுரைகள் ‘கற்றதும் பெற்றதும்’இ’ஓரிரு எண்ணங்கள்’…’நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்’,’இன்னும் சில சிந்தனைகள்’ ஆகிய தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன.



சுஜாதா நிறைய புத்தங்களை வாசித்து தனது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றார். இங்கு அவரின் கட்டுரை ஒன்றைத் தருகின்றேன்… இது அவரால் மொழிபெயர்க்கபட்ட கட்டுரைஇமூலம் வேறொருவருடையது…
மற்றவரின் அறிவுரைகளைக் காது கொடுத்துக் கேட்கும் மனநிலை அருகிவருகின்ற இக்காலத்தில் தந்தை ஒருவர் தன் தனயனிற்கு எழுதும் கடிதம் இது,வாசித்துத்தான் பாருங்களேன் …



தவிர்க்க முடியாத உபதேசங்கள்
-----------------------------------------------------

அவர்கள் எல்லாம் உன்னை எல்லா மலையும் ஏறச் சொல்வார்கள்,நான் சொல்வது மலை ஏறு , ஆனால் நடைமுறைகளை விட்டுவிடாதே என்பதே.ஐம்பது வருஷமாக சேர்த்து வைத்த ஞானம்,ஒரு பக்கத்தில் சொல்லிவிடுகிறேன்.






உன் துணிகளை நீ துவைத்துக்கொள் சுத்தத்திற்காக மற்றவரை நம்பாதே.இந்த நாட்டைச் செலுத்தும் தலைமுறை வீதிகளில் குப்பை கொட்டி மற்றவர் அவைகளை நீக்கப் பழக்கப்பட்டவர்கள்.உன் குப்பையை நீ சமாளிக்கும்போது உணரும் சுத்தம் ஆச்சரியமளிக்கும்.பிட்ஸா கறைக்கு சோப்புத் தூள் உபயோகிக்கவும்.




அமைப்புக்களை ஸ்தாபனங்களை நம்பு.அரசாங்கம் பல்கலைக்கழகம் குடும்பம் எல்லாமே அமைப்புக்கள்தாம்.அவைகளில் நம்பிக்கையே இல்லை.இப்போது நீயே ஒரு நல்ல அமைப்புத்தான்.அதற்கு நானும் உன் அம்மாவும் உத்தரவாதம்.உறுதியான பாகங்கள் நல்ல உடலில் உள்ள அமைப்பு நீ.ஸ்தாபனங்களை நம்பு.ஆனால் அவைகளை வரிந்துகொள்ளாதே.நகரத்தில் வாழ்வதென்றால் சின்னத்தோட்டமாவது இருக்கும் சிறிய வீடுகள் கொண்ட பகுதியில் வசி.கொஞ்சமாவது நீல வானம் தெரியட்டும்.அப்போதுதான் நம் அளவின் அற்பம் புரியும்.கடற்கரைக்குச் செல்.மலைகளை நாடாதே! மலைகள் பெரிதாக அளவாக இருந்தாலும் நாளடைவில் உன்னை நம்பிக்கையிழக்க வைக்கும்.நீ பெற்றோர்கள் அருகில் வசிக்க முடிந்தால் மிக நல்லது.

வாழ்க்கையில் கொஞ்சமாவது பகல் கனவு வேண்டும்.பகல் கனவுகள் உண்மையின் பகுதிதான்.உன் அப்பா ஒருமுறை வகுப்புக்கு வெளியே சன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தபோது ஆசிரியர் என்ன திரும்ப வந்து மற்றவர்களுடன் சேர உத்தேசமா? இல்லையா? என்று கேட்டார்.அப்போதுமே இல்லை என்றுதான் சொல்ல நினைத்தேன்.நாம் நமக்குத் தெரிவதை கற்பனை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஷெல்லி சொன்னார்.தினத்தில் ஏதாவது ஒரு பகுதியை அழகை ஏதாவது ஒரு வடிவத்தில் ரசிக்க முயற்சி செய்.ஒரு கவிதை வரியையோ ,பாடல் வரியையோ சித்திரத்தின் வரியையோ-வரி என்பதுதான் அழகின் ஆதாரமான அங்கம்.

தினத்தில் மற்றொரு பகுதியை சோம்பேறித்தனமாக செலவிடவும் கற்றுக்கொள்.இக்காலத்து இளைஞர்கள் அதிகமாக கடினமாக இலக்கற்று மற்றவர் நலனுக்காக உழைக்கிறார்கள்.உன் நலனுக்காக கொஞ்சம் சும்மா இருக்கும் நேரங்கள் தேவை.விளையாட்டுக்களில் நாட்டம் நல்லது.உன்னால் எப்போதாவது ஜெயிக்கக்கூடிய விளையாட்டாய் தேர்ந்தெடுப்பது நல்லது.உனக்கு சித்திரம் வரையும் திறமை இருப்பதாக ஆசிரியர் சொல்கிறார்.அதை நீ அலட்சியப்படுத்துகின்றாய்.பிற்காலத்தில் சித்திரக்காரனாகவோ வேறு எந்தத் திறமை பெற்றாலும் நீ கற்றுக்கொள்ள வேண்டிய விமர்சனங்களைப் புறக்கணிப்பதே திறமையில்லாதவர்கள்தாம் விமர்சகராகிறார்கள்.

ஏய்ன்ரேண்டின் நீருற்று நாவலில் ஒரு விமர்சகன் கட்டடக் கலைஞன் கதாநாயகனை,”நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்? இஎன்று சொல்லேன்” எனக் கேட்கிறான்“நான் உன்னைப் பற்றி நினைப்பதே இல்லை” என்கிறான்.இதுதான் விமர்சகர்களுக்கு சரியான பதில்.சண்டை போட வேண்டும் என்றால் இடம் காலம் அறிந்து சண்டையிடவும்.வாழ்க்கையி;ல் விரோதிகள் வேண்டும்.ஒரே கொள்கையைப் பிடித்துக் கொண்டு அலையாதே.அது வெறுப்பை வளர்க்கும்.புகார் சொல்வதைத் தவிர்.புகார் சொல்வதனால் எதுவும் நடக்கப் போவதில்லை.வாழ்வில் எது செய்தாலும் மற்றவர் திறமையைப் பாராட்டும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.அப்போதுதான் உன் திறமையில் நம்பிக்கை வளரும்.

ஒரு சில பின்குறிப்புக்கள்:-
தேர்தல் சமயத்தில் நிச்சயம் வோட்டுப்போடு.நாய் வளர்.ஒரு மனித முகத்தில் அந்த நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பார்க்க முடியாது.’No problem’ ‘இந்தத் தருணத்தில்’ போன்ற சொற்றொடர்களை தவிர்.இறுதியாக அதிகாலை எழுந்து விடு.ஆறு மணி என்பது காலையிலும் உண்டு.5 மணி என்பது அதைவிட உத்தமம்.எழுந்திருந்து சூரியன் மேலே எழத் தடுமாறுவதையும் மெல்ல மெல்ல வானம் முழுவதையும் பார்க்கும்போது அந்த மௌனமான அற்புதத்திற்கு நன்றி சொல்லத் தோன்றும்.







Thursday, May 27, 2010

M.G.சுரேஸ் - பிரமிக்க வைக்கும் எழுத்துக்களிற்குச் சொந்தக்காரர்



நவீன உலகின் மனிதர்கள் புத்தகங்கள் வாசிப்தற்கு நேரம் இல்லை என்கிறார்கள்.தொலைக்காட்சிக்குள் முகம் புதைத்து இணையத்தில் அரட்டையடித்து தமிழ் சினிமாவை பற்றி நிறைய ஆராய்ச்சி எல்லாம் செய்வதற்கு நேரம் இருக்கிறது.ஆனால் புத்தகம் என்று வந்துவிட்டால் ரொம்பத்தான் பயந்துவிடுகின்றார்கள்.












நல்ல புத்தகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் அறிவு வாழ்க்கையின் புதிரான பயணத்தில் வழிகாட்டியாகி நிற்கும்.தமிழ் கதை உலகின் வரிசையில் தரமான நாவல்களின் பட்டியல் அதன் வரலாற்றைப்போன்று மிக நீண்டது.தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள் அவர்களிற்கு சற்றும் குறையாத எமது ,ஈழத்து எழுத்தாளர்களின் பல நாவல்கள் எக்காலத்திலும் பேசப்படுபவையாக உயர்ந்து இடத்தில் இருக்கின்றன.






இவ்வார வலைப்பதிவில் எனக்குப் பிடித்த பிரபல எழுத்தாளர் M.G..சுரேஸ் அவர்களின் நாவல்களைப் பற்றிய எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.






M.G.சுரேஸ் - பிரமிக்க வைக்கும் எழுத்துக்களிற்குச் சொந்தக்காரர்ஆ.பு.சுரேஸ் ஒரு சிறந்த இலக்கியவாதி.பின்நவீனத்துவ இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.இவரால் எழுதப்பட்ட நாவல்கள்



.1. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்(திருப்பூர் தமிழ் சங்க விருது பெற்ற நாவல்)



2. அலெக்ஸான்டரும் ஒரு கோப்பை தேநீரும்



3. தாஜ்மஹாலுக்குள் சில எலும்புக்கூடுகள்



4. கான்க்ரீட் வனம்



5. 37 (a polyphonic novel)



6. உறங்க என்றொரு நகரம்



7. சிலந்தி






இவரது ஒவ்வொரு நாவலும் தனித்தன்மை வாய்ந்தது.’அட்லான்டிஸ் மனிதன்….’ ஒரு உரடிளைவ வகை நாவல்,’அலெக்ஸான்டரும் ஒரு கோப்பை தேநீரும்..’ ஒரு Autofiction வகை நாவல் அதே போன்று ’37..’ ஒரு polyphonic நாவல்.






M.G.சுரேஸ் தனது வாசகனையும் கதையில் பங்குகொள்ள வைக்கின்றார் அது மட்டுமின்றி தனது கதைகளில் சொல்லப்படும் விஷயங்களுக்காக நிறையபே படித்திருக்கின்றார்.அவரது கடின உழைப்பு அவரது கதைகளில் வெளிப்படுகின்றது.






இவரது மூன்று நாவல்களை அடுத்தடுத்து வாசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.நிச்சயமாக நான் பெருமைப்படுகின்றேன்.உலகத் தரமிக்க தமிழ் எழுத்துக்கள் அவரது நாவல்களில் வெளிப்படுகிறது.இவரது கதைகளில் வாழ்கின்ற பாத்திரங்களின் வாழ்க்கை அழகாக சொல்லப்படுகிறது.மிகைப்படுத்தப்படாத யதார்த்தமான எழுத்துக்களை வியப்பூட்டும் பாணியில் எழுதும் இவரின் மொழி நடை அலாதியானது அமைதியான ஓடைபோன்றது.






இவரது எழுத்துக்களைப் போன்று நாவல்களின் தலைப்புக்களும் அழகானவை.முகப்பு அட்டையை ஒரு மிகச்சிறந்த ஓவியம் அலங்கரிக்கும் அவை நாம் எங்கும் பார்த்திராத ஒரு புராதன ஓவியமாகவோ அல்லது பரிசு பெற்ற படமாகவோ இருக்கும்.






ஓரு நாவல் என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இருந்து விடாது, வாசகனின் மனதில் என்றும் அழியாத தடத்தைப் பதித்துச்செல்லும் எழுத்துக்களே காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.சுரேஸின் எழுத்துக்கள் நம் வாழ்க்கையில் நிகழும் அபத்தங்களும் ஆச்சரியங்களையும் அழகாகக் காட்டுகின்றது.

37 ( a polyphonic novel)




37 என்பதுதான் இந்நாவலின் தலைப்பு.பலகுரல் நாவல்(polyphonic) என்ற இவ்வகை நாவல் தமிழிற்கு புதுமையானது எனலாம்.எளிமையான கதை வடிவம் அதே சமயத்தில் சற்றும் சுவாரஷ்யம் குறையாத நடை,கதாபாத்திரங்களின் பார்வையிலே கதையைச் சொல்லும் விதத்தில் இந் நாவல் மிகச்சிறந்த படைப்பாகும்.முக்கியமாக கதையில் வரும் அஃறிணைப் பாத்திரங்கள் கூட கதை சொல்கின்றது.






எமது பால்வழி மண்டலத்துக்கு அடுத்து 1 500 000 ஒளிவருடங்களுக்கு அப்பாலுள்ள பால்வழி மண்டலத்தில் இருக்கும் எமது பூமியை ஒத்த கிரகத்திலிருந்து வந்த ஒரு மனிதன் இங்கே சந்திக்கும் ஒருவனுடன் நிகழ்த்தும் உரையாடலினூடே கதை நகர்கின்றது பின்பு அது பலகுரல் எனும் வேறொரு தளத்தில் பயணிக்கின்றது.






இந்நூலை வெளியிட்ட புதுப்புனல் சொல்லும் முகவுரையில்...‘நவீன அறிவியல் தொடர்பான செய்திகளையும்,பண்டைய வாய் மொழி கதை மரபு பாணியையும் ஒன்றாக இணைத்து இந்த நாவலைப் படைத்திருக்கிறார் ஆ.பு.சுரேஸ்.இந்த நாவலில் இரண்டு கதாபாத்திரங்கள் ஆரம்பித்து வைக்கும் கதையை பல உயர்திணை அஃறிணை கதாபாத்திரங்கள் அதனதன் பார்வையில்(polyphonic novel) தொடர்ந்து சொல்லிக்கொண்டு போகின்றன.எனவே இது ஒரு பலகுரல் (polyphoni) நாவலாக மாறிவிடுகிறது.பிரெஞ்சு பின்நவீனத்துவ இலக்கிய விமரிசகர் ரொலான் பார்த் பூஜ்ய பாகைக் கோள எழுத்துமுறை(zero degree writing)என்ற ஒரு எழுதும் வகையைப் பற்றி தனது கட்டுரை ஒன்றில் பேசுகிறார்.மிகையுணர்ச்சி இல்லாத வாசகனை தற்காலிக மனச்சிதைவு நோய்க்கு(அயமநளாகைவ நேரசழளளை) ஆளாக்காத,எளிமையான கவித்துவமான படிமங்கள் அற்ற விலகிய பார்வையில் கதை சொல்லப்படும் தட்டையான நடையே பூஜ்ய பாகைக் கோண எழுத்து முறை ஆகும்.இந்த நாவல் அத்தகைய பாணியில் எழுதப்பட்டிருக்கிறது எனலாம்.எனவே உள்ளடக்கம்,உருவம் இரண்டிலுமே இந்த நாவல் ஒரு புதுவகையான கதையாடல் என்று கருதலாம்’என்கிறது புதுப்புனல்.






உலகில் நாம் அறியா விடயங்கள் எம் முன்னே விரிந்து கிடக்கின்றது.சுரேஸ் போன்ற எழுத்தாளர்கள் தாம் பயணம் செய்த பாதைகளில் எம்மையும் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும்போது ஏற்படும் பிரமிப்பை வார்த்தைளில் அடக்க முடியாது….

Popular Posts