Thursday, April 17, 2014

பயணம்

பயணித்தல் என்பது வாழ்வின் எந்த நிலையிலும் கிடைத்துக் கொண்டேயிருக்க வேண்டிய அற்புதமான அனுபவங்களிலொன்று. இந்த உலகின் அறியப்படாத பூகோள ஆச்சரியங்களின் எல்லைகள் விஷ்தீரணமானது. அந்த எல்லைகள் நோக்கிய தேடல் ஒரு பயணத்துடன் விரிவடைகிறது.

ஒரு ஊரை நோக்கிய பயணத்தின் முடிவிலும் சுவாரஷ்யமானது அந்த ஊரிற்கான பயணம்.

பயணித்தலுக்கான எனது ஆர்வம் பெருந்தாகமாகி ஒரு பயணத்துக்கான தயார்படுத்தலை என் மனதிடம் முன்வைத்துக் கொண்டேயிருக்கும். எப்போதும் போகாத ஒரு ஊரிற்கு பயணப்படுகிறதில் உள்ள சந்தோஷம் ஒரு புதிய நண்பனை அடைந்து கொள்ளும் சந்தோஷத்தைப் போன்றது. பயணங்கள் தருகிற உற்சாகங்கள், மகிழ்ச்சிகள், சலிப்புகள் ஏமாற்றங்கள் என்பதற்கப்பால் அவை மனதில் பதிந்து வைக்கிற சுவாரஷ்யமான கதைகளிற்காக அந்த அனுபவங்களை எப்போதும் நேசிக்கிறேன். ஒரு நாட்டிற்குள்ளே வௌ;வேறு கலாச்சாரப் பின்னணிகளோடு வாழ்கிற மக்களை அவர்களின் வாழ்வியலை ஒரு வீதியில் பயணிக்கிறபோது மேம்போக்காக பார்த்துக்கொண்டு வேகமாகக் கடக்கிற அனுபவத்தை ரசித்திருக்கிறேன். அது ஒரு ஆழமான  பார்வையல்லாததாயினும், அந்த சில நொடிகளில் கடந்து போகும்போது போகிறபோக்கில் மனதில் சில ஓவியங்களை வரைந்துவிட்டுப் போகின்றன.

சில பஸ் பயணங்களும், ரயில் பயணங்களும் மனதிற்குள் கவிதைகளையோ அல்லது சுவாரஷ்யமான கதைகளையோ எழுதிவிட்டுப்போகின்றன. இவையெல்லாவற்றையும் விட கால்கடுக்க நடந்து கடக்கிற தருண அனுபவங்களுக்கு ஈடாய் வேறொன்றும் இருப்பதில்லை.

தனிமையான பயணங்களில் இசை ஓர் அற்புதமான துணை. இளையராஜாவை அழைத்துப் போகிற பயணங்கள் தருணங்களின் தொகுப்பாக இனிமையான ஞாபகக்குறிப்பொன்றை எழுத வைக்கின்றன. ஐ-பொட்டுடன் பயணம் செய்தல் ஒன்று அந்தப் பயணத்தை ரசிக்க உதவும், இரண்டு பஸ்ஸில் போடுகிற ரணகளப் பாடல்களிலிருந்து தப்பிக்க உதவும்.

ஒருமுறை கண்டிக்கு அப்பால் இருக்கும் சிங்களக் கிராமத்திற்குத் தனியாகப் பயணம் செய்யவேண்டிய நிலமை. முன்பின் போயிராத ஊரிற்குப் பயணப்படுகிறேன். யாழ்ப்பாணத்திலிருந்து பின்னேரம் புறப்பட்ட பேருந்து கண்டியை அடையும்போது இரவாகியிருந்து. அங்கிருந்து அந்தக் கிராமத்திற்குப் போவதற்காக இன்னொரு பஸ்ஸைப் பிடித்து ஏறிப் பயணப்படுகிறேன். நான் இறங்க வேண்டிய இடத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. பக்கத்திலிருப்பவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவரிற்குத் தமிழும் புரியவில்லை, பேசிய ஆங்கிலமும் உதவவில்லை. அந்தச் சகோதர இனத்தவர் சிங்களத்தில் ஏதோ சொல்கிறார், எனக்கு ஒன்றும் புரியவில்லை. பஸ்ஸில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். உதவிக்கு யாரும் இருப்பதாய் தோன்றவில்லை. நடத்துனருக்கும் தமிழ் சுத்தம் என்பது டிக்கெட் எடுக்கும்போதே தெரிந்திருந்தது. என்ன செய்வது? மனது பதட்டமடையத் தொடங்குகிறது.

திடீரென்று ஒருவரின் செல்பேசியில் பாட்டொன்று ஒலிக்கிறது....

'உசிரே போகுது உசிரே போகுது உதட்ட நீ கொஞ்சம் சுளிக்கயில...'

நிம்மதி.

ஒவ்வொரு பயணங்களும் ஒரு கதையைத்தானும் சொல்லிவிட்டே விடைபெறுகின்றன. இரண்டாயிருத்து நான்காம் ஆண்டுகளில் தொழில்நிமித்தமாய் அடிக்கடி கொழும்பு போய்வரும்போது பல சுவாரஷ்யமான

மனிதர்களுடன் பயணிக்கிற சுவராஷ்ய அனுபவங்கள் வாய்த்திருக்கின்றன. ஒருமுறை ஜேர்மனிய கப்பல் கப்டனான ஒரு தமிழர் மானிப்பாயில் இருக்கும் தனது நண்பன் ஒருவரின் மகளின் திருமணத்தில்

கலந்துகொண்டுவிட்டு கொழும்பு திரும்பிக்கொண்டிருக்கிறார். அவருடைய பக்கத்து இருக்கையில் நான் அமர்ந்து பயணிக்கிறேன். அவர் ஒரு கப்பல் கப்டன் என்பது பஸ் புறப்பட்டு இரண்டு
மணித்தியாலங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏனென்றால் அதுவரை நான் அவருடன் பேச்சுக் கொடுக்கவில்லை, அவரும்தான். நான் சுஜாதாவின் ஒரு நாவலில் மூழ்கிப்போயிருக்கும்போது அவர் என் கவனத்தைக் கலைக்கிறார். மேற்கொண்டு சுஜாதாவின் நாவலிலும் சுவராஷ்யமான அவரின் கதையுடன் என் பயணம் கழிகிறது.

ஒரு கப்பல் கப்டனுக்குரிய சிறப்பான தோற்றம். வெண்தாடி, ஆறடி உயரம். அவருடைய பேச்சில் அவருடைய ஆளுமையை வெளிப்படுத்துகிறார்.

இருபதுகளின் தொடக்க வயதுகளில் இருந்த எனக்கு அவருடன் ஒரு எல்லைக்கு மேல் கேள்வி கேட்க முடியவில்லை. இருந்தாலும் என்னுடைய அசட்டுத்தனமான கேள்விகளுக்கெல்லாம் மனிதர் பொறுமையாய் பதிலளித்தார். நான் அவருடைய அனுபவங்களைக் கேட்டறிந்துகொண்டேன். கப்பல் பயணங்களின் சுவாரஷ்யங்கள், அபாயங்கள் எல்லாவற்றையும் கேட்டறிந்து கொண்டேன். மின்னஞ்சல் முகவரிகளைப் பரிமாறிக் கொண்டு விடைபெற்றோம்.

சமீபமாய் ஒரு நீண்ட பயணம். அலுத்துப்போன யாழ்-கொழும்பு பஸ் பயணங்கள் போன்றல்லாது, இந்தமுறை யாழிலிருந்து நுவரெலியாவிற்கான எனது பஸ் பயணம் வித்தியாசமான அனுபவங்களை மனதில் எழுதிவைத்துப் போனது. அங்கு நின்ற நாள் முழுதும் கமராவுடன் பஸ்ஸில் சுற்றுவதும், அழகான இடங்கள் கண்டு இறங்கி நடப்பதும, ஷொட்டுகள் எடுப்பதுமாய் மிகுந்த சுவராஷ்யமாய் பொழுதுகள் கழிந்தன.

அங்கொருநாள் தனியாக அதிகாலைப் பனிக்குளிரில் பஸ் ஏறி படம் எடுக்க கமராவுடன் பயணப்படுகையில், ஒய்யாரமாய் மலையோரத்தில் தூங்கிக் கிடக்கிறாள் கிரிகரி ஏரி. நான் இறங்கி நடக்கிறேன்.






அத்தனை அழகு. வழமையாய் பார்த்த இரவுகளிலும், பகல்களிலுமில்லாத அழகுடன் இந்தக் காலையில் மயக்கும் அழகுடன் அங்கு அந்த ஏரி,

பின்னணியில் பனியில் உறைந்தும் உறையாமலுமாய் மலைகள். மலைகளின் அழகையெல்லாம் தன்மேல் ஓவியமாய் வரைந்துவிட்டு அழகு காட்டுகிறது கிரிகரி. அதன் நிழல்களையெல்லாம் நான்
சிறைப்படுத்திக்கொண்டிருந்தேன்.

ஒருவர் அருகில் நடந்துவந்துகொண்டிருந்தார், அந்த ஊர்வாசி. சுருட்டுப் புகைத்துக்கொண்டிருந்தார். புகையுடன் பனிப்புகாரையும் சேர்ந்து ஊதும்போது அழகாய் இருந்தது. ஒரு போர்ட்ரைட் நடந்து வருகிறதே,

எடடா எடடா என்று மனசு சொல்கிறது, என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருக்க, அவர் என்னைக் கடந்து போய்விடுகிறார். ஆயிரத்தியொராவது ஷொடடும்; நழுவிப்போகிறது.

இந்தத் தயக்கங்களாலேயே லான்ட்ஸ்கேப் ஷொட்டுகளாய் மட்டும் நிறைந்துகிடக்கிறது Suren Photographyபேஜ். மனிதர்களை புகைப்படங்களாக்கும்போது எப்படி? அவர்களை நெருங்கி அனுமதி

கேட்கிறீர்கள்? அல்லது கேட்காமலேயே எடுக்கிறீர்களா? (புகைப்படம் எடுக்கும் நண்பர்களின் ஆலோசனை தேவை.)



'ஏன் அங்கை போறம்?'

எங்கடை வீட்டிலை இனி இருக்ககக்கூடாதெண்டு ஆர்மி எழுப்பிப் போட்டாங்கள்'

1989 ஆம் ஆண்டு எங்களது முதல் இடப்பெயர்வு. காரணம் இந்திய அமைதிப்படை.

எனது முதலாம் ஆண்டில் முதல் நாள் வகுப்பு ஞாபகங்கள், முதல் கிளாஸ் எடுத்த வில்லியம்ஸ் மிஸ். பக்கத்து டெஸ்க் நண்பன் பிரியதர்சன், இதைத் தவிர இன்னும் ஞாபகத்தில் இருப்பது இந்த
முதலாவது இடப்பெயர்வுதான்.

அந்தப் பிஞ்சுக்கால்களுடன் நடந்த பின்னால், பதினெட்டு வயதில் ஏ.எல் படிக்கும்வரை இந்த இடப்பெயர்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருந்தன. இடப்பெயர்வுகளின் வேதனைமிகுந்த கதைகளின் பக்கங்களுடன் ஊர் ஊராய் சுற்றும் ஒருவிதமான நாடோடித்தனமான வாழ்க்கை முறை எனக்குப் பிடித்திருந்தது.

சில பல மாதங்கள், வருடங்கள் என்று சொந்த ஊரிலிருந்து விலகி வேறொரு ஊரில், அந்த ஊர் வாழ்க்கை முறைகளைப் பழகி வாழ்கிற நிர்ப்பந்தம், இயல்பானதொரு வழக்கமாகிப் போனது. இருக்கும் இடங்களிலெல்லாம் நண்பர்கள் சேர்ந்துகொண்டார்கள். ஊரின் இண்டு இடுக்கெல்லாம் நுழைந்து பார்க்கும் சுவாரஷ்யம், எங்களுடன் இடம்பெயர்கிற பாடசாலை வாழ்க்கை, அல்லது அந்த ஊர்ப்பாடசாலை, அங்கு ஒரு நண்பர் கூட்டம், கூட எதிரிகள் கூட்டம் என எல்லாம் கிடைத்தது அந்த நாட்களில்தான்.

தொண்ணூற்றைந்துகளின் பிற்பகுதி. ரகுமான் பாடல்களில் பித்துக்கொள்கிற ஒரு தலைமுறை ரசிகர்கள் உருவான பருவம் அது எங்களுடையதுதான்.

முப்பது வருட காலப் போராட்ட வாழ்க்கை, பயணங்கள் தொடர்ந்து வந்தன. பயணங்களின் தடங்கள் மட்டும் இன்னும் நினைவில் பதிந்துபோய்க் கிடக்கின்றன.

ஹைவே பார்க்கலாம்.

ஆறு மாநிலங்கள், அனில் மெஹ்ராவின் கமரா ஒரு பயணியின் பார்வையில் அள்ளி வருகிற ஒவ்வொரு விதமான லான்ட்ஸ்கேப் அழகுகள், அலியா பட்டின் அந்தத் துடிப்பான நடிப்பு. எல்லாவற்றிற்கும்

ஆன்மாவாய் ரகுமானின் இசை இவையெல்லாம் இந்த சினிமாவில் கிடைக்கிற நல்லவிதமான அனுபவங்கள்.

இறுதியாய் நுழைகிற காஷ்மீரில், அழகு கொஞ்சும் மலைகளின் பின்னணியில், ஓர் குடிசையில் மலர்போலப் பூக்கிறது காதல். அழகு!

பெரிய சைஸ் லொஜிக் ஓட்டைகளுடன் அமைக்கப்பட்ட திரைக்கதைதான் இருந்தும் ஏதோ ஓர் ஈர்ப்பு படத்தில் இருக்கிறது.



ஒரு வாழ்க்கை ஒரு பயணம், பெயர் தெரியா ஊரிற்கு வழி தெரியாது போகிற பயணம்.

ஒரு பயணத்தின் அனுபவத்தைக் கடக்கிறபோது இன்னொருமுறை சிலிர்க்கிறது, ஒவ்வொரு கணமும் புதிய உணர்வின் திக்குகளில் மோதிச் சிதறிப்போகிறது. இந்த வாழ்க்கை என்னிடம் சலிக்காது சொல்லிக்கொண்டிருக்கிறது,

'நீ அடிக்கடி நழுவிப் போகாதே' என்று.

ஓர் உயிர்ப்புள்ள அனுபவத்தை இழக்க வைக்கிற நினைவுகளையெல்லாம் ஒதுக்கிவிட்டுத் திரும்பும்போது, அங்கு வாழ்க்கை இருக்கும்!

ஆம் நிகழ்காலத்தில் பயணப்படு என்பதைத் தவிர பெறுமதியான போதனைகளெதுவும் இந்த உலகில் இல்லை.

வாழ்க்கை ஒரு பயணம்.



No comments:

Popular Posts