
ஒரு ஸென் குருவின் ஹைக்கூ:
உதிர்ந்த இலை
கிளைக்குத் திரும்புகிறதோ?
வண்ணத்துப் பூச்சி.
ஸென் கவிஞர் கூறுகிறார்.
“வண்ணத்துப் பூச்சி எனப்படும் இது என்ன? அது தன் ஆதார மூலத்திற்குத் திரும்பவும் ஒரு உதிர்ந்த இலையாகத் தன் உதிர்ந்த இலையாகத் தான் இருக்க வேண்டும்.”இவ்வகைச் சொல்லோவியங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.
உதிர்ந்த இலை
கிளைக்குத் திரும்புகிறதோ?
வண்ணத்துப் பூச்சி.
உதிர்ந்த இலையொன்று வண்ணத்துப்பூச்சியாகப் பரிமாற்றம் அடைந்து மீண்டும் கிளைக்குத் திரும்பி உள்ளது.ஒவ்வொன்றுமே; ஆதார மூலத்திற்குத் திரும்புகின்றது.இதுவே இக்கவிதையின் விளக்கம்.நீ உனக்காக கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளலாம்.ஆனாலும் ஒருவன் ஆதார மூலத்திற்கு திரும்பியே ஆகவேண்டும்.அந்த மூலத்தில்; நீ அண்டத்தோடு அந்தரங்கமாய்க் கலந்து விட்டாய்.ஒருவேளை அண்டத்தைக் காட்டிலும் நீ பிரமாண்டவன்.
மேற்குறித்த ஹைக்கூவிற்கான உரை ஓஷோவினுடையது.நல்ல கவிதைக்கு உரை தேவையில்லைதான்.கவிதை என்பது தானாகவே பேசுவது.எனினும் ஹைக்கூவின் பிறப்பிடமான ஸென் ஞானிகளின் அழகிய கவிதைகளிற்கு ஓஷோவை விடச் சிறப்பாக உரை எழுத ஒருவராலும் இயலாது.
ஓஷோ கூறுகிறார்.
"Haikus are paintings in words. ….They don’t say anything. They simply show somethings… Those words actually represent what they have seen”
எனவே கீழ் வரும் ஹைக்கூக்களை அதன் வழியில் மெதுவாக சென்று பாருங்கள்….
முழு நிலவு:
குளத்தைச் சுற்றி சுற்றி நான்
இரவு போயே விட்டது.
குயிலின் கூவல்-
அதைவிடச் சிறப்பாகச் செய்வதற்கேதுமில்லை
அந்த காட்டுச் செடிக்கும்தான்.
தும்பியொன்று பாறையின் மீது
நண்பகற் கனவுகள்.
ஒரு பனிக்காலச் சூறைக்காற்று
மூங்கில்களுக்கிடையில் மறைந்து
அமைதியில் ஒடுங்குகிறது.
நீயாய்த்தான் விழி மலரவேண்டும்
நிலவொளியில் குளிக்கும்
நீள்வரி-மலர்களை தரிசிக்க.
(நீள்வரி மலர்கள்: மூங்கில் மலர்கள்)
மலையுச்சிக்குச் செல்லும் பாதையை
அறிய விரும்பினால் நீ கேட்க வேண்டும்
அங்கு போய்த் திரும்பி வந்த மனிதனையே.
கணப்பைச் சூழ்ந்து-
நம்மை வரவேற்கும் புன்னகையே
வழியனுப்பவும் செய்கிறது!
பட்டாம்பூச்சிகள் அன்போடு தொடர்கின்றன-
மலர்வளையம்
சாத்தப்பட்டுள்ளது சவப்பெட்டியின் மேல்.
நீரில் அந்நிலவு
உடைகிறது மீண்டும் உடைகிறது
ஆயினும் அது முழுமையாய்.
புழமையான குளம்
தவளையொன்று குதிக்கிறது
மீண்டும் மோனம்.
நதி.
நீண்டதொரு கோடு
பனிவயல்களின் ஊடே.
ஹைக்கூ பூக்கள் மீண்டும் மலரும் அடுத்த வலைப் பூவில்….
4 comments:
நல்லாயிருக்கு.
திருடன்
விட்டுச் சென்றான்
நிலவை.
இதுவும் ஸென் ஹைக்கூதான்.
நன்றி சந்தானகிருஷ்ணன் !
'ஸென்' ஹைக்கூவின் பிறப்பிடம்... அவற்றை ரசிப்பதே ஒரு கவிதை தான்...
//உதிர்ந்த இலை
கிளைக்குத் திரும்புகிறதோ?
வண்ணத்துப் பூச்சி//
சுஜாதா அடிக்கடி இதை மேற்கோள் காட்டுவார்! :-)
சுஜாதாவின் மூலமாகவே நான் ஹைகூவின் அடையாளத்தை விளங்கிக்கொண்டேன் ...
Post a Comment